மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் குஜராத் ஜாம் நகர் கலகலக்கப் போகிறது. உலகக் கோடீஸ்வரர்கள் அங்கே குவியப் போகிறார்கள். மூன்று நாட்கள் உற்சாகமாய் உல்லாசமாய் ஒரு திருமண கொண்டாட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வர முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்கு திருமணம். முகேஷ் அம்பானியுடம் ஒப்பிடும்போது ஏழையாக தெரியும் விரேன் மெர்ச்செண்டின் – 755 கோடி ரூபாய்தான் சொத்து மதிப்பு – மகள் ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் ஆனந்த். ராதிகாவும் ஆனந்தும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அது இப்போது கல்யாணமாய் தொடர்கிறது.
முகேஷ் -நீட்டா தம்பதிக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என்று மூன்று பிள்ளைகள். இவர்களில் ஆகாஷும் இஷாவும் இரட்டையர்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இப்போது ஆனந்துக்கு.
குஜராத் ஜாம் நகரில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிக மிக பிரம்மாண்ட எண்ணெய் நிறுவனங்கள் இருக்கின்றன. மும்பையில் முகேஷ் குடும்பம் வசித்தாலும் ஜாம் நகர் அவர்களது மற்றொரு இருப்பிடம்.
இங்குதான் ஆனந்தின் திருமணக் கொண்டாட்டங்கள் நடக்கப் போகின்றன. திருமணம் ஜூலை 12ஆம் தேதிதான். ஆனால் Pre Wedding Event என்று திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கப் போகிறது. திருமணம் வரை இது போன்ற கொண்டாட்டங்கள் தொடருமாம்.
இந்த மூன்று நாள் ஜாம் நகர் கொண்டாட்டத்துக்கு உலகின் பிசினஸ் பெருந்தலைகள் வருகிறார்கள். மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.
கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்ம ஊரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும் அழைப்பிதழ் வந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஜாம்நகரில் ஒரு பிரச்சினை. அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. ஆனால் அம்பானிக்கு எதுவுமே பிரச்சினை கிடையாது. ஜாம்நகரில் ஃபைவ் ஸ்டார் வசதிகளுடன் ஆயிரம் கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் போல் இருக்கும் இந்த ஹைடெக் கூடாரங்களில்தான் விருந்தினர்கள் தங்கப் போகிறார்கள்.
விருந்தினர்களுக்கு சமைத்துப் போட 21 சமையல் கலை நிபுணர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்களில் 20 பேர் பெண்கள்.
மூன்று நாட்களில் 2500 வகையான உணவுகள் விருந்தினர்களுக்கு பறிமாறப்படும். காலை உணவுக்கு 75 வகையான உணவுகள். மதிய உணவுக்கு 225 வகையான உணவுகள். இரவு உணவுக்கு 275 வகை. நள்ளிரவு உணவுக்கு 75 வகை. இவை மட்டுமல்ல இடைப்பட்ட நேரங்களுக்கும் விதவிதமான உணவுகள் பறிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜப்பான், தாய்லாந்து, மெக்சிகோ என உலகின் பல நாடுகளின் சிறப்பு உணவுகளுடன் இந்தியாவின் ஸ்பெஷல் ஐட்டங்களும் விருந்தினர்களுக்கு சமைக்கப்படும். இந்திய உணவுகளில் உப்புமாவும் இடம் பெற்றிருப்பதுதான் கொஞ்சம் பொருந்தாமல் இருக்கிறது.
மூன்று நாள் விழா விருந்தினர்களுக்கு போரடித்துவிடக் கூடாது என்பதால் விதவிதமான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எந்த விதமான உடையில் வர வேண்டும் என்று உடை குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று நாட்களும் ஜாம் நகர் விமான நிலையம் பரபரப்பாக இயங்கப் போகிறது. விருந்தினர்களுக்கு விமான டிக்கெட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களை விமானநிலையத்திலிருந்து அழைத்துச் சென்று அவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பும் வரை அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஜாம் நகரில் மாப்பிள்ளை ஆனந்த் அம்பானி மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்ட விலங்குகளை பாதுகாக்கும் சிகிச்சையளிக்கும் ஒரு காட்டுப் பகுதியை நிர்மாணித்திருக்கிறார். இங்கே யானைகள், புலிகள், சிறுத்தைகள், முதலைகள் என பலவித விலங்குகள் இருக்கின்றன. வன்தாரா (Vantara) என்றழைக்கப்படும் இந்த இடத்துக்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதுவும் விருந்தினர்கள் நிகழ்ச்சிப் பட்டியலில் இருக்கிறது.
இப்படி இந்த மூன்று நாட்கள் கோடீஸ்வரர்களின் உற்சாக கொண்டாட்டமாக அமையப் போகிறது.
இந்த மூன்று நாட்கள் கொண்டாட்டங்களுக்கு பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. அது குறித்து அம்பானி குடும்பம் கவலைப்படப் போவதுமில்லை.
காரணம் இதுதான்.
116.7 பில்லியன் டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. ஒரு டாலர் 82.8 ரூபாய். கணக்குப் போட்டு பார்த்தால் 96,15,26,32,00,000 கோடி ரூபாய் வருகிறது. எப்படி யோசித்தாலும் எவ்வளவு தொகை என்பதை சொல்ல முடியவில்லை. இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் – ஆனந்த் அம்பானியின் அப்பா முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புதான் இது.