நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு சமீபத்தில் அவர்கள் எடுக்க முயற்சிக்கும் ஆயுதம் முகமது ஷமி.
கடந்த ஆண்டில் நடந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தவர் முகமது ஷமி. இந்த தொடரில் ஷமி எடுத்த 24 விக்கெட்கள்தான் இறுதிப் போட்டி வரை இந்தியா முன்னேற முக்கிய காரணமாக இருந்தது. இதனால் இந்திய அளவில் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஷமி ஆடும் மேற்கு வங்கத்தில் உள்ள இளைஞர்கள் முகமது ஷமியை ஒரு ஹீரோவாக பார்க்கிறார்கள்.
முகமது ஷமியின் இந்த இமேஜை தங்களுக்கு சாதகமாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. முகமது ஷமியை பயன்படுத்த பாஜக விரும்புவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவர் இஸ்லாமியர் என்பது. பாஜகவை பொறுத்தவரை அது சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற ஒரு தோற்றம் இருக்கிறது. இஸ்லாமியரான முகமது ஷமியை தங்கள் வேட்பாளாராக நிறுத்தினால் அந்த பிம்பம் உடையும், பாஜக சிறுபான்மை இனத்தவரையும் ஆதரிக்கிறது என மக்கள் நம்புவார்கள் என்பது பாஜக தலைவர்கள் போடும் கணக்கு.
இதனால் கடந்த சில நாட்களாகவே முகமது ஷமியை பாஜக மேலிடத் தலைவர்கள் நெருங்கி வருகிறார்கள். உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்ற பிறகு, அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு ஒரு ஓரமாய் நின்றிருந்த ஷமியை அழைத்து அவரை கட்டித் தழுவினார். இந்த சம்பவத்துக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஷமியை சந்தித்தார். உத்தர பிரதேசத்தில் உள்ள முகமது ஷமியின் கிராமத்தில் கிரிக்கெட் மைதானத்தை கட்டிக் கொடுப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
உலக்க் கோப்பை தொடருக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட முகமது ஷமி, இப்போது ஓய்வில் இருக்கிறார். மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுமாறு வலியுறுத்தி உள்ளனர். இப்போதைக்கு முகமது ஷமி அவர்களுக்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. முகமது ஷமி சம்மதித்தால், மேற்கு வங்கத்தில் உள்ள பசிர்ஹாட் தொகுதியில் அவரை வேட்பாளராக களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று ஷமி யோசித்து வருகிறார்.