வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் சாயலோ அல்லது பிற மொழி படங்களின் சாயலோ இருக்கும். இதை அவரும் மறுப்பது இல்லை.
’விஜய் 68’ -ஐ வெங்கட் பிரபு இயக்குகிறார். இதனால் இப்போதும் அதே காப்பி பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.
விஜய், லைலா, வைபவ், மோகன், மீனாட்சி செளத்ரி என எல்லோரும் சென்னை, தென்னாப்பிரிக்கா, குஜராத், ஹைதராபாத் என மாறி மாறி ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார்கள்.
இரண்டு ஷெட்யூல்கள் முடிந்தநிலையில், ’விஜய் 68’ கதை ஏதேனும் ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.
காத்துவாக்கில் அடிப்படும் இரண்டு விஷயங்கள். விஜய்க்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். ஒருவர் அப்பா. மற்றொருவர் மகன். அடுத்து இதில் ஒருவர் இந்தியாவையே அதிர வைக்கும் ஒரு ஹைடெக் வில்லன். மற்றொருவர் இந்த வில்லன்களையெல்லாம் புரட்டி எடுக்கும் காவல்துறை அதிகாரி.
அப்பா, மகன், தீவிரவாதி, போலீஸ் இப்படி பொருந்துகிற படம் எது என்று இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து பார்த்தால், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினிமேன்’ என்றப் படத்தை கூகுள் காட்டுகிறதாம்.
2019-ல் வெளியான ஜெமினிமேன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படம். இந்தப் படத்தை புகழ்பெற்ற இயக்குநர் ஆங் லீ இயக்கி இருக்கிறார்.
ஃபோர்ஸ் ரெகான் மரைன் ஸ்கவுட் ஸ்னிப்பர் ஆக இருக்கும் வில் ஸ்மித்தைப் போலவே க்ளோன் செய்யப்பட்ட ஒரு வாலிபர் வில் ஸ்மித். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே திரைக்கதை. இதில் அப்பா மகன் மோதலை மட்டும் விஜய் 68-க்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
ரஜினி கமலால் உண்டான குழப்பம்!
’விக்ரம்’ வெற்றி கமலையும், ‘ஜெயிலர்’ வெற்றி ரஜினியையும் வேறு மாதிரி இயங்க வைத்திருக்கின்றன.
நான்கு ஆண்டுகளாக சினிமா பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்த கமல், இப்போது மணிரத்னமுடன் ‘த தக் லைஃப்’ பட த்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார். இதனால் அவர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நேர்க்கொண்ட பார்வை’, படங்களின் இயக்குநர் ஹெச். வினோத் உடன் இணைய இருந்த படம் தள்ளிப் போகிறது.
கமல் மணி ரத்னம் பக்கம் திரும்பி விட்டதால், ஹெச். வினோத் இந்த இடைவெளியில் என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார். அநேகமாக இவர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பாரா என்ற எதிர்பார்பு கிளம்பியிருக்கிறது.
அப்படியே அந்தப்படத்தை எடுக்க நினைத்தாலும், கார்த்தி அதில் நடிப்பாரா என்ற சந்தேகமும் உருவாகி இருக்கிறது.
இதற்கு காரணம், கார்த்தி அடுத்து ’கைதி 2’ படத்தில் நடிக்கப் போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால் அந்தப்படத்தின் நிலையும் இப்போது தலைக்கீழாக மாறி இருக்கிறது. காரணம் ரஜினி.
லோகேஷ் கனகராஜை தன்னுடைய 171-வது படத்தை இயக்க அழைத்துக்கொண்டார். அடுத்தவருடம் ஏப்ரலில் ரஜினி பட ஷூட்டிங் தொடங்கும். அதற்கான எழுத்து வேலைகளை தான் பார்க்க இருப்பதாகவும், அதனால் இனி சமூக ஊடகங்கள் பக்கம் வரப்போவதில்லை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
இதனால் ‘கைதி 2’ படம் பற்றி எதிர்பார்பு அப்படியே காணாமல் போய்விட்டது.
அப்படியானால் கார்த்தி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால், இப்போது அதுவும் இல்லையாம்.
கார்த்தி அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புதல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது.
உண்மையில் பி.எஸ். மித்ரன் அடுத்து கேஜிஎஃப் ஹீரோ யாஷ்ஷை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக திட்டம் இருந்தது. அதற்கான எழுத்து வேலைகளும் ஆரம்பமாயின. ஆனால் என்ன நடந்த து என்று தெரியவில்லை. யாஷ் – பி.எஸ். மித்ரன் படம் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை.
இதனால் பி.எஸ். மித்ரனுடன் இணைய கார்த்தி தயாராகி விட்டார். இப்போது ஹெச். வினோத் திட்டம் என்னவென்பது இன்னும் முடிவாகவில்லை.