சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பலியாகியுள்ளனர். மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் மிக அருகில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் மெட்ரோ தான் காரணமா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. இதில் ஒன்றான செயின்ட் மேரீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல மதுபான கேளிக்கை விடுதி ஷெக்மெட். இது மணல் குவாரி தொழிலதிபர் கரிகாலனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது உள்ளே சுமார் 20- 22 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விரைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதில் கவனம் செலுத்தினர். இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள். இவர்கள் மூவருமே அங்கே பணியாற்றி வந்தவர்கள். இவர்களில் சைக்ளோன் ராஜ் என்பவர் தமிழர்.. இவுரவ் மேக்ஸ் (24), லாலி (22) என்ற மற்ற இருவர் மணிப்பூரை சேர்ந்தவர்கள. இதில் லாலி திருநங்கை.
விபத்து நடந்த மதுபான விடுதியில் ஐபிஎல் போட்டிக்காக பல்வேறு சலுகைகளுடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஐபிஎல் போட்டியை காண இருக்கைகளை முன்பதிவு செய்து இருந்தனர், போட்டிக்கு முன்னதாக சரியாக மாலை 7.15 மணியளவில் விபத்து நடைபெற்றது. முன்பதிவு செய்திருந்தவர்கள் வந்த பின்னர் இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமா?
விபத்து குறித்து அபிராமிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் கலவியால் போடப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக தெரிவித்தனர். அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் தான் விபத்திற்கான காரணமா என்பது குறித்தும் உடனடியாக கூறமுடியாது என தெரிவித்த காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ், சம்பந்தப்பட்ட மதுபான விடுதி உரிய அங்கீகாரம் பெற்று இயங்கி வருவதாகவும் மதுபான விடுதி உரிமையாளரை அனைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “கட்டிட மேற்கூரை ஏன் விழுந்தது என்பது குறித்து அதற்கான நிபுணர்கள் தான் தெரிவிக்க முடியும். கட்டிடத்தின் இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கவில்லை. அனைவரையும் பாதுகாப்புடன் வெளியேற்றிவிட்டோம். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விபத்து நடந்த இடத்திற்கு 240 அடி தொலைவில் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதி , சுற்றியுள்ள இடங்களில் எந்தவித அதிர்வும் கண்டறியப்படவில்லை. அதேசமயம் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தலைமறைவான பப் உரிமையாளர்
இந்த விபத்து தொடர்பாக கேளிக்கை விடுதி மேலாளர் சதீஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு செய்துள்ளனர். கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்திய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிளப் உரிமையாளர் தலைமுறையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடித்து விசாரிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு வசதிகள் இல்லாத பார்களை மூடுமா அரசு
இந்த விபத்து குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கு எந்தவித ஆய்வுகளுமின்றி தமிழக அரசு அனுமதி வழங்கியதன் விளைவே, மூன்று அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோனதற்கு காரணம். வணிக நோக்கத்தை மட்டுமே மையமாக கொண்டு இதுபோன்ற கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.