இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த முயற்சியை முன்னெடுத்தவர் தனுஷ்.
தனுஷ் என்பதால் இளையராஜாவுக்கும் மகிழ்ச்சி. இளையராஜாவும் தனுஷூம் இரண்டு முறை சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள்
இந்தப் படம் இளையராஜாவின் பால்ய பருவத்தில் இருந்து இன்று வரையிலான சம்பவங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பதால், திரைக்கதையில் நுணுக்கமான வேலை இருக்கிறது.
இதனால் இளையராஜாவின் பயோபிக்கை இயக்க முதலில் பாலிவுட்டில் இயக்குநராக இருக்கும் தமிழர் பால்கியின் பெயர் அடிப்பட்டது. இவர் இயக்கிய ’சீனி கம்’ படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பாளர். பொதுவாகவே பால்கி படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாதான்.
பால்கி இயக்க தனுஷ் இளையராஜாவாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அந்தப்பட சம்பந்தமாக ஒரு கலந்துரையாடல் நடந்திருக்கிறது. அதில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும். இளையராஜாவின் இசை கிராமங்களில் எப்படி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது என்பதையெல்லாம் திரையில் உணர்வுப்பூர்வமாக காட்ட வேண்டுமென்றால், அந்த இயக்குநர் கிராம பின்னணியுடன் இருந்தால் பலம் என்று முடிவானாதாம்.
இதனால் பால்கிக்குப் பதிலாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
மாரி செல்வராஜ் என்றால் தனுஷ் ஓகே சொன்னதாகவும், இளையராஜாவும் ஒகே என்ற மனநிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் வெகுவிரைவிலேயே இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பைத் தொடங்க தனுஷ் தரப்பில் தயாராக இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின் போது இளையராஜாவின் சுயசரிதைப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.
ஹாலிவுட்டுக்கு போகும் த்ரிஷ்யம்.
மலையாளத்தில் வெளியாகி மிரட்டல் வெற்றியைப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. இதன் வெற்றியைப் பார்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்தார்கள். ரீமேக்குகள் எல்லாமும் அதிரிபுதிரி வெற்றி.
இதனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள். அதுவும் மேலே சொன்ன அதே மாதிரி அட்டகாசமான வெற்றியைப் பெற்றது.
இதனால் இந்தப் பட த்தை இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ‘த்ரிஷ்யம்’ படத்தைத் தயாரித்த அசல் தயாரிப்பாளரான ஆஷீர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து த்ரிஷ்யம் படத்தின் சர்வதேச உரிமைகளை பனோரமா ஸ்டூடியோஸ் வாங்க பேச்சுவார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன.
த்ரிஷயம் படத்தின் சர்வதேச உரிமைகளை வாங்கியப்பிறகு தென் கொரிய மொழியிலும், அடுத்து ஸ்பானிஷ் மொழியிலும் எடுக்க இருக்கிறார்கள்.
ஹாலிவுட் படமாக எடுப்பதற்கு கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ்ஸ் மற்றும் ஜோட் ஃப்லிம்ஸ் உடன் இணைந்து ஆங்கிலத்தில் எடுக்கவும் வேலைகள் நடந்துவருகின்றன.