No menu items!

வேகம் குறையும் ரயில்கள் – காரணம் வந்தே பாரத்தா?

வேகம் குறையும் ரயில்கள் – காரணம் வந்தே பாரத்தா?

நீண்ட தூர பயணம் என்றாலே பேருந்துகளைவிட பலரும் ரயில்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது இதற்கு ஒரு காரணம் என்றால், ரயில்கள் விரைவாக செல்லும் என்ற மக்களின் நம்பிக்கையும் இதற்கு மற்றொரு காரணம். ரயில்கள் வேகமாக செல்வதால் தங்களின் நேரம் மிச்சமாகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ரயில்வே துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் இந்த நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது.

இந்தியாவில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக இரயில்வே துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. இதன்படி சரக்கு இரயில் மற்றும் பயணிகள் இரயில் ஆகிய இரண்டு வித ரயில்களின் வேகமும் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு ஐந்து கிலோமீட்டர் (5kmph) என்ற அளவில் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

புறநகர் பகுதிகளில் இயங்கும் பயணிகள் ரயில்களை விடுத்து, மற்ற பயணிகள் இரயில் அனைத்தும், 2022-2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில் மட்டும் சராசரியாக 42.3 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன. இதே ரயில்கள் கடந்த ஆண்டில் 47.6 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டு இருந்தன. அந்த வகையில் பார்த்தால் இந்த ரயில்களின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு 5 கிலோமீட்டர் என்ற அளவில் குறைந்துள்ளது.

இதே போன்று, சரக்கு இரயில் 2022-2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில் மட்டும் 25.8 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன. இது முந்தைய ஆண்டில் மணிக்கு 31.7 கிலோமீட்டராக இருந்தது.
நாட்டின் மற்ற பகுதிகளில் செல்லும் ரயில்களைவிட, வடமேற்கு பகுதிகளில் செல்லும் பயணிகள் இரயில்களின் வேகம் அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் ரயில்களின் வேகம் மணிக்கு 51.5 கிலோமீட்டராக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ரயில்களைவிட வட கிழக்கு வழியாக செல்லும் பயணிகள் இரயில்களின் வேகம் குறைவாக உள்ளது. இப்பகுதிகளில் செல்லும் ரயில்கள் சராசரியாக மணிக்கு 34.1 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில் செல்லும் பயணிகள் இரயில்தான் மிகவும் குறைந்த வேகத்தில் செல்வதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டை விட 4.9kmph குறைந்த வேகத்தில் சென்றதாக தரவுகள் கூறுகின்றது.

தெற்கு பகுதிகளில் செல்லும் சரக்கு இரயில்கள் சராசரியாக கிழக்கு பகுதி வழியாக செல்லும் சரக்கு இரயில்களை(16.6 kmph) விட அதிக வேகத்தில் (41.2 kmph) செல்வதாக தரவுகள் கூறுகின்றன.

மேற்கு மத்திய ரயில்வே வழியாக செல்லும் இரயில்கள் கடந்த ஆண்டை விட குறைந்த வேகத்தில் சென்றுள்ளதாகவும் இந்த தரவுகள் கூறுகின்றன.

அதிக விளம்பரத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்காக மற்ற ரயில்களின் வேகத்தை ரயில்வே துறை குறைக்கின்றன என்று எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்த ஆய்வின் முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ என்று தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...