நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் இணைந்து இந்தியா முழுக்க கருத்து கணிப்பு நட்த்தியுள்ளது. இதில் தமிழகத்தில் நட்த்திய கருத்துக் கணிப்பில் இங்குள்ள 39 தொகுதிகளையும் திமுக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்ரும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியா கூட்டணிக்கு 54,7 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 27.8 சதவீத வாக்குகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 10.9 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு ரூ.1 லட்சம் – காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தாலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அளித்துள்ள 5 வாக்குறுதிகள்:
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.
இலக்கை அடைய முடியவில்லை – சரத்குமார் வருத்தம்
சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்ததற்கான காரணம் பற்றி சரத்குமார் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.
ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த மக்களவைத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடியின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.
எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.