தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன், இன்று காலை பாஜகவில் முறைப்படி இணைந்தார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “நான் எடுத்துள்ள முடிவு, கஷ்டமான முடிவு என்று அண்ணாமலை கூறினார். கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்துள்ளேன். கமலாலயத்தில் தான் எனது மூச்சு உணர்வுபூர்வமாக இருந்துகொண்டு இருக்கிறது. இரண்டு ராஜ் பவன், அதன் வசதிகள், பணியாட்கள் என எவ்வளவு இருந்தாலும் ராஜ்பவனை விட்டுவிட்டு மக்கள் பவனமான கமலாலயத்தில் நுழைந்துள்ளேன்.
ஒரு சதவிகிதம்கூட ஆளுநர் பதவியை துறந்துவிட்டேன் என வருந்தவில்லை. அதைவிட தொண்டராக இருப்பதில்தான் மகிழ்ச்சி. கட்சி என்னை எந்தத் தொகுதியில் நிற்கச் சொல்கிறதோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன். பாஜக அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் கட்சியை உங்களால் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க கடுமையாக வளர்ந்திருக்கிறது. இந்த தமிழிசை உங்கள் சகோதரியாக, உங்கள் அக்காவாக வந்துள்ளேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது
அதிமுக – தேமுதிக இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தொகுதிப் பங்கீடு ஏற்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து இன்றுமுதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன. இதில் விஜயகாந்த்தின் சொந்த ஊரான ராமானுஜபுரம் அமைந்துள்ள விருதுநகர் தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவர் இந்த தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்.
ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்’’ என்றார்.