இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில் உயர்ந்தது, ஞானபீடம். ஆம், சாகித்ய அகாடமியைவிட ஞானபீடம் முக்கியமானது. இந்த ஆண்டு ஞானபீடம் விருது குல்சாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த குல்சார்?
உருது கவிஞர், நாவலாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர், குல்சார். சம்புரான் சிங் கல்ரா என்ற இயற்பெயர் கொண்ட குல்சார், சுந்திரத்துக்கு முன்பு, பிரிக்கப்படாத இந்தியாவில் பஞ்சாபின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா கிராமத்தில் பிறந்தவர். குல்சாரின் குடும்பம் 1947இல் நாடு பிரிவினை கலவரங்களில் தப்பிப் பிழைத்து முதலில் அமிர்தசரஸிலும் பின்னர் டெல்லியிலும் வசித்தது. கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு என்ன செல்வம் இருந்துவிடப் போகிறது? இளமையில் வறுமையில் தத்தளித்த குல்சாரை இலக்கியம் கரை சேர்த்தது.
தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட குல்சார், அப்படியே திரைப்படத் துறைக்குள் நுழைந்து, பாடலாசிரியர், உதவி இயக்குநர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், தொலைக்காட்சி இயக்குநர் என பல அவதாரம் எடுத்தார்.
குல்சாரின் பல பாடல்கள் அற்புதமானவை; என்றும் நிலைத்திருக்கக் கூடியவை. ஆர்.டி. பர்மன் இசையில் கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடிய குல்சாரின் பல பாடல்கள் இன்றுவரை கிளாசிக்குகளாக உள்ளன.
தாகூரின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட, டிம்பிள் கபாடியா நடித்த ‘Lekin’ படத்தை குல்சார் இயக்கி, பாடலும் எழுதியிருந்தார். இதில் ‘Yaara Seeli Seeli’ பாடலுக்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பாடிய லதா மங்கேஷ்கரும் தேசிய விருதை வென்றார்.
குல்சார் பாடல்களில் மிகப் பிரபலமான வேறு சில… ‘Naina Thag Lenge…’ ஒரு கிளாசிக். ‘ஜெய் ஹோ’, உலகப் புகழ்பெற்றது. இந்தப் பாடலுக்காகத்தான் ‘ஸ்லம் டாக் மி்ல்லியனர்’ படத்தில் ஏ.ஆர். ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது பெற்றார்.
குல்சாரின் பிரபலமான மற்றொரு பாடல், ‘தேரே பினா ஜியா ஜாயே நா…’ (நீயில்லாமல் என் வாழ்க்கை நகர மாட்டேங்குது….) இப்பாடலை ‘Ghar’ படத்தில் கிஷோர் குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடினார்கள்.
குல்சார் இயக்கிய ‘ஆந்தி – புயல்’ என்ற படம் இந்திரா காந்தி அரசியலுக்காக தனது கணவரைப் பிரிந்த கதையாக பேசப்பட்டது. பிரிந்தவர்கள் பல வருடங்கள் கழித்து சேர்ந்தால் என்ன ஆகும்? தனிப்பட்ட வாழ்க்கை பெரிதாக இருக்குமா அரசியல் பெரிதாக இருக்குமா என்ற கேள்வியை இத்திரைப்படம் முன்வைத்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இப்படத்தின் மீது கோபம் இருந்தது. எனவே, எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும் படம் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தில் படத்தின் மீதான தடை நீக்கப்பட்டது. சஞ்சீவ் குமார், சுசித்ரா சென் நடித்த இந்தப் படத்திலும் குல்சாரின் பல அற்புதமான பாடல்கள் உள்ளன.
தூர்தர்ஷனில் வெளியான உருது மொழி தொலைகாட்சித் தொடரான ‘மிர்சா காலிப்’ உட்பட தொலைக்காட்சி தொடர்களும் இயக்கியுள்ளார். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ‘ஆருஷி’ என்ற அமைப்பையும், கல்விக்காக ‘ஏகலைவா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.
இயக்குநர் பிமல் ராயின் உதவியாளராக குல்சார் பணிபுரிந்தபோது, பிமல் ராயின் ‘பெனாசிர்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மீனா குமாரியைச் சந்தித்தார். மெல்ல மெல்ல அவர்களிடம் நட்பு மலர்ந்து. மீனா குமாரி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, குல்சார் அவரின் வீட்டிற்கு தினமும் வந்து மருந்து கொடுத்துவிட்டு ஆறுதலாகப் பேசிச் செல்வாராம். குல்சாரின் முதல் படமான ‘மேரே ஆப்னே’ படத்தில் மீனா குமாரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மீனா குமாரியின் மரணத்திற்குப் பிறகு குல்சார் ராக்கியை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த, ஒரே மகள், இப்போது பிரபல இயக்குனராக அறியப்படும் மேக்னா குல்சார்.
திரைப்படத் துறையில் மகத்தான வெற்றியும் புகழும் இருந்தபோதிலும், குல்சார் ஒருபோதும் தீவிர இலக்கியத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை. கவிதையிலும் சரி, உரைநடையிலும் சரி, தனித்துவமானவராக வெளிப்பட்டார். குழந்தைகள் இலக்கியத்திலும் தனது கவனத்தைத் திருப்பினார். ‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’, ‘பொட்லி பாபா’ ஆகிய படங்களுக்கு பாடலும் வசனங்களையும் குல்சார் எழுதியுள்ளார்.
குல்சாரின் இலக்கிய பங்களிப்புகளுக்காக அசாம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் நியமிக்கப்பட்டார். இப்போது ஞானபீடம் விருதளித்து கெளரவிக்கப்பட்டுள்ளார்.
குல்சாருக்கு விருதுகள் புதியதல்ல. ஆஸ்கர் (2008), பத்ம பூஷண், தாதா சாகிப் பால்கே (2013), கிராமி, திரைபடத்துக்கான தேசிய விருது (5 முறை), பிலிம்பேர் (21 முறை), தேசிய ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி என பல விருதுகளை வாங்கிவிட்டார். அதில் ஒரு அலங்காரமாக ஞானபீடம் விருதும் சேர்ந்துள்ளது.
குல்சாருடன் இந்து ஆன்மீக குருவாக அறியப்படும் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா (வயது 74) என்பவருக்கும் இந்த ஆண்டு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குல்சாருக்கு ஞானபீட விருது சரி, ஜகத்குருவுக்கு ஏன் இலக்கிய விருது என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கப்படும் ஒரு கேள்வி முக்கியமானது. அந்த கேள்வியை எழுப்பியுள்ளவர், கவிஞர் வைரமுத்து!
இது தொடர்பாக வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது. இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள். ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது. முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள். வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” என்று தெரிவித்துள்ளார்.