No menu items!

மீளாத தூத்துக்குடி, மீளும் நெல்லை – 6 நாட்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது?

மீளாத தூத்துக்குடி, மீளும் நெல்லை – 6 நாட்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது?

தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை ஓய்ந்து ஆறு நாட்களான நிலையில், தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம் நேற்று தணிந்தது. இதனால், திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மீளும் நெல்லை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையால் இந்த நான்கு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. அதேநேரம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் தாமிரபரணியில் 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடிக்குமேல் வெள்ளம் கரைபுரண்டது.

இதனால் ஆற்றங்கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. திருநெல்வேலியில் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வெள்ளம் தணிந்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோர கோயில்களின் கோபுரங்கள் வெளியே தலைகாட்டியிருக்கின்றன. இதுபோல் ஆற்றங்கரையோர மண்டபங்களும் வெளியே தெரிகின்றன.

மழையின் போது அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. பாபநாசம் அணையிலிருந்து 3,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக தாமிரபரணியில் ஆர்ப்பரித்த வெள்ளம் தணிந்துள்ளது. கரைபுரண்ட தாமிரபரணி தற்போது அதன் கரைகளுக்குள்ளாகவே ஓடுகிறது. பொது மக்கள் ஆற்றங்கரையோரங்களில் வழக்கம் போல் குளிக்கவும் துணி துவைக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

மீளாத தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்துடன் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளமும் தூத்துக்குடி மாவட்டம் வழியாகத்தான் கடலுக்கு சென்று சேர வேண்டும் என்பதால், கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெருமழை பெய்த போது தூத்துக்குடி மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் இடுப்பளவு முதல் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் மிகக்கடுமையாக பாதிப்படைந்தனர்.

ஆறு நாட்களான நிலையில் திருநெல்வேலி போல் தூத்துக்குடியிலும் மழை வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. ஆனாலும், தூத்துக்குடி நகரிலும் சிறுநகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் இன்னும் நிற்கிறது. இதனால், இம்மாவட்டத்தில் மக்கள் ஆறாவது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, ஜெயராஜ்சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து படிப்படியாக சீராக தொடங்கியுள்ளது. மேலும், மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் சீராகியுள்ளது.

இதேவேளையில், தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கி நிற்கிறது. இதேபோல் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால், முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளும் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. கோரம்பள்ளம் – காலாங்கரை சாலை அடித்து செல்லப்பட்டதால் இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மூழ்கியுள்ளன.

தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. கடம்பா குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் ஆத்தூர் அருகே வரண்டியவேல் பகுதியில் சாலையில் வெள்ளம் இன்னும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் திருநெல்வேலி சென்று மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பேய்குளம், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் வழியாக செல்கின்றன.

மழை பெய்தபோது தாமிரபரணி கரையோர பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தது. தாமிரபரணி கரையோர ஊர்களான ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஏரல், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்களுக்குள் புகுந்த வெள்ளமும் தற்போது வடிந்து வருகிறது. இதனால் படிப்படியாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

என்றாலும், இந்த பகுதிகளில் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஆறாவது நாளாகவும் மக்கள் திண்டாடி வருகின்றனர். 5 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...