No menu items!

மாவீரன் Napoleon திரைப்படம் என்ன சொல்கிறது?

மாவீரன் Napoleon திரைப்படம் என்ன சொல்கிறது?

ஜெகநாத் நடராஜன்

மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு என்பதால் இப் படம் உருவாகும் போதே பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பின. நெப்போலியனைப் பற்றி பல டிவி தொடர்களும் ஒரு சில படங்களும் ஏற்கனவே வந்திருக்கின்றன. என்றாலும், இப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்குகிறார் என்பதால் இந்த எதிர் பார்ப்பு. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியனாக ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடிப்பது இன்னும் ஆச்சர்யம். ஏனெனில், வரலாற்றின் பார்வையில் நெப்போலியன் குள்ளர்.

இயக்குநர் ரிட்லி ஸ்காட்டுக்கு வரலாற்று திரைப்படம் புதியதில்லை. சயின்ஸ் பிக்சன், வார் மூவீஸ், ‘கிளாடியேட்டர்’ என்று பல வகைகளில் படமெடுப்பவர்; நவீன உத்திகளை படத்தில் பயன்படுத்துபவர்; நடிகர்களின் உணர்வுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை வைத்து பதிவு செய்து, அவர்கள் நடித்து முடித்து அவரைப் பார்க்கும் வரை, அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி ‘கட்’ சொல்லாதவர்; வலுவான பெண் கதாநாயகிகளை எழுதுபவர்; தனது படங்களின் ஸ்டோரி போர்டை தானே வரைந்துகொள்பவர் என பல பெருமைகள் கொண்டவர் ரிட்லி ஸ்காட். இருபதுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்திருக்கிறார். எண்பது வயதைக் கடந்த இந்த பிரிட்டீஷ் இயக்குநர், அடுத்து ‘கிளாடியேட்டர் 2’ மற்றும் ஒரு சயின்ஸ் பிஷனுக்கு தயாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நெப்போலியன்’ திரைப்படம் நவம்பர் 22 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் 24ஆம் தேதி வெளியானது.

பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியனின் தொடக்க காலம், அவனது புகழ், மனைவி ஜோசபின் மீதான அவனது அன்பு, இராணுவம், போர்கள், வெற்றிகள், தோல்விகள், இறுதி வாட்டர்லூ தோல்வி, நெப்போலியனின் மரணம் என எல்லாவற்றையும் வரலாற்றுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருக்கிறார், ரிட்லி ஸ்காட்.

பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், பிரெஞ்ச் விமர்சகர்களுக்கு இப்படம் திருப்தியளிக்கவில்லை. பிரிட்டீஷ்காரர்களுக்கு நெப்போலியனைப் பிடிக்காது என்பதாலேயே இப்படத்தின் மீது பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

‘நான் ஆவணப்பட இயக்குநர் அல்ல’ என தொடக்கத்திலேயே ரிட்லி ஸ்காட் முழங்கிவிட்டார். ஆனாலும், அவரது அணி வரலாற்று விவரங்களை துல்லியமாக கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டுள்ளது.நெப்போலியன் பற்றிய பல புத்தகங்களை எழுதிய மைக் ப்ரோயர்ஸ் திரைக்கதை விவாதங்களில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியன் ஏன் விரும்பப்படுபவராக, வெறுக்கப்படுபவராக இருக்கிறான் என்ற கேள்விக்கான பதிலை இப்படம் தருகிறது. அதேநேரம் நீங்கள் நெப்போலியனை விரும்புபவராக இருந்தாலும் வெறுப்பவராக இருந்தாலும் சரி இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும்.

நீங்கள் தீவிர நெப்போலியன் ரசிகராக இருந்தால், நீங்கள் பிரெஞ்சுக்காரர் என்றால், அவனது வாழ்வில் நிகழ்ந்த பல விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கும். நீங்கள் பிரெஞ்சுக்காரர் இல்லை என்றாலும் நெப்போலியனை உங்களுக்கு பிடிக்கும். ஏனெனில், தன் வாழ்வில் 61 முறை போருக்கு தலைமை தாங்கிய மாவீரன் அவன். மூன்று லட்சம் பேரைப் பலி கொடுத்து அவன் அடைந்த வெற்றி தோல்விகள், ஐரோப்பிய வரலாற்றில் அதுவரை இல்லாத மிகப்பெரிய ஒற்றைப் போர்க்கள வெற்றியான, ஆஸ்டர்லிட்ஸில் ரஷ்யர்கள் மற்றும் ஆஸ்திரியர்கள் மீது அவன் பெற்ற வெற்றி.

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சட்டத்தின் அடிப்படையை உருவாக்கும் சிவில் கோட் நெப்போலியன் உருவாக்கம்தான். உதாரணமாக நாம் எப்படி விசாரணை நடத்துகிறோம், எப்படி ஒரு வீட்டை வாங்குகிறோம் அல்லது விற்கிறோம், எப்படி விவாகரத்து செய்கிறோம் போன்றவை எல்லாம் நடைமுறைக் குறியீடுகள்.

நெப்போலியன் பெண் கல்வியின் மகத்தான ஆதரவாளர். மூன்று பெண்கள் அகாடமிகளை நிறுவியவர்; தனது தளபதிகள், தூதர்கள், அமைச்சர்கள் ஆகியோரை மணந்துகொள்ளும் இளம்பெண்கள் தங்கள் கணவர்களைப் போலவே கல்வி கற்றிருக்க வேண்டும் என்று கருதியவர்; அன்றைய முரண்பாடுகளுக்கு எதிராக, தனது சொந்த சகோதரிகள் நல்ல கல்வியைப் பெற உதவியவர்.  தனது இரண்டு திறமையான சகோதரிகளுக்கு இத்தாலியில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்தவர். தனக்கு விருப்பமான வாரிசாக, மனைவி ஜோசபின் தன் முதல் கணவர் மூலம் பெற்ற மகள் இருப்பார் என்று எப்போதும் கூறி வந்தவர்.

நீங்கள் நெப்போலியனைப் பிடிக்காதவராகவோ, குறிப்பாக ஆங்கிலேயராகவோ இருந்தால், அவனது கடற்படை ட்ரஃபல்கரில் நெல்சனால் தோற்கடிக்கப்பட்ட விதம், பிரிட்டனை ஆக்கிரமிக்கத் தவறிய ராஜ தந்திரமற்ற நிலை, ரஷ்ய தலையீட்டிற்குப் பிறகு அவனது பேரரசு சரிந்த விதம் ஆகியவற்றைப் பார்ப்பீர்கள்.

நெப்போலியன் சமாதானம் செய்துகொள்வதில் ஆர்வமற்றவர். சமாதான உடன்படிக்கைகளின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் சிறந்தவர் அல்ல; அதுதான் அவரது தோல்விக்கும் வழிவகுத்தது.

இந்தப் படம் பிரெஞ்சுப் புரட்சியின் போது தொடங்குகிறது. பிரான்சின் கடைசி அரசி மேரி ஆனட்டி, கில்லட் மூலம் தலை துண்டிக்கப்படுகிறாள். அரச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அப்போது, பிரான்சின் எதோ ஒரு மூலையிலிருந்து வந்து தன் திறமையால் உயர்ந்து இளம் ஜெனராலாக ராணுவ ஆயுதப் பிரிவில் பணியாற்றிய நெப்போலியன், மன்னராட்சிக்கு ஆதரவாக கிளம்பிய எழுச்சியை அடக்க அழைக்கப்படுகிறான். அவனது தலைமையின் கீழ் நிறுவப்பட்ட பீரங்கிகள் அதனை அடக்குகின்றன. தொடர்ந்து, ஐந்து உறுப்பினர்களின் உதவியுடன் அரசாளும் பொறுப்பைப் பெறுகிறான். அவர்களில் முக்கியமானவர் பராஸ். அவர்தான் பிரெஞ்சுப் புரட்சியை ஊக்குவித்தவர்.

நெப்போலியன் பிரமீடுகளை தாக்கியதற்கு காரணம் நெப்போலியனின் காம்ப்ளெக்ஸ் தான்  என்று வரலாறு குறிக்கிறது. உருவத்தில் சிறியவர்கள் உயரமானவர்கள் மீது கொள்ளும் ஒருவகை மூர்க்கம் என்று இது வகைப்படுத்தப் படுகிறது.

நெப்போலியனின் வாழ்வின் இன்னொரு முக்கியமான அம்சம் ஜோசபினுடனான அவனது காதல் திருமணம். ஆனால், அதைப் பற்றிய திரைபபடத்தின் சித்தரிப்பில் சில தவறுகள் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஜோசபின் நெப்போலியனிடம், “நீங்கள் என்னை விவாகரத்து செய்ய வேண்டும்; என்னால் ஒருபோதும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது” என்று சொல்லும் காட்சி உணர்ச்சிகரமானது.

ஜோசபின் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. என்ன நிகழப் போகிறது என்று அவளுக்குத் தெரியும். அதற்கு அவள் பயந்தாள். நெப்போலியன், அவளை உண்மையிலேயே காதலித்தான். அவளால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டான். அவன் யாரைப் பற்றியும் இப்படி உணர்ந்ததில்லை. அதனால், அவள் கர்ப்பமாக ஆசைப்பட்டாள். ஏனென்றால், அவளுடைய நிலை என்ன என்பதை அவள் அறிந்திருந்தாள்.

நெப்போலியனும் விவாகரத்தை விரும்பாததால், அவள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவளை அவன் நேசித்தான். ஆனால், அவளால் கருத்தரிக்க முடியவில்லை. அவள் தன் முந்தைய கணவன் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றவள். என்றாலும், கர்ப்ப பிரச்சினையால் நெப்போலியனுக்கு வாரிசை அளிக்க முடியாமல் பிரிய நேர்கிறது.

பாரிஸில் உள்ள டுயிலரீஸ் அரண்மனையில் உள்ள சிம்மாசன அறையில் நடைபெற்ற இவர்கள் மணப்பிரிவு விழா, கிரேக்க சோகத்தின் அனைத்து கூறுகளும் இருக்கும்படியாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஜோசஃபின் திருமண ஆடையை வெளிப்படுத்தும் வெள்ளை கவுனை அணிந்திருக்கிறாள். தம்பதிகள் நன்றியுணர்வையும் நீடித்த அன்பையும் பரிமாறிக் கொண்டபின் நெப்போலியன் அறிவிக்கிறான். “நான் அவளை விரும்புகிறேன். அவளுக்கான என் உணர்வுகளை ஒருபோதும் யாரும் சந்தேகிக்க வேண்டாம்; அவள் எப்போதும் என் சிறந்த மற்றும் என் அன்பான தோழியாக இருப்பாள்.”

பதிலுக்கு ஜோசஃபின் பேசுகிறாள்: “அவரது அரசியல் தேவைகள் மற்றும் பிரான்சின் நன்மை இரண்டையும் சாத்தியப்படுத்தக்கூடிய ஒரு குழந்தைக்கு இனி என்னிடம் எந்த நம்பிக்கையும் இல்லை என்று நான் அறிவிக்க விரும்புகிறேன்.” தொடர்ந்து பேச முடியாமல் அவள் தடுமாறி, அழுதுகொண்டே, அவளுடைய அறிக்கையை வேறு யாராவது படித்து முடிக்க முடியுமா என்று கேட்கிறாள்.

ஜனவரி 1810இல் நெப்போலியன் – ஜோசஃபின் திருமணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுகிறது.

ஜோசஃபின் சக்திவாய்ந்த ஆண்களுடன் தன்னை இணைத்துக்கொள்வதில் திறமைமிக்கவள். தன்னிடமிருப்பவர் நழுவுவதைக் கண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் மனிதனைத் தேடுவாள். 1814இல் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு எல்பாவுக்கு அனுப்பப்பட்டபோது, ஜோசபின் ஜார் அலெக்சாண்டருடன் தன்னை இணைத்துக்கொண்டு அவனது எஜமானியாக மாற முயற்சிக்கிறாள். ஆனால், அவள் மிகவும் குளிரான நாளில் மிகவும் மெல்லிய ஆடையை அணிந்திருந்ததால், அலெக்சாண்டரை தேநீர் அருந்த அழைக்கும் போது நிமோனியா போன்ற ஒரு நோயால் இறந்துவிடுகிறாள்.

பிரான்ஸ், இங்கிலாந்து இடையேயான அக்கால விரோதம், இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் புவிசார் அரசியல் போட்டி படத்தில் சிறப்பாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அன்று பிரிட்டனும் பிரான்சும் மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரும் இரண்டு சக்திகளாக இருந்தன. பிரிட்டன் அதன் கடல் வலிமை மற்றும் நிதி வலிமையின் அடிப்படையில் எப்போதும் முன்னிலையில் இருந்தது. பிரான்சை விட அதிநவீனமானது. பிரான்ஸ் மக்கள் போராடிய போது பிரெஞ்சுப் புரட்சி இங்கு நடக்கலாம் என்று ஆங்கிலேயர்களே அச்சமடைந்தனர். அவர்கள் நெப்போலியனை பிரெஞ்சுப் புரட்சியின் நீட்சியாகவே பார்த்தார்கள். ஆனால், நெப்போலியன் போர்களில் செலுத்திய முக்கியத்துவத்தை ஆட்சியில் செலுத்தவில்லை என்ற குறிப்புகளும் இருக்கின்றன.

1821ஆம் ஆண்டு இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய மூன்று வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாகவே சொல்கிறது. அதே காலத்தை உறுதிப்படுத்தும் அரங்குகள், நடிகர்கள், உடைகள், போர் தளவாடங்கள், மிருகங்கள், போர், வெடி குண்டுகள், போர் ஆயுதங்கள், பனி, கோடைகாலம், வசந்தகாலம் எல்லாம் நேரத்தியாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. எண்ணற்ற கனவுகளைக் கொண்டிருந்த ஒரு மேஜர் ஜெனரல், தன் கனவை அடைய துணைக்குத் தேடிய உயர் சீமாட்டி, அவர்கள் காதல், அவனின் வெற்றி, அவர்களின் பிரிவு – இதெல்லாம் உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.

போர் வீரனாக, காதலனாக, அரசாங்க தலைமையாளனாக, நண்பனாக, தளபதியாக ஹாக்கின் ஃபீனிக்ஸூம், நெப்போலியன் காதல் மனைவியாக கிர்பியும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய சவால் வரலாற்றின் வருடங்களை மணிகளில் சுருக்குவது. இந்த சவாலை சரியாகவும் தவறாகவும் ரிட்லி ஸ்காட் படத்தில் கடந்திருப்பதாகச் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்த சிறு குறைகளை எல்லாம் கடந்தும் படம் உங்களுக்கு பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...