தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் திடீரென பேசு பொருளாகி இருக்கிறது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சில விவரங்களைப் பெற்றிருந்தார். இந்த விவரங்களை முன்வைத்து பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க, அதற்கு திமுகவும் காங்கிரஸும் பதில் கூற என மீண்டும் கச்சத்தீவு டிரண்டாகியுள்ளது.
உண்மையில் கச்சத்தீவு விவகாரத்தில் என்னதான் நடந்தது?
இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் சூரிய நாராயண் கூறியவையும் இப்போது பாஜக ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. சூரிய நாராயண், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆய்வுப் புலத்தில் இந்தியாவின் முன்னணி நிபுணர்களுள் ஒருவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெற்கு, தென்கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநராகவும் மூத்த பேராசிரியராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் கே. முரளீதரனுடன் இணைந்து ‘கச்சத்தீவும் இந்திய மீனவரும்’ என்ற நூலை எழுதியுள்ளார், சூரியநாராயண்.
சரி, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வி. சூரியநாராயண் என்ன சொல்லியுள்ளார்?
‘இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை 1974 வரை பெரிதாக கிடையாது. 1974 – 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. அதன் பிறகு, இது உங்கள் பகுதி, இது எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது.
1974 ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இது பெரிய தவறு. அந்த ஒப்பந்தத்தின் 5 மற்றும் 6ஆம் பிரிவுகளின்படி கச்சத்தீவைச் சுற்றிலும் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளை உலர்த்தலாம், புனித அந்தோணியார் கோவிலுக்கு வரலாம் என்று மட்டும் இலங்கை கூறியது. அப்போது எல்லோரும் பருத்தி வலைகளையே பயன்படுத்தினர். அவற்றை உலர்த்த வேண்டியிருந்தது. அதன்பின்னர் நைலான் வலைகள் வந்துவிட்டன. இவற்றை உலர்த்தும் கேள்வியே இல்லை. அதனால் வலைகளை உலர்த்தக் கச்சத் தீவு தேவை என்ற முக்கியத்துவம் போய்விட்டது.
ஆனாலும், 83 வரை நிலைமை மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. தமிழக மீனவர்கள் சாதாரணமாக அங்கே சென்று வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இனப் பிரச்சினை தொடங்கிய பிறகு அங்கிருந்து போராளிகள் இங்கு வருவது, இங்கிருந்து மருந்து, எரிபொருள், ஆயுதம் கடத்தப்படுவது போன்றவை ஆரம்பித்தன. பாக் நீரிணை வழியாகத் தமிழ்ப் போராளிக் குழுக்கள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்த பிறகுதான் இலங்கைக் கடற்படை கச்சத்தீவில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தார்கள். முதல்முறையாக 1983 ஆகஸ்ட் மாதம்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
தமிழக மீனவர்கள் மட்டும்தான் இலங்கைக் கடற்பகுதிக்குச் செல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் இந்திய பகுதிக்கு வந்து மீன் பிடிக்கவே செய்தார்கள். இலங்கையில் மத்தி மீன் மிகப் பிரபலம். அந்த மீன் இந்தியப் பகுதியில் கிடைப்பதால் அதைப் பிடிக்க வருவார்கள். இந்தியர்கள் அந்த வகை மீன்களைப் பெரிதாக விரும்புவதில்லை. இந்த மீனைப் பிடிப்பதற்காக அவர்கள் மினிகாய், அந்தமான் தீவுகள்வரை வருவார்கள். அவர்களில் பலர் இந்தியக் கடலோரக் காவல் படையால் பிடிபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை இந்திய கடற்படையினர் சுடுவதில்லை. சட்டப்படியே நடத்துவார்கள். மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பவர்களைச் சுடுவதைச் சர்வதேசச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை.
83க்குப் பிறகு இலங்கைத் தமிழர் பகுதிகளில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுவிட்டது. இதனால் அங்கு வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதில் மன்னார் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த மீனவர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வரத் தொடங்கினர். இந்திய மீனவர்களுக்காக வேலை பார்க்கத் தொடங்கிய அவர்கள் இலங்கை அருகில் எங்கே மீன் கிடைக்கும் என அடையாளம் காட்டினர்.
2002இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அப்போது இலங்கையில் தமிழர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மீன் பிடித்தலுக்குச் செல்லத் தொடங்கினர். அக்காலகட்டத்தில், ஒரு சமயம் விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்களைக் கைதுசெய்தனர். அவர்களை விடுவிக்க பெரும் தொகையை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டியிருந்தது.
இப்போதும் இந்தத் துப்பாக்கிச் சூடு, கைது எல்லாமே இலங்கைப் பகுதியில்தான் நடக்கின்றன. இலங்கைக் கடற்படை ஒருபோதும் இந்திய பகுதிக்குள் வருவதில்லை.
இந்தப் பிரச்சினையில் கச்சத்தீவு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதற்கு அருகில்தான் நிறைய மீறல்கள் நடக்கின்றன. இந்தியா – வங்கதேச எல்லையில், தீன்பிகா என்றொரு இடம் இருக்கிறது. அதை நீண்டகாலக் குத்தகைக்கு வங்க தேசத்திற்குக் கொடுத்துவிட்டோம். அதேபோல, கச்சத்தீவையும் இந்தியா நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்க வேண்டும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. 1974இல் செய்யப்பட்ட பாக் நீரிணை ஒப்பந்தம். அடுத்ததாக 1976 மன்னார் வளைகுடா ஒப்பந்தம். அப்போது இலங்கை மீனவர்கள் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வேட்ஜ் பேங்க்வரை வந்து மீன் பிடிப்பது வழக்கமாக இருந்தது. பேச்சு வார்த்தைகளின்போது இலங்கை மீனவர்கள் வேட்ஜ் பேங்க் பகுதியில் 1979 வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீன்பிடிக்கலாம் என இந்திய அரசு கூறியது. ஆனால், மீன்பிடிக்கும் படகுகள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆக, உரிமம் அளித்து மீன்பிடிக்கும் வழக்கத்திற்கு முன்னுதாரணம் இருக்கிறது. அதனால், நான் ஒரு ஆலோசனையை முன்வைத்தேன். அதன்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பகுதிக்குள் 5 கடல் மைல் அளவுக்கு மீன்பிடிக்க அனு மதிப்பது. பதிலாக இந்தியாவுக்குச் சொந்தமான பிரத்யேகப் பொருளாதார மண்டலப் பகுதியில் இலங்கை மீனவர்களை அனுமதிக்கலாம். அவர்கள் விரும்பும் மத்தி மீன்கள் அந்தமான் அருகில் கிடைக்கின்றன.
2003இல் இந்தியா – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடந்தது. உரிமம் அளித்து மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்க இலங்கை ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த யோசனை பரிசீலனை அளவிலேயே இருக்கிறது. இதில் தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்தவில்லை. இந்திய அரசும் கவனம் செலுத்தவில்லை.
இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
இலங்கை மீனவர்களும் கடலை நம்பி இருக்கிறார்கள். அவர்களும் பிழைக்க வேண்டும் எனத் தமிழக மீனவர்கள் உணராத வரை எந்த ஒப்பந்தமும் சரிவராது. அவர்களது வாழ்வாதாரத்தை நாம் உறுதிசெய்ய வேண்டும். அடுத்ததாக, பாக் நீரிணையைச் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதக் கூடாது. இதை இருவருக்கும் பொதுவான பகுதியாகக் கருத வேண்டும். இதை நிர்வகிக்கப் பாக் நீரிணை ஆணையம் என்னும் அமைப்பை உருவாக்க வேண்டும். மீன் வள நிபுணர்கள், இந்தியா, இலங்கை நாடுகளின் பிரதி நிதிகள், கடல் சூழலியலாளர்கள் இதில் இடம்பெற வேண்டும். சூழல் பாதிக்காத அளவுக்கு இந்தப் பகுதியில் எவ்வளவு மீன் பிடிப்பது என்பதை இவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். என்னவிதமான படகுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும். இந்தியா – இலங்கைக் கடற்பரப்பில் கூட்டு முயற்சியில் மீன்பிடிக்க வேண்டும்” என்கிறார் வி. சூரியநாராயண்.