கோடீஸ்வரர்கள் கொண்டாடியும் மற்றவர்கள் அதை வேடிக்கைப் பார்த்தும் மூன்று நாள்கள் நடந்த ஆனந்த் அம்பானி திருமண முன்னோட்ட விழா முடிந்துவிட்டது. முடிந்தாலும் அதைப் பற்றிய பேச்சுக்கள் ஓயவில்லை.
மூன்று நாள் விழாவின் மொத்த செலவு….கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்..1250 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சாப்பாடு செலவு மட்டும் 210 கோடி ரூபாயாம்.
விழாவில் பாட்டுப் பாடி நடனமாடி அசத்திய பாப் பாடகிக்கு சம்பளம் 74 கோடி ரூபாய்.
கோடீஸ்வர விருந்தினர்கள் வந்து செல்ல அனைவருக்கும் பிரத்யேக விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது அம்பானி குடும்பம். அதற்காக ஜாம்நகர் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்ல ரோல்ஸ் ராய்ஸ் போன்ற மிக விலையுயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டன.
அம்பானி குடும்பத்தினர் அணிந்த அத்தனை ஆடைகளும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டது. வெர்சே, லூயி விட்டான், தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா என புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் அனைவரும் களத்தில் இருந்தனர்.
பொதுவாய் விழாக்களில் கலந்துக் கொள்ள ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் கோடிகளில் பணம் வாங்குவார்கள். ஆனால் அம்பானி வீட்டு விழாவில் நடனமாட அவர்கள் பணம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை என்று அம்பானி குடும்பத்துக்கு நெருக்கமானவர் கூறியிருக்கிறார்.
கொண்டாட்டங்களின் இறுதி நாளன்று மாப்பிள்ளையின் அம்மா நீதா அம்பானி அணிந்திருந்த வைரம் மற்றும் மரகதம் பதித்த நெக்லஸ்ஸின் விலை 500 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது கொண்டாட்ட செலவின் கீழ் வராது. இது சொத்துக் கணக்கில் சேரும்.
அம்பானி வீட்டில் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்திருக்கின்றன.
முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் 2018 டிசம்பரில் திருமணம் நடந்தது. அப்போது அந்த திருமணத்துக்கு அம்பானி குடும்பத்தினர் செலவழித்தது 828 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
அடுத்து மகன் ஆகாஷ் அம்பானிக்கும் ஷ்லோகா மேத்தாவுக்கு 2019 மார்ச் மாதம் நடந்தது. இவர்களுக்கு திருமண முன்னோட்ட கொண்டாட்டங்கள் ஸ்விட்சர்லாந்தில் நடந்தன. இந்த திருமணத்துக்கு அம்பானி குடும்பத்தினர் 700 கோடி ரூபாய் செலவழித்ததாக தெரிகிறது.
மூன்று பிள்ளைகளின் திருமண கொண்டாட்டங்கள் செலவுகளை கூட்டிப் பார்த்தால் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் வருகிறது.