ரசிகர்களின் மன உளைச்சலையும், வேதனைகளையும், சோதனைகளையும் தனது இசையால் கடந்து வர செய்தவர் இசைஞானி. இவரது மெல்லிசைகளையும், மென்மையான மேற்கத்திய இசையாலும் வலிகளை மறந்து வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் ஏராளம்.
’என் இசையால் உங்கள் கவலைகளை நீங்கள் மறக்கிறீர்கள். இது கடவுள் கொடுத்த வரம்’ இப்படிதான் இலங்கையில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்காகவும், பவதாரிணியின் உடல்நல சிகிச்சைக்காகவும் சென்றிருந்த இளையராஜா கூறினார்.
இளையராஜாவின் இந்த வரத்தை உயிர்ப்போடு வைத்திருந்தவர் அவரது மகள் பவதாரிணி.
ரிக்கார்டிங் என்றால் இளையராஜா சிங்கத்தைப் போல கர்ஜிப்பார். இதனால் அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தில் எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அந்த இடத்தில் பவதாரிணி இருந்தார் என்றால், இளகிய ராஜாவாகவே மாறிவிடுவார். பவதாரிணி கிண்டலடிப்பார். உற்சாகமாக இருப்பார்.
அந்த பவதாரிணி இன்று இல்லை. உடலை மண்ணுக்குக் கொடுத்துவிட்டு, விண்ணுக்குச் சென்றுவிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பவதாரிணிக்கு புற்றுநோய். அதுவும் முற்றிய நிலையில் இருக்கிறது என்பதே எங்களுக்குத் தெரிய வந்தது என குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
கோவிட் தொற்றுக்கு முன்பாகவே பவதாரிணிக்கு திடீரென தாங்கமுடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. வலியைப் பொறுக்கமுடியாமல், மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் பவதாரிணி. அங்கே அவரை மருத்துவர்கள் பரிசோதித்து இருக்கிறார்கள். முதலில் மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மருந்துகள் எதுவும் கைக்கொடுக்கவில்லை.
இதனால் பவதாரிணியிடம் சிடி ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி. இசையமைப்பாளரின் மகள் வயிற்றுப் பகுதியில் சிறிய கட்டி ஒன்று இருந்திருக்கிறது. இந்தக்கட்டி பின்னாளில் பிரச்சினையாக மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் அதை இப்பொழுதே அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
வயிற்று வலி என்று போனால் இவர்கள் வேறு ஏதோ சொல்கிறார்களே என்று பதட்டமடைந்து இருக்கிறார் பவதாரிணி. அப்பாவிடம் இருப்பது மதிப்பு கலந்த மரியாதை. அதனால் பவதாரிணி தன்னுடைய பர்ஸனல் விஷயங்களை அப்பாவுடன் பகிர்ந்து கொள்வதில்லை. நெருக்கமாக இருந்த அம்மாவும் இல்லை. இதனால் இந்தப் பிரச்சினையை தனது மனதிற்குள்ளேயே வைத்து கொண்டு, அதுபற்றி தனது அப்பாவிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ ஒன்றும் சொல்லாமல் மறைத்துவிட்டாராம்.
நாள் ஆக ஆக வயிற்று வலி பிரச்சினை கொடுப்பது அதிகமாகி இருக்கிறது. இதற்குப் பிறகே சமீபத்தில் மருத்துவமனைக்கு மீண்டும் சென்றிருக்கிறார் பவதாரிணி. இந்த முறை அது புற்றுநோய். முற்றிய நிலை. நான்காவது ஸ்டேஜ். பவதாரிணியை இனி காப்பாற்ற முடியாது. அவர் எவ்வளவு நாட்கள் இருப்பார் என்பதை வேண்டுமானால் தீர்மானிக்க முடியும் என்று மருத்துவர்கள் குழு கையை விரித்துவிட்டது.
இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
வழக்கம் போல் யுவன் முன்வந்து இருக்கிறார். பவதாரிணியை இலங்கைக்கு அழைத்து செல்ல உதவியதும் அவர்தான்.
ஆனால் பவதாரிணி இன்னும் சில நாட்கள்தான் இருப்பார் என்பதை தெரிந்ததுமே அவர்களது வீட்டில் ஒரு இறுக்கமான சூழல் நிலவியதாக கூறுகிறார்கள்.
தங்கைக்கு குழந்தை இல்லை. இனி அவரும் இல்லையென்றால் என்ன செய்வது, சொத்தைப் பிரித்துவிடலாம் என்று கார்த்திக் ராஜா இளையராஜாவிடம் கூறியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
எனக்கு இதெல்லாம் வேண்டுமென கார்த்திக் ராஜா பட்டியல் போட்டுவிட, இளையராஜாவுக்கு பெரும் அதிர்ச்சி. எப்போதும் தன் கூடவே இருக்கும் மகனா இப்படி என்று எதுவும் பேச முடியாத சூழலுக்கு போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
மூத்த மகன் சொத்து விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடியாக இருப்பது இசையமைப்பாளருக்கு பிடிக்கவில்லை என்பதை விட, தன்னுடைய இசை வாரிசாக நினைத்தவனா இப்படி கேட்பது என்று மனம் உடைந்துப் போய்விட்டதாக கூறுகிறார்கள்.
இப்படியொரு சூழலில்தான் பவதாரிணி இந்த உலகை விட்டு கிளம்பி தான் இருந்த இடத்துக்கே சென்றுவிட்டார்.
தனது இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்டிருக்கும் இளையராஜாவுக்கு அவரது வீட்டில் கிளம்பியிருக்கும் சொத்து பிரச்சினை நாளுக்கு நாள் பெரும் விவாதமாகிக் கொண்டே போவது நொந்துப் போக செய்திருக்கிறதாம். சொத்துப் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால் இசையமைப்பாளர் இப்போது யாருடனும் சரிவர பேசுவதுகூட இல்லையாம்.