நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம் திரைத்துறையைக் கடந்து அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக, குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் திடீர் மாரடைப்புகள், இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் போது டேனியல் பாலாஜியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டேனியல் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்புக்கு கொரோனா தாக்கம் காரணமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டே அன்றே திடீரென ஹார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். அப்போது, கொரோனா தடுப்பூசிக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்பிருக்கிறதா என்ற விவாதம் எழுந்து அடங்கியது. இந்நிலையில், கொரோனாவுக்குப் பின்னர் ஜிம் பயிற்சியின் போது இளைஞர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பதும் அதிகரித்தது. கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் உட்பட பலர் மாரடைப்பால் உயிரிழந்தபோது சமூக ஊடகங்களில் இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்த இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், 48 வயதில் நடிகர் டேனியல் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பும் தொடர்ந்து அவரது மரணமும் கொரோனா, கொரோனா தடுப்பூசி இரண்டுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்புள்ளதா என்ற அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கொரோனாவுக்கும் ஹார்ட் அட்டாக்கும் தொடர்பு
இது தொடர்பாக ‘வாவ் தமிழா‘ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த கார்டியாலஜிஸ்ட் அசோக் குமார், “இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும்போது மாரடைப்பு வரும். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தம் உறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. கோவிட் தடுப்பூசியும் உடலில் ஒரு ‘மினி’ கொரோனாவைத்தான் உருவாக்குகிறது என்பதால் இந்த அச்சத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவோ அல்லது கடினமாகவோ உழைத்தால், அது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதயம் இயல்பை விட மிக வேகமாக துடிக்கலாம். அப்போது ஹார்ட் அட்டாக்குக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான்.
அதேநேரம், இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. வேலை தொடர்பான மன அழுத்தம், உணவுப் பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகைப் பிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாகவும் மாரடைப்பு ஏற்படலாம்” என்றார்.
நடிகர் விவேக் சகோதரியும் மருத்துவருமான விஜயலட்சுமியும் இதனை ஒப்புக்கொண்டார். அதேநேரம், இதுபோன்ற குறைபாடுகள் இருந்தாலும் கொரோனா தடுப்பூசியால் இந்த உலகம் பெற்றுக்கொண்டது அதிகம் என ‘வாவ் தமிழா’ யூ டியுப் சேனலுக்கு பேட்டியளித்த விஜயலட்சுமி தெரிவித்தார்.
அதேநேரம், “உடற்பயிற்சி உட்பட கடின வேலைகள் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது என்பது சமீப வருடங்களில் மட்டுமல்ல முன்பும் இருந்ததுதான். கிராமங்களில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறந்து போயிருக்கிறார்கள். இப்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால், அதுவும் பிரபலங்கள் மரணம் காரணமாக இது அதிகளவில் பேசப்படுகிறது. ஜிம் மரணங்களுக்கு உடல்பருமன், மிக குறுகிய காலத்தில் பலனை எதிர்பார்த்து ஓடுவது, தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன” என்கிறார் டாக்டர் அருணாசலம்.
என்ன செய்ய வேண்டும்?
“மிதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 25 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கெட்ட கொழுப்பு பரிசோதனையை தவறாமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். சிஆர்பி, டி-டைமர் பரிசோதனை, லிபிட் ப்ரோஃபைல் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மாரடைப்பு வருமா, வராதா என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதற்குத் தகுந்த சிகிச்சை, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்,” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் அசோக் குமார்.
இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த டாக்டர் அருணாச்சலம், “உடல் பருமனை குறைக்க வேண்டும்தான். அதற்காக 150 கிலோ எடைகொண்ட ஒருவர் உடனே 80 கிலோவாக குறைக்க வேண்டும் என்று வேகமாக ஓடுவதும் ஆபத்து. உடலில் உள்ள அதிக கொழுப்பு, புரோட்டீன் போன்றவற்றை எல்லாம் கரைக்கும்போது கிட்னி, லிவர் ‘ஓவர் லோட்’ ஆகும்.
எனவே, உடல் ஆரோக்கியம் பேண எந்த ஒரு விஷயத்தையும் அளவாக, மெதுவாக செய்ய வேண்டும். அதுவும் உடற்பயிற்சி என்று சென்றுவிட்டால் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் நடந்து கொள்வது அவசியம். இசிஜி, எக்கோ, டிரட்மில் டெஸ்ட் மூன்று பரிசோதனைகளும் செய்து பார்த்துவிட்டு, ஒரு கைதேர்ந்த இருதய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு ஜிம் பயிற்சிகளை தொடங்குவது நல்லது.
அதன்பின்னர் வருடம் தோறும் இசிஜி, எக்கோ, டிரட் மில் டெஸ்ட் செய்து பார்த்து, இருதய மருத்துவர் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர்கள், பிஸியோதெரபிஸ்ட் நிறைய பேர் வந்துவிட்டார்கள். இவர்களிடமும் ஆலோசனைகள் பெறலாம்.
இன்னொன்று உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியைவிட உணவு பழக்கவழக்கத்தையே அதிகம் நம்ப வேண்டும். அப்புறம் தூக்கம்… குடும்பமாக லேட்டாக படுக்க செல்வது இப்போது அதிகரித்துள்ளது. இதனால் தூக்கமின்மை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்கள் சரியாக தூங்காத ஆண்களுக்கும் ஆறு மாதங்கள் தூங்காத பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வர அந்த ஒரு காரணமே போதும். அந்தளவு தூக்கம் நம் உடலுக்கு மிக அவசியம்.
இரவு 10.30 – 11.00 தூங்க சென்றுவிட வேண்டும். காலையில் 5 – 6 மணி வரைக்கும் தூங்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேர கும்மிருட்டு மட்டும்தான் உடலில் மெலடோமி என்கிற பிக்மெண்டை சுரக்க வைக்கும். 6 – 8 மணிநேர தூக்கம் மிக அவசியம். தினமும் இவ்வளவு நேரம் ஒதுக்க முடியாமல், தூக்க நேர குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்வதுபோல் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நன்றாக தூங்க வேண்டும்” என்கிறார் டாக்டர் அருணாசலம்.