இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது இந்திய அணி. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி பெற்ற 4-வது தோல்வி இது. அந்த அளவுக்கு தொடர் வெற்றிகளை சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் சாம்பியான்ஷிப்புக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி இப்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மைதானங்களில் ராஜாவாக கருதப்படும் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் சறுக்கியதற்கு என்ன காரணம்?
அனுபவம் இல்லாத வீர்ர்கள்:
சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆட அனுபவம் மிகவும் முக்கியம். குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு அந்த அனுபவம் அதிகம் தேவைப்படுகிறது. ஒருநாள் போட்டியிலோ அல்லது டி20 ஆட்டத்திலோ, எந்த பேட்ஸ்மேனாலும் ரன்களைக் குவிக்க முடியும். ஆனால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஒவ்வொரு நாளும் மாறும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்ற வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான முதல் 3 நாட்களில் ஒரு ஸ்டைலிலும், பந்துவீச்சுக்கு சாதகமான அடுத்த 2 நாட்கள் வேறொரு ஸ்டைலிலும் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அது எல்லோராலும் முடியாது.
குறுகிய ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் பெரிய அளவில் சாதித்த யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற வீர்ர்களால் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. ரோஹித் சர்மாவே பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகுதான் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தொடங்கினார். அதற்கு தனி அனுபவம் வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ரஹானே, புஜாரா போன்ற டெஸ்ட் போட்டிக்கான அனுபவம் பெற்ற வீர்ர்கள் ஒதுக்கி வைக்கப்பட, விராட் கோலி தானாகவே விலகினார். அதனால் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா மட்டுமே அனுபவம் பெற்றவராக இருந்தார். இது இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அனுபவம் இல்லாத வீர்ர்களால் ஆட முடியவில்லை.
ரஞ்சி போட்டி மீது ஆர்வம் காட்டாத வீர்ர்கள்:
முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளுக்கான வீர்ர்கள் ரஞ்சி போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களும் இந்திய அணியில் இடம்பெறுவதற்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடினார்கள். அப்படி ஆடுபவர்களுக்கு கடைசி 2 நாட்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், எப்படி நிதானமாக ஆடுவது என்பது தெரியும்.
ஆனால் இப்போது உருவாகும் கிரிக்கெட் வீர்ர்கள் டி20 போட்டிகளின் மீது மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடுபவர்களைவிட ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடுபவர்களுக்கு அணியில் இடம் கிடைப்பதால் அவர்களும் வெள்ளை நிற பந்துகளில் ஆட ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் சிவப்பு நிற பந்துகளை வைத்து ஆடும் ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை ஆட்டங்கள் பொலிவிழக்கின்றன. ஐபிஎல்லை வைத்து தேர்வாகும் வீர்ர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக ஆடத் தெரிவதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலேயே சிக்சருக்கோ அல்லது பவுண்டரிக்கோ பந்தை பறக்கவிட நினைத்து ஷாட் அடித்து ஆட்டம் இழந்தவர்கள்தான் அதிகம்.
மாறும் பந்துவீச்சு முறை
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முன்பு இந்திய துணைக் கண்டம் ஸ்பின்னர் பூமி என்று அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன், கும்ப்ளே, ஹர்பஜன் சிங் என திறமைவாய்ந்த பல சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு உருவானார்கள். அதே நேரத்தில் கபில்தேவைப் போன்ற திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள். அதனால் இந்தியாவில் சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டன. இந்திய அணி உள்ளூரில் வெற்றிகளை குவித்தது. ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு ஆடுகளங்களில் அதிகம் தோற்றது.
அதற்கு நேர்மாறாக இப்போது பும்ரா, சிராஜ், ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா என தகுதியான பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு மைதானங்களில் வெல்லும் இந்தியா, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான உள்ளூர் ஆடுகளங்களில் திணறுகிறது.
சுப்மான் கில்லின் மோசமான பேட்டிங்
கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் மிக முக்கிய வீர்ராக இருந்தவர் சுப்மான் கில். அதனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கை நம்பி இந்திய அணி இருந்தது. அதிலும் விராட் கோலி இல்லாத நிலையில், இந்திய அணி கில்லின் பேட்டிங்கை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் அதிகம் நம்பி இருந்தது. ஆனால் அவரோ முதல் இன்னிங்ஸ்லில் 23 ரன்களை மட்டுமே எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் ஒரு ரன்கூட எடுக்காமல் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தார் இது இந்தியாவை கடுமையாக பாதித்தது.