No menu items!

திமுக கூட்டணியில் கமலுக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணியில் கமலுக்கு எத்தனை சீட்?

தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் சிறு கட்சிகளுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்த 2 தேர்தல்களிலும் கணிசமான அளவில் வாக்குகளை வாங்கியபோதிலும் மக்கள் நீதி மய்யத்தால் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோலியடைந்தார்.

தொடர் தோல்விகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளிடையே சோர்வு ஏற்பட்டது. ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறினர். இந்த சோர்வைப் போக்க பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும், கமல்ஹாசனும் முடிவு செய்த்தாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் கமல்ஹாசன் நெருக்கமாக தொடங்கினார். ராகுல் காந்தி தமிழகத்தில் நடைப்பயணத்தை தொடங்கியபோது அதில் ஒரு நாள் பங்கேற்ற கமல்ஹாசன், அவருக்கு நெருக்கமானார். மறுபுறம் திமுக தலைவர்களுடனும் நெருக்கமாக பழகத் தொடங்கினார். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பிறகு அவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான நட்பு மேலும் பலப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி நிலைபாட்டை இதுவரை கமல் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து கமல் போட்டியிடுவார் என்ற பேச்சுகள் எழுந்தன.

திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் தங்களுக்கு 3 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோருவதாக கூறப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கவே போதுமான இடம் இல்லை. அப்படி ஒதுக்குவதாக ஒருந்தாலும் ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாத நிலை இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் கூட்டணிக்கு கமல் வருவதாக இருந்தால், அவருக்காக ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், “தக் லைப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை இரண்டு நாட்களில் சொல்கிறேன்” என்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 21-ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய முடிவை கமல்ஹாசன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக கூட்டணியில் கமலுக்கு ஒரு சீட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அது கோவை மாவட்டத்திலா அல்லது சென்னையிலா என்பது இன்னும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...