மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டபோது நடிகர் பாலா எப்படி பம்பரமாய் சுழன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டாரோ, அதேபோல் தென் மாவட்டங்களில் பம்பரமாய் சுழன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். தனியாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்தும் அவர் செய்துவரும் மீட்புப் பணிகள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன.
திருநெல்வேலிக்கு அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வராஜ். ‘கர்ணன்’, ’மாமன்னன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதிக்கு நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார்.
தென் மாவட்டங்களில் நேற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அதைப்பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட மாரி செல்வராஜ், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.
மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தனியாக பல இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மாரி செல்வராஜ், பின்னர் அப்பகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த்தும், அவருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்புப் பணிகளில் உதவி செய்தார்.
மீட்பு பணிகளைப் பற்ரி செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், “நான் இங்கேதான் இருக்கிறேன் . உதயநிதி சார் கூடவே இருக்கிறார். அவர் தொடர்ந்து பணிகளை செய்கிறார். முடிந்த அளவு மீட்பு பணிகளை செய்கிறோம். விரைவில் முழுமையாக மீட்புக்களை செய்வார்கள். படகை கொண்டு வருவதுதான் பிரச்சனை.
எப்படியாவது இதை கடக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வந்து மக்களை மீட்போம். கவலை வேண்டும். அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. மக்களை தேடி கண்டுபிடிச்சு மீட்க சவாலா இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மக்களை கண்டுபிடித்து மீட்பதில் சவால்கள் உள்ளன; படகுகள் செல்ல முடியாத நிறைய கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 15 முதல் 20 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் விரைவில் மீட்பு பணிகள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மழை வெள்ளத்தின்போது மாரி செல்வராஜ் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதை பலர் வரவேற்றாலும் சிலர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்கள் பின்னால் நிற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் முன்னால் நிற்கிறார். இவருக்கும் அரசு மீட்பு பணிகளுக்கும் என்ன சம்பந்தம்? இவர் ஏன் முன்னணியில் இருக்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அரசின் சொதப்பலான வெள்ள மீட்பு நடவடிக்கைகளை சினிமாக்காரர்கள் மூலம் சரி செய்யப் பார்க்கிறார் உதயநிதி என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.