No menu items!

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் இருப்பது இதுதான்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் இருப்பது இதுதான்!

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எட்டு தொகுதிகள், 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அளித்திருக்கிறது. இதில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரைத்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் என்ன?

இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் என மூன்று வகைகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நாடாளுமன்றத் தேர்தல் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யவும், சட்டசபைத் தேர்தல் அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்யவும், உள்ளாட்சித் தேர்தல் அந்தந்த மாநிலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்யவும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகை தேர்தலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் அரசுகள் கவிழும் பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டசபைத் தேர்தலும் ஐந்தாண்டுகள் முடிவதற்கு முன்பே நடைபெறுவதும் உண்டு. இதுபோல் உறுப்பினர்கள் கட்சித் தாவி பதவி இழந்தாலும் வேட்பாளர்கள் மறைந்தாலும் அந்தந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடத்தப்படும். இதுதான் இதுவரை இருந்துவரும்

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல்' எனும் முழக்கத்தை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக முன்வைத்து வருகிறது.நடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவுகளைக் குறைக்க முடியும். இரண்டு தேர்தல்களைச் சேர்த்து நடத்துவதன் மூலம் நிர்வாகத் திறனை மேலும் அதிகரிக்க முடியும்” என்று மத்திய பாஜக அரசு விளக்கமளித்திருக்கிறது.

ஆனால், 1951 முதல் 1967ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்றது. என்றாலும், சில மாநிலங்களில் ஆட்சிக் காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் அல்லது கவிழ்ந்ததால் அம்மாநிலங்களில் ஐந்தாண்டுகளுக்குள் தேர்தல் நடைபெற்றது. ஐந்தாண்டு முடியும் முன்பே நடைபெற்ற தேர்தல் என்றாலும் அந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஐந்தாண்டு பதவி காலம் என்பதால், அடுத்த சட்டசபை தேர்தலை அம்மாநிலம் சந்திப்பதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இதுபோல், ஆறு முறை மக்களவையும் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்த இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

இதனால், அதன்பின் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவில்லை. இதனை சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகள், “‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்துகின்றன.

மேலும், “’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அதிபர் ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வருவதுபோல் அமையும். இந்தியா பல மாநிலங்களால் ஆன நாடு. எனவே, மாநிலப் பிரச்னைகளுக்கான முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடையது. `ஒரே நாடு ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது” என மாநிலக் கட்சிகள் தெரிவிக்கின்றன.

ராம்நாத் கோவிந்த் சிறப்புக் குழு அறிக்கை

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முழக்கத்துக்கு எதிர்ப்பும் இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவது சாத்தியமா என்பது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இந்தக் குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15ஆவது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்கள் இடம் இருந்து சுமார் 5000 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

இந்த நிலையில், எட்டு தொகுதிகள், 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று (14-03-24) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்திருக்கிறது.

இதில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த குழு பரிந்துரைத்துள்ளது என்றும் இதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், 2029ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மக்களவை, சட்டசபை தேர்தல் ஆகியவை முடிந்த 100 நாள்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெருவதற்குள் தொங்கு சட்டசபை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கு மட்டும் புதிய தேர்தலை நடத்தலாம்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலைப்பில் திருத்தம் செய்ய தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் முதல் முறையாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும். எடுத்துக்காட்டாக, 2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தத் திட்டமிடப்பட்டால், வருகிற 2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள மேற்குவங்கம், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும்.

பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் கமிஷன் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது’ என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...