டிஜிட்டல், டால்பி, 3டி என்று சினிமா உலகம் நவீனத்தின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்க, நல்ல கதை இருந்தால் அதெல்லாம் இல்லாமல் கறுப்பு வெள்ளையிலேயே ரசிகர்கள் மனதை வெல்லலாம் என்று நிரூபித்திருக்கும் படம் பிரம்மயுகம். ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான பிரம்மயுகம், இப்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அமானுஷ்யத்தையும், கேரள மாந்திரீகத்தையும் கலந்து பிரம்மயுகம் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். அரண்மனையில் பாடல்களைப் பாடும் பாணர் சமூகத்தைச் சேர்ந்த தேவனும் (அர்ஜுன் அசோகன்), அவரது நண்பரும் (மணிகண்டன்) காட்டுக்குள் செல்லும்போது வழிதவறி விடுகிறார்கள். அப்போது மோகினியால் நண்பர் கொல்லப்பட, தப்பி ஓடும் தேவன், ஒரு பாழடைந்த அரண்மனைக்குள் நுழைந்துவிடுகிறார்.
மாந்திரீகரான கொடுமன் போட்டியும் (மம்முட்டி) அவரது சமையல்காரரும் (சித்தார்த் பரதன்) மட்டும் வாழும் அந்த அரண்மனையில் தேவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். ஆனால் அங்கு தங்கத் தொடங்கிய பிறகு, அந்த அரண்மனையே தேவனுக்கு சிறையாக மாறுகிறது. தேவனை அரண்மனையில் இருந்து வீட்டுக்கு செல்லவிடாமல் தடுக்கும் கொடுமன் போட்டி, அவர் தப்பிச் செல்வதற்காக எடுக்கும் முயற்சிகளை முறியடிக்கிறார். அதைக் கடந்து அந்த அரண்மனையில் இருந்து தேவன் தப்பித்தாரா? உண்மையில் கொடுமன் போட்டியும், அந்த சமையல்காரரும் யார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார் மம்முட்டி. தனது நடை, குரல், எக்காளச் சிரிப்பு என்று கம்பீரமான ஒரு மந்திரவாதியாக ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்திருக்கிறார். அதே நேரத்தில் அர்ஜுன் அசோகனும், சித்தார்த் பரதனும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அதிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துவந்த அர்ஜுன் அசோகன், இப்படத்தில் முற்றிலும் வேறு நடிகராகத் தெரிகிறார். பயம், பதற்றம், கோபம், எழுச்சி என எல்லாவித உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் சாதாரண சமையல்காரராக வரும் சித்தார்த் பரதன், கதை க்ளைமேக்ஸை நோக்கி நகர நகர, விஸ்வரூபம் எடுக்கிறார்.
கொடுமன் போட்டி, சமையல்காரர், தேவன், தேவனின் நண்பர், மோகினி பிசாசு ஆகிய 5 கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து சுவாரஸ்யமாக ஒரு த்ரில்லர் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். ஏற்கெனவே அமானுஷ்யம் நிறைந்த கதையான ‘பூதகாலம்’ படத்தை இயக்கிய அவர், இப்படத்தின் மூலம் அதேபோன்ற கதைகளை இயக்குவதில் தான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என்பதை நிரூபித்துள்ளார்.
கருப்பு வெள்ளை படங்களில் இப்போதும் காட்சிகளை அழகாக கடத்த முடியும் என்பதை தன் சிறப்பான காட்சிப்படுத்தல்களால் நிரூபித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷென்னத் ஜலால். அவரது கேமரா கைவண்ணத்தால் படம் முழுக்க திகில் நிழலாடுகிறது. கருப்பு வெள்ளை படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் முழு படத்தையும் நம்மை ஒன்றி பார்க்க வைக்கிறார். இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர், எடிட்டர் ஷபீக் முகமது அலி, கலை இயக்குநர் ஜோதிஷ் சங்கர் ஆகியோரும் படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்.