விஜயகாந்த் காலமாகிவிட்டார். அவரால் தொடங்கப்பட்ட தேமுதிகவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்? ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளார் சாவித்திரி கண்ணன் அளித்த பேட்டி இது.
“2005ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அதன் வளர்ச்சி அபரிமிதமாகத் தான் இருந்தது. விஜயகாந்தின் சினிமா தந்த பிரபலம், அவர் செய்த தான தர்மங்கள், அவருக்கேயுரிய அசாத்தியமான தைரிய குணம், உற்ற நண்பர்களின் சேர்க்கை ஆகியவை அவரது அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளமாகின. இரு திராவிட இயக்கத்தையும் ஏற்க முடியாத மனநிலை கொண்டவர்கள் இதை ஒரு மாற்றாகக் கருதி ஆதரித்தார்கள்.
கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய துணிச்சலும், கடும் பிரச்சாரங்களும் விஜயகாந்துக்கு 2006 தேர்தலில் 8% சதவிகித வாக்குகளை பெற்றுத் தந்தன. அடுத்து வந்த 2009 நாடாளுமன்ற தேர்தலோ 10.4% வாக்குகளை தந்தன. 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி. கட்சி தொடங்கப்பட்ட ஆறே ஆண்டில் 29 எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து என்பது உடனடி ஆதாயமானது. ஆனால், அதன்பின்னர் இவர் தான் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற வளர்ச்சி தடைபட்டதோடு, அவரது வாக்குவங்கியும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. தனக்கு யார் எதிரி? யார் நண்பன் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியாமல் அவர் பயணம் தொடர்ந்தது.
இன்னொரு பக்கம்… அரசியல் அனுபவமின்மை, அதீத கோப உணர்ச்சி ஆகியவற்றொடு குடும்ப உறவுகள் தலையீடும் சேர்ந்ததால் தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எட்டு பேரை அதிமுகவிடம் பறி கொடுத்தார். மூத்த தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரனும் அவரிடமிருந்து விலகினார்.
2016இல் தேமுதிகவானது திமுக அணிக்கு வந்திருந்தால் தேர்தல் முடிவுகளே மாறியிருக்கும். 2011இல் அதிமுக – தேதிமுக கூட்டணிக்கு சோ போன்ற ஒரு இணக்கமான இடைநிலை தரகர் அமைந்தது போல, 2016இல் அமையாமல் போனது. ஸ்டாலினுக்கும் விஜயகாந்தை ஏற்க முடியவில்லை. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி என்ற வலையில் விஜயகாந்த் விழுந்த போது கட்சிக்குள் கொஞ்ச நஞ்சம் இருந்த வலுவான நிர்வாகிகளான சந்திரக்குமார், பார்த்தீபன் உள்ளிட்ட பலரை இழந்தார். அவரது வாக்கு வங்கி 2.4% சதவிகிதமானது. மக்கள் நலக் கூட்டணி என்று அத்தனை கட்சிகளை சேர்த்துக் கொண்டு நின்ற போதே நின்ற 104 தொகுதிகளில் 103இல் டெபாசிட் பறிகொடுத்த கட்சி தேமுதிக.
2019இலும் அது தமிழகத்தில் எது வெற்றிக் கூட்டணி என்பதை கணிக்கும் திராணியில்லாத அளவுக்கு பாஜகவின் பாசவலையில் சிக்கியது. அது மேலும் வாக்கு வங்கியை சரித்துவிட்டது. இப்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5%க்கும் குறைவாகத்தான் இருக்க முடியும்.
2016 சட்டசபை தேர்தலோடே தேமுதிகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இனி அதற்கு எதிர்காலம் இல்லை என்பதுதான் உண்மை. தேமுதிக கட்சியை மக்கள் எப்போதோ அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டனர். எந்த ஒரு கொள்கை இல்லாவிட்டாலும் கூட, அந்தக் கட்சியின் ஒரே ஈர்ப்பு விஜயகாந்த் தான். அவரது படங்கள், அவர் செய்த தான தர்மங்கள், அவரை நேசிக்க கூடிய ஒரு மக்கள் திரள். இது மட்டுமே தேமுதிகவின் பலம்.
ஒவ்வொரு கட்சி உயிர்த்திருக்கவும் ஒரு சமூக, அரசியல் வரலாற்றுத் தேவை இருக்கிறது. ஒரு சித்தாந்தம், கொள்கை கொண்ட குறிப்பிட்ட மக்கள் திரளின் ஆசை, அபிலாசைகள் உள்ளது. அப்படி ஏதாவது இந்தக் கட்சி உயிர் வாழ்வதற்கான சமூக., அரசியல் காரணிகள் ஏதாவது உள்ளதா என்று பார்த்தாலும்கூட விடை ஒன்றும் கிடைக்கவில்லை.”