சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், அவர் அணிந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி இனி இந்தியாவுக்காக ஆடும் வீரர்கள் யாரும் 7-ம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்துகொள்ள முடியாது. 7-ம் எண் ஜெர்ஸி என்றாலே இனி தோனி மட்டும்தான்.
நட்சத்திர வீர்ர்களின் ஜெர்ஸிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் அணிந்த 10-ம் எண் ஜெர்ஸிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுத்துள்ளது. அதற்கு காரணம் ரசிகர்கள். இந்திய கிரிக்கெட்டில் ஆடிய காலம் முழுக்க 10-ம் எண் ஜெர்ஸியைத்தான் சச்சின் அணிந்து வந்தார். அவர் ஓய்வுபெற்று சில ஆண்டுகள் ஆகும் வரை அந்த ஜெர்ஸியை யாரும் அணியவில்லை.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டில் ஷர்துல் தாக்குர் ஒரு போட்டியில் 10-ம் எண் ஜெர்ஸியை அணிந்து ஆடினார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள், சமூக வலைதளப் பக்கத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சச்சினின் ஜெர்ஸியை இனி யாரும் அணியாமல் இருக்க, அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஷர்துல் தாக்குருக்கு 54-ம் எண் ஜெர்ஸி வழங்கப்பட்டது. அதேபோல் தோனியின் ரசிகர்களை திருப்திப்படுத்தவும், அவரை கவுரவப்படுத்தவும் 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி வீர்ர்கள் 1 முதல் 100-ம் எண் வரை எந்த எண் ஜெர்ஸியை வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் பல வீர்ர்கள் ஆடி வருவதால் ஜெர்ஸி எண்களை புதிய வீர்ர் அத்தனை சுலபமாக தேர்ந்தெடுக்க முடியாது. தோனியின் ஜெர்ஸியைப் போலவே எதிர்காலத்தில் விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணான 18 மற்றும் மற்றும் ரோஹித் சர்மாவின் ஜெர்ஸி எண்ணான 45 ஆகியவற்றுக்கும் எதிர்காலத்தில் ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு ஜெர்ஸிக்கும் ஓய்வு வழங்கப்படுவதால் எதிர்காலத்தில் புதிய வீர்ர்களுக்கு தேவையான ஜெர்ஸிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக இந்திய அணியில் சமீபத்தில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் பயன்படுத்திய 19-ம் எண் ஜெர்ஸியை தனக்கு ஒதுக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் அந்த ஜெர்ஸியை ஏற்கெனவே தினேஷ் கார்த்திக் பயன்படுத்தி வருவதால், அவருக்கு அது ஒதுக்கப்படவில்லை. மாறாக 64-ம் எண் ஜெர்ஸி வழங்கப்பட்டது.