குஜராத்தில் இப்போது பத்திரிகைகளுக்கு பிரதான தீனியாக கிரிக்கெட் வீர்ர் ஜடேஜா இருக்கிறார். ஜடேஜாவின் அப்பா அனிருத் சிங் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டிதான் இதற்கு காரணம்.
குஜராத்தின் முன்னணி செய்தித் தாளான திவ்யா பாஸ்கருக்கு (Divya Bhaskar) ரவீந்திர ஜடேஜாவின் அப்பா அனிருத் சிங் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “என் மகன் ஜடேஜாவுக்கும், ரிவாபாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள்தான்.
திருமணமான 3 மாதங்களிலேயே சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றித் தரவேண்டும் என்று ஜடேஜாவின் மனைவி என்னிடம் கூறினாள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் எங்களுடன் ரிவாபா தொடர்ந்து பிரச்சினை செய்தார். ஒரு கட்டத்தில் எங்களுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே பிரிவையும் அவர் ஏற்படுத்தி விட்டார். நான் மட்டுமல்ல எங்கள் குடும்பத்தில் உள்ள 50 உறுப்பினர்களைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். இதனால் இப்போது எங்களுக்குள் பாசத்தைவிட வெறுப்புதான் முக்கியமாக இருக்கிறது.
எல்லா பிரச்சினைகளுக்கும் எங்கள் மருமகள்தான் காரணமாக இருக்கிறார். சில நேரங்களில் அவன் ஒரு கிரிக்கெட் வீரனாக இல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருந்தால், இந்த திருமணம் நடந்திருக்காது. ரிவாபா எங்கள் மருமகளாகி இருக்க மாட்டார். அப்படி நடந்திருந்தால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்படாமல் போயிருக்குமோ என்று தோன்றுகிறது. ஜடேஜா சாதாரண மனிதனாக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தால் அவன் எங்களுடேயே இருந்திருப்பானோ என்ற ஏக்கமும் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அனிருத் சிங்.
அனிருத் சிங்கால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிவாபா, ரவீந்திர ஜடேஜாவின் மனைவி மட்டுமல்ல. குஜராத் மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும்கூட. வடக்கு ஜாம்நகர் தொகுதியில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதனால் இந்த பேட்டி வெளியானதும் ஜடேஜாவின் மனைவியைக் குறிவைத்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அப்பாவின் பேட்டியால் மனைவிக்கு எதிராக சர்ச்சைகள் முளைத்துள்ள நிலையில், அவருக்கு துணையாக கலத்தில் குதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. “என் அப்பா சொன்னது எல்லாமே பொய். Let’s ignore what’s said in scripted interviews” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜடேஜா பதிவிட்டுள்ளார்.