“ஜெய் ஸ்ரீராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“என்ன ராமர் கோயில் ஜுரம் உன்னையும் பிடிச்சுடுச்சா? பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அயோத்திக்கு போயிருந்தியா?”
“அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மாதிரி பெரிய பாஜக தலைவர்களே அயோத்திக்கு போகல. அப்புறம் நான் எம்மாத்திரம்?”
“அவங்க மட்டுமா போகல, அழைப்பு வந்தும் தோனி, விராத் கோலிலாம் கூட போகலையே.”
“ சரி, ரஜினிகாந்த், அமிதாப்னு பாஜகல இல்லாதவங்களே அயோத்தி போனாங்களே… அமித் ஷாவும், நிர்மலா சீதாரமனும் ஏன் போகல?”
“முக்கிய அமைச்சர்கள் எல்லாரும், அவங்கவங்க ஊர்ல இருந்து மக்களோட இந்த நிகழ்ச்சியை பார்க்கணும். இதன் மூலமா மக்கள் மத்தியில ஒரு எழுச்சியை ஏற்படுத்தணும்கிறது கட்சியோட நிலைப்பாடாம் அதுதான் அவங்க யாரும் போகலை. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்ல நிர்மலா சீதாராமனும், கோபாலபுரம் கோயில்ல அண்ணாமலையும் மக்களோட சேர்ந்து பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை பார்த்திருக்காங்க.”
“இவங்க மக்களோட இருந்து நிகழ்ச்சியைப் பார்த்ததால மக்கள் மத்தியில எழுச்சி வந்ததா?”
“மக்களே வரலை அப்புறம் எழுச்சி எங்க இருந்து வர்றது? என்று சிரித்த ரகசியா தொடர்ந்தாள்.
”கோபாலபுரம் வேணுகோபால்சாமி கோயில்ல அண்ணாமலையோடு சேர்த்து 50-க்கும் குறைவானவங்கதான் ராமர் கோயில் நிகழ்ச்சியைப் பார்த்திருக்காங்க. இங்கதான் இப்படின்னா காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகிட்ட நிகழ்ச்சியில 200 பேருக்கும் குறைவாத்தான் கூட்டம் இருந்த்தாம். இதனால நிர்மலா சீதாராமன் ரொம்ப அப்செட்ல இருக்காங்க.”
“தமிழ்நாட்டு மக்களுக்கு வேற முக்கிய வேலைகள் இருந்துருக்கும்”
”விஷயத்தை கேளுங்க… இதனால தன்னோட நிகழ்ச்சிக்கு வேணும்னே குறைஞ்ச அளவு கூட்டத்தை அண்ணாமலை அனுப்பினதா தேசிய தலைமைக்கு புகார் அனுப்பி இருக்காங்க.”
“அண்ணாமலையால அவருக்கே கூட்டத்தை கூட்ட முடியல. இந்த நிலையில அவர் எங்க இருந்து நிர்மலா சீதாராமனுக்கு கூட்டத்தை அனுப்பி வைக்க முடியும்.?”
“கரெக்ட். உள்ளூர் பாஜககாரங்களுக்கு இது தெரியும்”
”சரி, சென்னையில திமுக கவுன்சிலர் ஒருத்தரும் ராமர் கோயில் திறப்பு விழவை பிரமாண்டமா கொண்டாட ஏற்பாடு செஞ்சிருக்காரே.”
”ஆமா, சென்னை சவுகார்பேட்டையில நடந்ததைதானே சொல்றிங்க. அங்க இருக்கிற இந்தி பேசும் மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பொது இடத்துல கொண்டாட முடிவு செஞ்சிருக்காங்க. அவங்களோட வாக்குகள் நாடாளுமன்ற தேர்தல்ல முக்கிய பங்கு வகிக்கும்கிறதால அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் அதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்கார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட திமுக கவுன்சிலர் வினோத், தாமரை சால்வை அணிஞ்சிருந்தாராம். வட இந்தியாவைச் சேர்ந்தவங்கிறதால அவர் நிகழ்ச்சியில கலந்துகிட்டதா கட்சிக்காரங்க சொல்றாங்க.”
“மேற்கு மாம்பலத்துல இருக்கற கோதண்டராமர் கோயில்ல அர்ச்சகர் மிரட்சியோட இருந்ததா ஆளுநர் தன்னோட எக்ஸ் பக்கத்துல பதிவு போட்டிருந்தாரே?”
“இதைப் பார்த்த்தும் அந்த அர்ச்சகரை அமைச்சர் தொடர்புகொண்டு பேசியிருக்கார். ‘சாமி… ஆளுநர் நீங்க பயப்பட்டிங்கன்னு சொல்லியிருக்காரே. அப்படி ஏதாவது அச்சுறுத்தல் உங்களுக்கு வந்ததா? யாராவது மிரட்டியிருந்தா எங்கிட்ட சொல்லுங்க. நான் நடவடிக்கை எடுக்கிறேன்’ன்னு சொல்லி இருக்கார். அதுக்கு அந்த அர்ச்சகர், ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆளுநர் வரப்போறார்னு தகவல் சொன்னதும் அவருக்கு உரிய மரியாதை செஞ்சு அவரை நாங்க அனுப்பி வச்சோம். மத்தபடி ஏதும் இல்லை’ன்னு சொல்லி இருக்கார். அப்ப அதை அப்படியே பத்திரிகையாளர்கள்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லி இருக்கார். அர்ச்சகரும் அதைத் தொடர்ந்து சில சானல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கார்.”
“பரவாயில்லையே… ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகள்ல ஆளுநரும், நிர்மலா சீதாராமனும் சொன்னது பொய்னு சேகர் பாபு உடனுக்குடனே நிரூபிச்சிருக்காரே?”
“அது பாஜக தலைமைக்கும், மத்திய அரசுக்கும் உறுத்தலா போயிருக்கு. அவருக்கு எதிரா அமலாக்கத் துறை உள்ளிட்ட ஏஜென்சிகளை அனுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருக்காங்க.”
“திமுக இளைஞர் அணி மாநாடு பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“மாநாட்டை வெற்றிகரமா நடத்திக் காட்டின உதயநிதி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தல்ல இளைஞர் அணிக்கு அதிக வாய்ப்பு தரணும்னு கோரிக்கை வச்சிருக்கார். வெறும் கோரிக்கை மட்டும் வைக்காம, 5 தொகுதிகளை பட்டியலிட்டு, அதில் போட்டியிட தகுதியான 5 இளைஞரணி நிர்வாகிகள் பெயரையும் கொடுத்திருக்காராம். அதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், ‘இளைஞரணியோட உழைப்புக்கு ஏத்த கவுரவம் கிடைக்கும்’னு பதில் சொல்லி இருக்கார். உதயநிதி கொடுத்த 5 தொகுதிகள் பட்டியல்ல கோவை தொகுதியும் இருக்காம்.”
“அந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு திமுக கொடுக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்களே?”
“இதைப்பத்தி கமல்கிட்ட உதயநிதியே பேசி இருக்காராம். கொங்கு மண்டலத்துல திமுக தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கு. அதனால நாங்களே போட்டியிடறோம். நீங்க தென்சென்னையில போட்டி போடுங்கன்னு சொல்லி இருக்கார்.”
“அது தமிழச்சி தங்கபாண்டியனோட தொகுதி ஆச்சே.”
“வெள்ள நிவாரண பணிகள்ல தமிழச்சி தங்கபாண்டியன் சரியா செயல்படலைன்னு கட்சித் தலைமைக்கு ஒரு வருத்தம் இருக்கு. அதனால நாடாளுமன்ற தேர்தல்ல அவருக்கு சீட் கிடைக்கறது கஷ்டம்தான்.”
“முதல்வர் மேல துரைமுருகனுக்கு ஏதோ வருத்தம்னு கேள்விப்பட்டேனே?”
“ இளைஞரணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘தேர்தல் கூட்டணி, வேட்பாளர் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது என் வேலை. யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெறச் செய்வதுதான் உங்கள் வேலை’ என்று சொல்லியிருக்கிறார். அது துரைமுருகனை கொஞ்சம் அப்செட் ஆக்கி இருக்கிறது. ‘நீங்கள் வேட்பாளர் பட்டியல் தயார் என்று சொல்கிறீர்கள். கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான். எனக்குகூட அதைப்பற்றி சொல்ல மாட்டீர்களா’ என்று கேட்டிருக்கிறார். அதுக்கு முதல்வர், ‘உங்களுக்கு தெரியாமலா… வேட்பாளர் பட்டியலை நீங்கள்தானே அறிவிக்கப் போகிறீர்கள். ஏன் அவசரப்படுகிறீர்கள்’ என்று சமாளித்திருக்கிறார்.”
” அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பா கூட்டணி கட்சிகளோட பேச குழு அமைச்சிருக்காங்களே?”
“குழு அமைச்சு என்ன பிரயோஜனம் பேசறதுக்கு யாராவது வரணுமே. பாரிவேந்தர், ஏ.சி.எஸ், ஜி.கே.வாசன்லாம் பாஜகவோட கூட்டணி வைக்கத்தான் விரும்பறாங்க. யாருக்கும் அதிமுக கூட்டணியில சேர ஆர்வம் இல்லை. ஆனா அதைப்பத்தியெல்லாம் எடப்பாடி கவலைப்படல 40 தொகுதியிலயும் தனியா நிக்க அவர் தயாரா இருக்கார்.”