”மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளாசியதை பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா.
“பார்த்தோம். ஏன் இவ்வளவு கோபம்? உதயநிதியையும் தாக்கியிருக்கிறாரே?”
“ஆமாம். அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என்ற உதயநிதியின் கேள்வியை மத்திய அரசு ரசிக்கவில்லை. அதனால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்வி எழுப்பட்டது. நிர்மலா சீதாராமனும் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தவர் போல் கடுமையாக தாக்கி பேசினார். வேறொரு ஆங்கில செய்தியாளர் மற்றொரு கேள்வியை கேட்க விரும்பி குரல் எழுப்பிய போது உங்களுக்கு ஏன் அவசரம் என்று காட்டமாக கூறி உதயநிதியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அவரோட பாஷை இப்படிதான் அவங்க அப்பா வீட்டுனால பதவில இருக்கிறார்னு விமர்சித்தார்”
“மத்திய அரசுகிட்டருந்து வெள்ளத்துக்காக எந்த நிதியும் வரலனு முதல்வரே பேசியிருக்கிறாரே?”
“ஆமாம், மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வழக்கமான நிதியைதான் கொடுத்திருக்கு. இதை நிர்மலா சீதாராமனும் செய்தியாளர் சந்திப்புல சொன்னாங்க. அதாவது, ‘மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம். இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டோம்’ம்னு சொன்னாங்க.”
“அப்போ வெள்ளத்துக்குனு மத்திய அரசுக்கிட்டருந்து பணம் வரலனு சொல்ற, சரி, பொன்முடி எப்படி இருக்கிறார்? முதல்வரை சந்திச்சிருக்கிறாரே?”
“ஆமாம். பொன்முடியை முதல்வர் சந்திச்சா நல்லாருக்காதுனு சிலர் முதல்வருக்கு ஆலோசனை சொல்லியிருக்காங்க. ஆனா முதல்வர் அந்த ஆலோசனையை ஏத்துக்கலையாம்”
“முதல்வர் சந்திப்புல என்ன பேசுனாங்களாம்? ஏதாவது தெரிஞ்சதா?”
“திமுக வழக்கறிஞர் அணி சரியான முறைல ஒத்துழைக்கலனு பொன்முடி புகார் சொன்னார்னு ஒரு நியூஸ் இருக்கு. தீர்ப்பு கொடுத்த நீதிபதி ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது சட்டத் துறை செயலாளராக இருந்திருக்கிறார், இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகளை பார்த்திருக்கிறார் என்பதை தலைமை நீதிபதிக்கு எடுத்து சென்றிருக்க வேண்டும். அதை திமுக வழக்கறிஞர்கள் செய்ய தவறிவிட்டார்கள் என்று கூறினாராம். திமுக வழக்கறிஞர் பிரிவில் அரசியல் செய்து என்னை மாட்டிவிட்டார்கள். அதனால்தான் எனக்கு தண்டனை கிடைத்திருக்கிறது என்று கூறினார் என்கிறார்கள்”
“முதல்வர் என்ன சொன்னாராம்?”
“ஒண்ணும் கவலைப்படாதிங்க. நாம பார்த்துக்கலாம்னு வழக்கம்போல சொல்லி அனுப்பியிருக்கிறார்”
”பொன்முடி தைரியமா இருக்கிறாரா?”
“அத்தனை தைரியமாக இல்லை என்கிறார்கள். செந்தில் பாலாஜி போல் தானும் மாறிவிடுமோ என்று பயப்படுகிறார். அவரது மனைவி ரொம்ப உடைந்து போய்விட்டார். உச்ச நீதிமன்றம்தான் இப்போது அவருக்கு ஒரே நம்பிக்கை”
”சுப்ரீம் கோர்ட்ல சீக்கிரம் தீர்ப்பு வந்துடுமா?”
“டிசம்பர் 18 முதல் ஜனவரி 1-ம் தேதி வரைக்கும் சுரீம் கோர்ட் லீவ். விடுமுறை கால அவசர வழக்கா பொன்முடி சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வாய்ப்பு இல்லை. அடுத்த மாசம் 21-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்புக்கு தடை வாங்கி ஆகணும். அதனால திமுக தரப்பு பரபரப்பா இருக்கு. சில வழக்குகள்ல உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை தருது. அது வழக்கை விசாரிக்கற நீதிபதிகளை பொறுத்த விஷயம். அதனால அங்க தங்களுக்கு பாதகமான கொள்கை கொண்டிருக்கற நீதிபதிகள் வந்துடக் கூடாதேன்னு திமுக கவலைப்படுது.”
”இன்னும் 11 அமைச்சர்கள் சிக்குவாங்கன்னு அன்ணாமலை கொளுத்திப் போட்டிருக்கிறாரே? இன்னும் அமைச்சர்கள் சிக்குவார்களா?”
”இல்லை என்கிறது திமுக தரப்பு. இது போன்று பல வழக்குகளைப் பார்த்துட்டோம். இதெல்லாம் ஒண்ணுமில்லனு தைரிய முகம் காட்டுகிறார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல்ல பாதிப்பு இருக்கும்னு நினைக்கிறாங்க”
“ஏன்?”
“திமுகவின் வரலாற்றில் இதுவரைக்கும் பதவியில் இருக்கும் எந்த திமுக அமைச்சரும் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை. இதுவரை அதிமுகவை விமர்சிக்கும்போது ஜெயலலிதா ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் எங்கள் கட்சியில் அப்படி தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இனி அப்படி செய்ய முடியாது அல்லவா?”
“பொன்முடியோட இலாகாவை ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கி இருக்காங்களே?”
”முதல்ல அந்த இலாகாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கறதாத்தான் இருந்துச்சு. ஆனா இதை அமைச்சர் நேரு விரும்பல. அதனால ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலா அந்த இலாகாவை ஒதுக்கி இருக்காங்க. ஆனா இதுவும் பல மூத்த அமைச்சர்களுக்கு பிடிக்கலையாம். அவர் மேல ஏகப்பட்ட சர்ச்சைகள் ஏற்கெனவே இருக்கு. இந்த நேரத்துல அவருக்கு கூடுதல் இலாகாக்களை ஒதுக்கி இருக்கணுமான்னு கேள்வி எழுப்பறாங்க.”
“மழையால பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியா முதல்வர் 6 ஆயிரம் ரூபாய் அறிவிச்சிருக்காரே?”
“அதுலயும் வில்லங்கம் வந்திருக்கு. இந்த லிஸ்ட்ல கன்னியாகுமரி மாவட்டத்தை திமுக அரசு விட்டதை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரசிக்கல. ‘என் தொகுதியிலயும் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. என் கைக்காசை போட்டு செலவு செய்துட்டு இருக்கேன். இப்படி என் தொகுதியை தமிழக அரசு கைவிட்டா தொகுதி மக்களுக்கு நான் என்ன பதில் சொல்வே’ன்னு எதிர்த்து கேள்வி எழுப்பிட்டு இருக்காராம்.”
“முதல்வர் – பிரதமர் சந்திப்பு பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை இரவு பத்தரை மணிக்குதான் சந்திச்சார். இதுலயும் அரசியல் இருக்கு. முதல்வர் ஸ்டாலினை வேண்டுமென்றே இரவு பத்தரை மணிக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள் டெல்லி திமுகவினர். முதல்வரின் உடல்நிலை காரணமாக அவர் சீக்கிரமே இரவு உறங்கச் செல்வார். அது தெரிந்துதான் பாஜகவினர் இரவு தாமதமாக முதல்வரை அழைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அந்த நேரத்தை மாற்ற முடியுமா என்று முதல்வர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது என்றும் டெல்லி செய்திகல் சொல்லுகின்றன”
“ஓ..அப்படியா?”
”ஆமாம், பிரதமர் முதல்வரை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி ‘உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு? என்ன சிகிச்சை எடுத்துக் கொள்கிறீர்கள். நாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா’ங்கிறதுதான் அதுக்கு பிறகுதான் வெள்ளத்தைப் பத்தி கேட்டிருக்கார். வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், ‘எனது உடல்நிலை பற்றி அவருக்கு தெரியும்னு பிரதமர் சொல்லாமல் சொல்கிறார்’ன்னு கூட வந்தவங்ககிட்ட சொல்லி இருக்கார்.”
“எப்படிலா அரசியல் பண்றாங்க. சரி, முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்னும் பணம் கொடுக்கலையே?”
“சுனாமியின்போது எதிர்க்கட்சியா இருந்த திமுக சார்பா முதல்வர் ஜெயலலிதாவை சந்திச்சு மு.க.ஸ்டாலின் நிதி கொடுத்தார். அதேபோல் வர்தா புயலின்போது திமுக சார்பில் துரைமுருகனும், சேகர்பாபுவும் எடப்பாடியை சந்திச்சு நிதி கொடுத்தாங்க. அதனால இப்ப நாமளும் கட்சி வித்தியாசம் பார்க்காமல் முதல்வரை சந்திச்சு நிதி கொடுக்கறதுதான் சரியா இருக்கும்னு ஒரு பேச்சு அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில வரத் தொடங்கி இருக்கு.”
”இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்புல இந்தி மொழி ஒரு பெரிய பிரச்சினையா எழுந்திருக்கே? தனது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே?”
“இந்த கூட்டத்துல தன்னோட இந்தி பேச்சுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வேண்டாம்னு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆவேசப்பட்டதுக்கும், இந்தி கற்றுக் கொள்ளுங்கள்னு திமுகவினருக்கு ஆலோசனை சொன்னதுக்கும் திமுக மேல இருக்கற கோபம்தான் காரணமாம். ராகுல் காந்திக்கு திமுக கொஞ்சம் ஓவராக ஆதரவு தர்றது நிதிஷ் குமாருக்கு பிடிக்கலை. அதனாலதான் அவர் அப்படி நடந்துக்கிட்டார்னு சொல்றாங்க. இந்த கூட்டத்துல பிரதமர் வேட்பாளரா ராகுல் காந்தியை முன் மொழியணும்னு ஸ்டாலின் நினைச்சிருந்தார் ஆனால் இது மத்தவங்களுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சதும், அந்த முடிவே மாத்திக்கிட்டார்.”
“நிதிஷ் குமார் இந்தக் கூட்டணியைவிட்டு வெளில வந்துருவார்னு சொல்றாங்களே?”
“ஆமாம். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்த நிதிஷ் குமார் பாஜகவை எதிர்ப்பது சரியல்லனு நினைக்கிறாராம். அவங்க கூட கூட்டணி இல்லனாலும் இந்தியா கூட்டணியும் வேண்டாம்னு யோசிக்கிறாராம். அதுக்கான காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறார்னு சொல்றாங்க”
“நிதிஷ் குமார் இந்தி ஆதரவு பேச்சுக்கு திமுககாரங்ககிட்டருந்து எதிர்ப்பு எதுவும் வரலையே?”
“எந்தக் கருத்தும் சொல்ல வேண்டாம்னு தலைமை சொல்லியிருக்கு. நம்மால கூட்டணி உடைஞ்சதுனு பேர் வரக் கூடாதுனு ஸ்டாலின் நினைக்கிறார்”