முகநூல் பதிவுக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்வி செயல்பாட்டாளரும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான சு. உமா மகேசுவரி பள்ளிக் கல்வியில் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக சமூக அக்கறையோடு முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். பள்ளிக் கல்வி தொடர்பான இவரது கட்டுரைகள் பல நூல்களாகவும் வெளியாகியுள்ளது. இந்து தமிழ் திசை, சுவடி, நல்லாசிரியன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், அறம் இணைய இதழ் உள்ளிட்ட பல ஏடுகளில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழ் இந்து, பன்மைவெளி, பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பல வெளியீட்டு நிறுவனங்கள், இவரது நூல்களை வெளியிட்டிருக்கின்றன. சன் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் போன்ற முதன்மைத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூ டியூப் சேனல்களிலும் கல்வி தொடர்பான அக்கறையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வாவ் தமிழா யூ டியூப் சேனலிலும் இவரது பேட்டி வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் உமா மகேஸ்வரி, அரசின் கல்வி நடவடிக்கைகளை திறனாய்வு செய்வதோடு நிற்காமல், அரசுப் பள்ளிகளில் நிறைய பிள்ளைகளை சேர்ப்பதிலும், நலிந்த பிரிவு மாணவ, மாணவியருக்கு தன் குடும்பத்தின் சார்பில் மட்டுமின்றி, பல நலவிரும்பிகளையும் ஒருங்கிணைத்து உதவி செய்து வருகிறார். இதற்காக சில ஏடுகளும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் இவரது கல்விச் செயல்பாட்டைப் பாராட்டி விருதுகளும் வழங்கியிருக்கின்றன.
இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.