அரசியலில் முழுநேர இறங்க இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு என்று விஜய் அறிவித்து இருக்கிறார். இதனால் இவரது கடைசிப் படத்தை தயாரிக்கவும், இயக்கவும் கடும் போட்டி. இதில் தயாரிப்பாளராக விஜயின் கால்ஷீட்டை வாங்கியிருப்பவர் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி. தனய்யா.
விஜயின் கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென தனய்யா ஆரம்பம் முதலே முயற்சி செய்திருக்கிறார்.
ஆனாலும் போட்டியில் முந்தவேண்டுமென்பதற்காக எதற்கு தயாராக இருந்த தனய்யாவுக்கு, விஜய் தரப்பில் இருந்து சம்பளம் 200 கோடி என்று சொல்லப்பட்டதாம். எப்படியும் இந்த டீல் வொர்க் அவுட் ஆகிவிடும் என விஜய் தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது. அதைப் போலவே தனய்யாவும் 200 கோடி அதிகம்தான். இருந்தாலும் ஓகே என்று சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனால் உடனடியாக தனது கால்ஷீட்டை தனய்யாவுக்குக் கொடுத்துவிட்டார் விஜய்.
இதன் மூலம் விஜயின் சம்பளம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
’வாரிசு’ படத்திற்காக அப்பட தயாரிப்பாளர் விஜய்க்கு 120 கோடி சம்பளம் கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் கோட் படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவன விஜய்க்கு சம்பளமாக 150 கோடி கொடுத்திருக்கிறதாம்.
200 கோடி சம்பளம் என விஜய் வேகமெடுத்து இருப்பதால், இப்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் யாருக்கு என்ற போட்டி ரஜினிக்கும், விஜய்க்கும் இடையில் கடுமையாகி இருக்கிறது.
கலவரமான ரஜினி மார்க்கெட் நிலவரம்
ரஜினி சிறப்புத்தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் அடுத்தடுத்து எடுக்கும் படங்களில் ரஜினியின் கால்ஷீட்டை தக்க வைப்பதற்காகவே தயாரித்தது. ரஜினிக்கும் 40 கோடி சம்பளம் கொடுத்தது என்கிறார்கள்.
ஆனால் லைகா ப்ரொடக்ஷன்ஸ் எதிர்பார்க்காத வகையில் லால் சலாம் வசூலில் சறுக்கியிருக்கிறதாம்.
இங்கே இப்படி என்றால் ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் வசூல் நிலவரம் இன்னும் பரிதாபமாக இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் ‘ஜெயிலர்’ தெலுங்கு பேசும் இந்த மாநிலங்களில் 30 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒரு வகையில் இந்த வசூல் சொல்லிக்கொள்ளுமளவிற்கு நல்ல வசூல். இதை நம்பி லால் சலாமையும் இங்கே களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால் படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற தவறிவிட்டதாம். அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகாதது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.
பிரபல தெலுங்கு விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து வசூல் ஒரு கோடியைத்தான் தொட்டிருக்கிறது. இது விநியோகஸ்தர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.