மீண்டும் ஒரு மழை பயம்.
தமிழ்நாட்டை மிரட்டிக் கொண்டு தள்ளி நிற்கிறது மிக்ஜாம் புயல். அது தமிழ்நாட்டை தாக்குமா? அல்லது அச்சம் காட்டிவிட்டு ஒடிசா பக்கம் ஒதுங்குமா என்பதுதான் இப்போது வானிலை ஆய்வாளர்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் விஷயம்.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, “இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இது குறித்து தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்.
அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று சொல்லிவிட்டு அடுத்து சொன்ன தகவல்தான் கவனிக்க வேண்டியது.
”சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
2015 சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகு மழை என்றாலே சென்னை மக்கள் அச்சத்துடன் பார்க்கும் நிலை உண்டாகிவிட்டது. 2015லும் டிசம்பர் 1, 2 தேதிகளில்தான் பேய் மழை பெய்து சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்தது. இந்த முறை அதே தேதிகளில் கடும் மழை இருக்கும் என்று கூறப்பட்டிருப்பது மக்களிடம் அச்சத்தை கூட்டியிருக்கிறது.
இப்போது மிக்ஜாம் புயல் – இந்தப் பெயரை மியான்மர் நாடு பரிந்துரைத்திருக்கிறது – வங்கக் கடலில் அந்தமானுக்கு தெற்கே நின்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டை நோக்கி வருமா தெற்கு ஆந்திராவுக்குப் போகுமா ஒடிசா பக்கம் திரும்புமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் எந்தப் பக்கம் அது போனாலும் சென்னைக்கும் அதன் சுற்று மாவட்டங்களுக்கும் மழை இருக்கும் என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.