கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநரான ஷர்மிளா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இம்முறை மிரட்டல், பெண்ணை அவமதித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷர்மிளா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையின் முதல் பெண் ஓட்டுநர் என்ற வகையில் கடந்த வருடம் புகழ்பெற்றவர் ஷர்மிளா. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா, ஃபார்மஸி படிப்பை முடித்தவர். பின்னர் ஓட்டுநர் வேலை மீது உள்ள மோகத்தால் ஓட்டுநர் பயிற்சி பெற்றார். ஓட்டுநர் உரிமம் வாங்கிய பிறகு, ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், காந்திபுரம் – சோமனூர் வழித்தடத்தில் பேருந்தை ஓட்டினார்.
ஒரு பெண் பேருந்தை ஓட்டுவது அப்பகுதி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்த, முதலில் கோவை அளவிலும், பின்னர் தமிழகம் முழுவதும் அவரது புகழ் பரவியது. அரசியல்வாதி உள்ளிட்ட விஐபிக்கள் பலரும் அவரது பேருந்தில் ஏறி ஒரு ரவுண்ட் வருவதை வழக்கமாக செய்து வந்தனர். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வர, ஷர்மிளாவின் புகழ் மேலும் பரவியது.
இந்த சூழலில் ஒரு நாள் திமுக எம்.பி. கனிமொழி அவரது பேருந்தில் ஏறினார். அப்போது பேருந்தின் நடத்துநர் கனிமொழியிடம் தவறாக பேசியதாக ஷர்மிளா புகார் கூறினார். இதனால் ஏற்பட்ட விவாதத்தை தொடர்ந்து ஷர்மிளாவை ஓட்டுநர் வேலையில் இருந்து தனியார் நிறுவனம் நீக்கியது. அப்போது இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஷர்மிளாவை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அவர் கார் வாங்க உதவினார்.
அந்த காரால்தான் இப்போது புதிய சர்ச்சையில் ஷர்மிளா சிக்கியுள்ளார். கோவை மேட்டூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டதாக ஷர்மிளா சமீபத்தில் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஷர்மிளாவுக்கு எதிராக ராஜேஸ்வரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், “நான் காந்திபுரம் டெக்ஸ்டூல் பாலத்தில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனது காரை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்தார். இதனால் காரை அங்கிருந்து எடுக்கும்படி கூறினேன். ஆனால் அவர் காரை எடுக்காமல் என்னை வீடியோ எடுத்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து, அவர் காரை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நான் வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசியதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் நான் அவரை திட்டவில்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், போலியான செய்தியை பரப்பி வீடியோ வெளியிட்ட ஷர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராஜேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.