‘காதலிக்க நேரமில்லை’ படம் வெளியாகி கடந்த 24-ம் தேதியுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அதன் வசனகர்த்தாவான சித்ராலயா கோபுவின் மகன் சித்ராலயா ஸ்ரீராம் ‘வாவ் தமிழா’வுக்காக பகிர்ந்துகொள்கிறார்…
மாற்றத்தை விரும்பிய ஸ்ரீதர்:
1963-ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியஸான காதல் கதையை இயக்கிய ஸ்ரீதர், கொஞ்சம் மாறுதலுக்காக அடுத்த படத்தை காமெடி படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர் சித்ராலயா கோபுவிடம் கூறியிருக்கிறார். ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.
சிவக்குமாருக்கு பதில் ரவிச்சந்திரன்:
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ரவிச்சந்திரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சிவக்குமார்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் ஒரு சில காரணங்களுக்காக அவருக்கு பதில் அந்த பாத்திரத்தில் புதுமுக நடிகரான ரவிச்சந்திரன் நடித்தார்.
தாதா மிராஸியின் தாக்கம்:
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஹைலைட்டே பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சிதான். இந்த காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் இயக்குநர் தாதா மிராஸி. ‘புதிய பறவை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய தாதா மிராஸி, கதை சொல்லும்போது தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். அவரை இமிடேட் செய்து ஒரு காட்சி வைத்தால் நன்றாக இருக்குமே என்று சித்ராலயா கோபுவிடம் இயக்குநர் ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் செய்த டிஸ்கஷனுக்கு பிறகு நாகேஷ் கதை சொல்லும் சீன் உருவாகி இருக்கிறது.
நடிக்க மறுத்த சச்சு:
நடிகை சச்சு காமெடி கேரக்டரில் நடித்த முதல் படம் ‘காதலிக்க நேரமில்லை’. முதலில் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க சச்சு தயங்கியிருக்கிறார். பின்னர் இயக்குநர் ஸ்ரீதர், ‘இப்படத்தில் என்னைப் பொறுத்தவரை 3 நாயகர்கள், 3 நாயகிகள். நாகேஷ் – சச்சு கதாபாத்திரங்களையும் நாயகன் நாயகியாகத்தான் பார்க்கிறேன். இப்படத்தில் நாயகன் நாயகியைவிட சச்சு பாத்திரத்துக்குதான் மாடர்னாக ஒரு நடனக் காட்சி இருக்கிறது என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
ஆழியாறு கெஸ்ட் ஹவுஸ்:
காதலிக்க நேரமில்லை படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆழியாறு கெஸ்ட் ஹவுஸில் படமாக்கப் பட்டுள்ளது. இந்த பட்த்தில் நடித்த பலரும் அப்போது அங்கேயே தங்கி இருந்துள்ளனர். இந்த இட்த்தை நேரில் பார்த்து இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி எம்.எஸ்.வியை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீதர். இப்படத்தின் சில பாடல்களை அங்கேயே இருந்து கம்போஸ் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.
ஒரு காட்சியில் நடித்த சங்கர் கணேஷ்:
இந்தப் படத்தில் எம்.எஸ்.வியிடம் உதவியாளராக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் இருவரும் இப்படத்தில் இசையமைப்பாளர்களாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
சீரியஸான பாலையா, நாகேஷ்:
காதலிக்க நேரமில்லை படத்தில் அனைவரையும் சிரிக்கவைத்த பாலையாவும், நாகேஷும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சீரியஸாக இருப்பார்களாம். நாகேஷின் பேச்சு த்த்துவங்கள் நிறைந்ததாக இருக்குமாம். 1964-ம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படம் வெளியான பிறகுதான் நாகேஷின் மார்க்கெட் உச்சத்துக்கு போனது.
வெண்ணிற ஆடை நிர்மலா:
இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக வெண்ணிற ஆடை நிர்மலா முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். சில நாட்கள் அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். ஆனால் பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.