துபாயில் இருந்து இறக்குமதி ஆன மதுரைப் பொண்ணு. இப்படியொரு அடைமொழியோடு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
அறிமுகமான புதிதில் இரண்டு மூன்றுப்படங்கள் இவரைத் தேடி வந்தது. ஆனால் அதற்குள்ளாகவே பெரிய இடம் ஒன்றில் வேண்டுமென்றே நெருக்கமாக முயற்சித்தாராம் நிவேதா பெத்துராஜ்.
இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தெரிய வரவே, நிவேதா பெத்துராஜை கூப்பிட்டு ‘என்ன விஷயம். இதெல்லாம் உனக்கு தேவையா’ என்று கேட்டிருக்கிறார்களாம்.
அப்போதும் கூட ‘காதல் என்றால் அப்படிதான்’ என்று நிவேதா பெத்துராஜ் கூறினாராம்.
இதற்கு மேலும் சும்மா விட்டால் தவறாகிவிடும் என்பதால், உரிய அறிவுரைகளைக் கூறி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்க கூடாது என்று அன்புக்கட்டளை இட்டு அனுப்பியிருக்கிறார்களாம்.
இதனால்தான் நிவேதா பெத்துராஜை தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இப்போது நிவேதா பெத்துராஜ் சினிமாவில் பெரிய இடத்தை சேர்ந்தவர்களிடம் என்னைக் கல்யாணம் பண்ண்கிறீங்களா என்று கேட்டு வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
இந்த கிசுகிசு உண்மையா இல்லையா என்று நிவேதா பெத்துராஜ் வெளிப்படையாக சொன்னால்தான் யூகங்களைக் கிளப்பிவிடுபவர்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.
சரியும் சூர்யாவின் மார்க்கெட்?
ஒரு மொழியில் எடுக்கப்படும் திரைப்படத்தை இந்தியாவின் இதர பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவதும், ஒடிடி-யில் வெளியாவதும் அதிகரித்த பிறகு, அப்படங்களில் நடித்த முன்னணி நட்சத்திரங்கள் தங்களது படங்களை விளம்பரப்படுத்த அந்தந்த மொழி பேசும் மாநிலங்களுக்கு சென்று விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான ப்ரமோஷன்களில் அதிக அக்கறைக் காட்டுவதில் தெலுங்கு நடிகர்களும், நடிகைகளும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது ஹிந்தி நட்சத்திரங்களும் ப்ரமோஷனில் இறங்கிவிட்டார்கள்.
ஆனால் தெலுங்கு, ஹிந்தி நட்சத்திரங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் நடிகர்களும் நடிகைகளும் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து இருக்கிறது.
இதனால் தமிழ் சினிமாவில் வசூலை அள்ளும் நடிகர்களின் படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் சினிமா வியாபாரத்தில் பெரிதாக எடுப்படுவதும் இல்லை என்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக இப்போது சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை முன்வைத்திருக்கிறது சினிமா வியாபார வட்டாரம்.
தெலுங்கு சினிமாவில் சூர்யாவுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது படங்கள் அங்கே வசூலை அள்ளியிருக்கின்றன. ஆனால் இப்போது சூர்யாவின் சினிமா பயணத்தில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படமான ‘கங்குவா’விற்கு பெரிய வியாபாரம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் கசிந்திருக்கிறது.
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருவதால், ’கங்குவா’ படத்தின் வியாபாரத்தில் பெரும் தொகையை அப்படதயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறதாம். அதாவது தெலுங்கு டப்பிங் உரிமையை 20 கோடிக்குதான் கொடுக்க முடியுமென கங்குவா தயாரிப்பு நிறுவனம் கறாராக இருக்கிறதாம்.
சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் தெலுங்கில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கும் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம்.
சூர்யா நடித்த ‘கஜினி’, ‘சிங்கம்’ ஆகிய படங்கள் மட்டுமே அதிக வசூலைக் கொடுத்தன. அதற்குப் பிறகு வேறெந்த படங்களும் அந்தளவிற்கு வசூலைப் பெறவில்லை.
இதனால் வி.எஃப்.எக்ஸ். சி.ஜி.-யின் மாயாஜாலம் நிறைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் ‘கங்குவா’ படத்தையும் கூட 20 கோடிக்கு வாங்க தெலுங்கு சினிமாவின் விநியோகஸ்தர்கள் முன்வரவில்லையாம்.
அதிகப்பட்சம் 11 கோடி அல்லது 12 கோடி என்றால் ஒகே என்கிறார்களாம். இப்படி வியாபாரம் குறைந்தால், அது ’கங்குவா’ தயாரிப்பாளருக்கு சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள். டப்பிங்கில் ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் இவ்வளவு விலை என்று முடிவு செய்து, படத்தின் பட்ஜெட்டை அதற்கேற்றபடி அதிகரித்து படமெடுப்பதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பட வெளியீட்டுக்கு முன்பாகவே பல கோடிகள் கையைக் கடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
’கேஜிஎஃப் 3’ ரெடி!
இந்திய சினிமாவில் இப்படியொரு சினிமா உலகம் இருக்கிறதா என்று பலருக்கு தெரியாத நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தன கன்னட சினிமாவில் இருந்து வெளியான ’கேஜிஎஃப்’ வரிசைப் படங்கள்.
’கேஜிஎஃப்’ -ன் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. இதனால் ‘கேஜிஎஃப் 3’ பாகத்திற்கான எதிர்பார்பும் எகிறியிருக்கிறது.
’கேஜிஎஃப் 3’ பற்றி இதுவரை இயக்குநர் பிரஷாந்த் நீல், ஹீரோ யாஷ் இருவரும் வாயைத் திறக்கவே இல்லை. இதனால் இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற யூகங்கள் வெளியாயின.
இந்நிலையில் அந்த யூகங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் வகையில் ’கேஜிஎஃப் 3’ பற்றிய தகவலை பிரஷாந்த் நீல் பகிர்ந்திருக்கிறார்.
‘கேஜிஎஃப் 3 வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை நான் இயக்குவேனா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாயகன் யாஷ் இதில் இருப்பார். எங்களிடம் கேஜிஎஃப் 3-க்கான கதை கைவசம் ஏற்கனவே இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பே நாங்கள் இதுதான் கதை என முடிவு செய்துவிட்டோம்’’ என்று கூறியிருக்கிறார் பிரஷாந்த் நீல்.
’கேஜிஎஃப் 3’ படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவேனா மாட்டேனா என்பது தெரியாது என்று கூறுவதற்கு காரணம், பிரஷாந்த் நீல் அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படப்புகழ் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து புதியப்படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.