ஓடிடி மற்றும் மல்டி பிளெக்ஸ் கலாச்சாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாரம்பரியமிக்க பல தியேட்டர்கள் சென்னையில் மூடப்பட்டு வருகின்றன. சாந்தி, ஆனந்த், அபிராமி, அகஸ்தியா என பல தியேட்டர்கள் கடந்த காலங்களில் இப்படி மூடுவிழா கண்டுள்ளன. இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறது உதயம் தியேட்டர்.
அசோக் நகரில் இருக்கும் இந்த திரையரங்கின் மொத்த நிலப்பரப்பு 1.31 ஏக்கர். இதில் 40 ஆயிரம் சதுரடியில் அமைந்த தியேட்டர் காம்பிளக்சில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரையரங்குகள் கடந்த 1983-ம் ஆண்டுமுதல் இயங்கி வந்தன. 6 சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த தியேட்டரை அப்போது கட்டினர்.
2009-ம் ஆண்டில் சகோதரர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே யார் தியேட்டரை வைத்துக்கொள்வது என்ற சர்ச்சை வந்தது. அப்போது குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ளேயே ஒரு ஏலம் நடத்தப்பட்டது. இதில் பரமசிவம் பிள்ளை என்ற ஒரு சகோதரர், 80 கோடி ரூபாய்க்கு உதயம் தியேட்டரை வாங்கினார். அந்த பணம் 53 பங்குகளாக பிரிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக இயங்கிய உதயம் தியேட்டர், பின்னர் ஓடிடி மற்றும் மல்டி பிளெக்ஸ் தியேட்டர்களின் வருகையால் கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டமடைய தொடங்கியது. இந்த சூழலில் உதயம் தியேட்டர் வளாகத்தை சென்னையின் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்ட் வாங்கியுள்ளது.
உதயம் தியேட்டர் இருக்கும் இடத்தில் 25 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பை கட்ட காசா கிராண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போதைய சந்தை மதிப்புபடி அங்கு சாதாரண குடியிருப்பை கட்டி விற்றால் சதுரடிக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும், டீலக்ஸ் பிளாட்களை கட்டி விற்றால் சதுரடிக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்க முடியும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.
உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சினிமா ரசிகர்கள் பலரும் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார்கள். உதயம் தியேட்டர் முன்பு நின்று செல்ஃபி எடுக்கவும் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
உதயம் தியேட்டர் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி வெளியிட்டுள்ள கண்ணீர் கவிதை: