ரஜினிக்கு சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது. அதில் இலவசமாக திருமணங்கள் அவ்வப்போது நடக்கும்.
இப்போது ரஜினி ஒரு மருத்துவமனை கட்ட திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள்.
சென்னை திருப்போரூர் பதிவாளர் அலுவலகத்திற்கு திடீரென ரஜினி விசிட் அடித்ததும், அந்த அலுவலகமே பரபரப்பானது. ரஜினி வருவது குறித்து பதிவாளருக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மற்றவர்கள் யாரும் ரஜினி வருவார் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் ஓல்ட் மகாபலிபுரம் ரோட் என்றழைக்கப்படும் ஓஎம்ஆர்-ல் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் இந்த இடம் அமைந்திருக்கிறது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இடத்தை ரஜினி வாங்கி இருக்கிறார்.
தனக்கு சொந்தமான இந்த இடத்தில்தான் ரஜினி இப்போது மருத்துவமனை கட்ட இருக்கிறாராம். ரஜினி திருப்போரூர் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தப்பிறகுதான் இந்த விஷயம் வெளியே கசிந்திருக்கிறது.
இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் வெகுவிரைவிலேயே தொடங்க இருக்கிறதாம். இந்த பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பை ரஜினி தனது நண்பர்களிடம் ஒப்படைத்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
உயர் தரத்திலான மருத்துவ கருவிகள் மற்றும் விருப்பத்துடன் சேவையாற்ற முன்வரும் மருத்துவர்கள் என சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கு இந்த மருத்துவமனை சிகிச்சைகளை வழங்கும் என்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அதே நேரம் வசதியுள்ளவர்களும் தங்களுக்கான சிகிச்சைகளை அதற்கான கட்டணங்களுடன் பெற முடியுமாம்.
அடுத்த ஆண்டில் இந்த மருத்துவமனையை திறக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மற்றுமொரு மருத்துவ செய்திருக்கிறார் ரஜினி. ‘லால் சலாம்’ படத்தின் ஷூட்டிங்கின் போது லிவிங்ஸ்டன் மனைவி ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு இருந்ததை, உதவி இயக்குநர்களிடம் கூறியிருக்கிறார். இந்த விஷயம் எப்படியோ ரஜினியின் காதுக்குப் போக, லிவிங்ஸ்டனை அழைத்து, 15 லட்ச ரூபாயை எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த பணத்தை உங்கள் மனைவியின் சிகிச்சை செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். மேலும் தேவையென்றால் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த உதவியை ரஜினி இதுவரையில் வெளியே சொல்லவே இல்லை என்பதுதான் ஹைலைட்.
நஷ்டத்தில் ’புஷ்பா’ அல்லு அர்ஜூன்
‘புஷ்பா’ படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூன். இவரது அப்பா அல்லு அரவிந்த் தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.
இவர்கள் இந்தியாவில் ஒடிடி தளங்களுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து நாமளும் சொந்தமாக ஒரு ஒடிடி தளத்தைத் தொடங்கினால் என்ன என்று நினைத்து அதை செயலிலும் காட்டினார்கள்.
2020-ல் அப்படி உருவானதுதான் ‘ஆஹா’ ஒடிடி. தென்னிந்திய மொழிப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது. 2022-ல் ஆஹா தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் பால கிருஷ்ணாவின் ‘அன் ஸ்டாப்பபுள்’ என்ற நிகழ்ச்சி ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது.
இப்போது இந்த ஒடிடி-யை ஏன் தொடங்கினோம் என்று அல்லு குடும்பம் வருத்தத்தில் இருக்கிறதாம். காரணம் தொடரும் நஷ்டம். ஆஹாவில் சின்ன பட்ஜெட் படங்களும், இரண்டாம் கட்ட நட்சத்திரங்களின் படங்களும் மட்டுமே அதிகம் இடம்பிடித்திருந்தன.
பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் என்று முட்டி மோத, ஆஹாவிற்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இது தவிர ஒடிடி சந்தையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றதால் அதன் சந்தாவும் குறைவாக வாங்கப்பட்டது.
இதனால் ஆஹாவுக்கு பெரிய வரவேற்பும் இல்லாமல் போக, நஷ்டம். அன்றாட செயல்பாடுகளுக்கே கையில் இருந்து பணம் இறக்க வேண்டிய சூழல் உருவாகவே இப்போது ஆஹாவை வேறு யாரிடமாவது விற்றுவிடலாம் என அல்லு குடும்பம் முயற்சித்து வருகிறதாம்.
ஆஹாவை விற்பதற்காக சோனி நெட்வொர்க், சன் நெட்வொர்க் உள்ளிட்ட இதர முன்னணி ஒடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறுகிறார்கள்.