எப்பொழுதாவது தோன்றும் நட்சத்திரம்தான் துருவ நட்சத்திரம். இப்படியொரு பெயரை தன் படத்திற்கு கெளதம் வாசுதேவ் மேனன் வைத்ததாலோ என்னவோ ‘துருவ நட்சத்திரம்’ படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது.
பல ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பிறகு இந்த நவம்பர் 24-ம் தேதி துருவ நட்சத்திரம் வெளியாக இருக்கிறது. இதில் விக்ரம் நடித்திருக்கிறார். இவர் இப்படத்தில் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு ‘லியோ’வில் பேசிய அந்த கெட்ட வார்த்தை அளவிற்கு சர்ச்சைகள் கிளம்பவில்லை.
துருவ நட்சத்திரம் படமானது ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மாதிரி சீக்குவல்களாக எடுக்க வாய்ப்புள்ள கதையம்சமுள்ள படம். இதனாலேயே இந்த படத்திற்கு ’பாகம் ஒன்று- யுத்த காண்டம்’ என்று கெளதம் வாசுதேவ் மேனன் பெயர் சூட்டியிருக்கிறார்.
உண்மையைச் சொல்ல போனால், இந்த கதையில் நடித்திருக்க வேண்டியது சூர்யாவும், ரஜினியும்தான். துருவ நட்சத்திரம் கதை தயாரானதுமே கெளதம் வாசுதேவ் மேனன், முதல் அணுகியது சூர்யாவை.
’வாரணம் ஆயிரம்’ படம் மூலம் உண்டான நட்பின் அடிப்படையில் கெளதம் வாசுதேவ் மேனன், சூர்யாவிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார். கதையை முழுவதுமாக கேட்ட சூர்யா, கதையில் ஆங்காங்கே சரிசெய்ய வேண்டியிருக்கிறது. அதனால் செட் ஆகுமா என தெரியவில்லை என ஒதுங்கிக் கொண்டார்.
மனம் தளராத கெளதம் வாசுதேவ் மேனன், கதையில் சில மாற்றங்களை செய்து கொண்டு ரஜினியைப் பார்த்திருக்கிறார். ரஜினியும் பொறுமையாக கதையைக் கேட்டிருக்கிறார். அவருக்கு கதையும் பிடித்து போனது. ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு நகராமலேயே போய்விட்டது.
சூர்யாவும், ரஜினியும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று ஒகே சொல்லிவிட்டார் விக்ரம். இதன் பிறகே துருவ நட்சத்திரம் ஆரம்பமானது.
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு கதை சொல்ல போன கெளதம் வாசுதேவ் மேனன் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ கதையைச் சொன்னார். அதுவும் பல காரணங்களால் நடைபெறாமல் தடைப்பட்டு நின்று விட்டது. காரணம் அதில் தமிழுக்குப் பதில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருந்ததால் விஜய் எனக்கு செட்டாகாது என்று ஒதுங்கி கொண்டார்.
அந்த கதையில் சில மாற்றங்களை செய்துதான் இப்போது துருவ நட்சத்திரம் படமாக களத்தி இறக்கிவிட இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
மிருணாள் தாக்கூரின் காதலர் இவரா?
‘சீதாராமம்’ என்ற ஒரே படம்தான். தெலுங்கிலும், தமிழிலும், ஹிந்தியிலும் கொண்டாடப்பட்ட கதாநாயகி ஆனார் மிருணாள் தாக்கூர்.
இவர் ஏற்கனவே ஹிந்திப் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர்தான். ஆனால் அங்கே பெரியளவில் இவருக்கென்று ஒரு மார்க்கெட் இல்லை. இப்படியொரு சூழலில்தான் தென்னிந்திய சினிமாவில் நுழைவதற்கு ‘சீதா ராமம்’ ஒரு விசிட்டிங் கார்ட் ஆக அமைந்தது.
இந்தப்படம் பான் – இந்தியா அளவில் ஹிட்டடித்தாலும், அடுத்தப் படம் எதிலும் நடிக்காமலேயே இருந்துவந்தார் மிருணாள் தாக்கூர். இந்நிலையில்தான் இப்போத் தமிழில் சிவகார்த்திகேயன் கூட நடிக்க இருக்கிறார்.
‘நான் சிங்கிள்தான்’ என்று பேட்டியெல்லாம் கொடுத்தவர் இப்போது காதல் வலையில் விழுந்துவிட்டாரோ அல்லது காதலை மறைக்கிறாரோ என்று சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
திடீரென இப்படியொரு பேச்சு கிளம்ப காரணம், இந்த தீபாவளிக்கு செதுக்கிய சிலையைப் போல் அழகாய் இருக்கும் பாலிவுட்டின் ஷில்பா ஷெட்டி ஒரு விருந்து கொடுத்தார். இதில் மிருணாள் தாக்கூரும் கலந்து கொண்டார். ஆனால் இவர் கூடவே ஒட்டிக்கொண்டு ஒரு பாடகர் ஒருவரும் கலந்து கொண்டாராம். அவர் பெயர் பாட்ஷா.
இவர்கள் இருவரும் ஷில்பாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்துதான் இப்போது இணையத்தில் மிருணாள் பாட்ஷாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா. இருவரும் டேட்டிங் போகிறார்களா என்று கேள்விகள் எழுப்பட்டு இருக்கின்றன.
இப்படியொரு பேச்சு எழக்காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான பாட்ஷாவின் ‘குட் பாய் பேட் கேர்ள்’ என்னும் மியூசிக் ஆல்பத்தில் மிருணாள் தாக்கூர் நடித்திருப்பார். அப்போது உருவான நட்பா அல்லது காதலா என மிருணாள் தாக்கூர் சொல்லாதவரை நெட்டிசன்களுக்கு இது ஒரு டேட்டிங் சமாச்சாரம்தான்.
கார்த்தி படத்தில் இருந்து விலகிய பி.சி.ஸ்ரீராம்
‘ஜப்பான்’ பட த்தை பெரிதும் நம்பியிருந்தார் கார்த்தி. தனது 25-வது படம் பேசப்படும் படமாக இருக்கவேண்டும். வசூல் இல்லாவிட்டாலும் கெளரவமான படமாக இருந்தால் போதுமென்று நினைத்தார் கார்த்தி.
ஆனால் ஜப்பான் கார்த்தியின் காலை வாரி விட்டிருக்கிறது.
இதனால் மனம் நொந்துப் போகாமல் அடுத்தப்பட வேலைகளில் மும்முரமாகி இருக்கிறார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தின் ஷூட்டின் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இதனால் அடுத்து 96 பட இயக்குநர் ராம்குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படம் 96 படம் போல் காதல் கதையில்லை. ஒரு மனிதனின் உறவை, போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு கனமான கதையாம். இதில் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பது போல் திரைக்கதை நகர்கிறதாம்.
இருட்டில் மிரட்டுவது பி.சி. ஸ்ரீராம்தான். அதனால் அவரையே ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யலாம் என்று ராம்குமார் சொல்ல, அதைக்கேட்ட பி.சி.ஸ்ரீராம் ஓகே சொல்லிவிட்டார்.
ஆனால் இப்போது பி.சி. ஸ்ரீராம் அந்தப் படத்திலிருந்து திடீரென விலகிவிட்டாராம். ஏதாவது பிரச்சினையா என்று விசாரித்தால், இரவு நேர ஷூட்டிங் என்றால் நள்ளிரவிலிருந்து அதிகாலை 2 அல்லது 3 மணி வரை ஷூட்டிங் நடக்கும். இதனால் தூக்கம் வெகுவாக பாதிக்கப்படும். இப்படி கண் முழிப்பது உங்களுடைய உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் பி.சி.ஸ்ரீராமிடம் கூறியிருக்கிறார்கள்.
இதனால்தான் பி.சி, ஸ்ரீராம் கார்த்தி படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறுகிறார்கள்.