மூன்று மரணங்கள் இன்றைய செய்திகளை ஆக்கிரமித்து இருக்கின்றன.
அவர்களில் இருவர் கோடிகளில் புரண்ட பெரும் முதலாளிகள் சுப்ரதா ராய், பிக்கி ஒபராய்.
மற்றொருவர் தொழிலாளிகளுக்காகவே வாழ்ந்த பெருமை மிக்க தலைவர் சங்கரய்யா.
மறைந்த இரண்டு கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் சுப்ரதா ராய். இவர் சாமானியனாக இருந்து பல்லாயிரம் கோடி சஹாரா சாம்ராஜ்யத்தை நிறுவியவர். பணத்துக்கு மட்டுமில்லை, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவர்.
பீகார் மாநிலத்தில் மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரதா. அவரது குடும்பம் அங்கிருந்து உத்தரப்பிரதேச கோராக்பூருக்கு குடிபெயர்கிறது. அரசுக் கல்லூரியில் பொறியியல் டிப்ளமா படிப்பு. அப்பா தவறிவிட குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு சுப்ரதாவிடம் வருகிறது. லம்ப்ரட்டா ஸ்கூட்டரில் சிப்ஸ் போன்ற பொருட்களை தெருத் தெருவாக விற்றதுதான் சுப்ரதாவின் முதல் பிசினஸ். பல கோடிகளை சம்பாதித்தப் பின்னும் அவர் பயன்படுத்திய லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் ஒரு கண்ணாடி அறையில் அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1976ல் 28 வயதில் சஹாரா ஃபைனான்ஸ் என்று சீட்டு நிறுவனம் ஒன்றில் தனது தொழில் பயணத்தை துவங்குகிறார் சுப்ரதா. சின்னதாய் தொடங்கிய இந்த நிதி நிறுவனம் இரண்டு வருடங்களில் மெல்ல வளர்கிறது. 1978ல் அந்த நிறுவனத்தை வாங்கும் சுப்ரதா அதை வேறு முறைகளில் பெரிதாக்க திட்டமிடுகிறார். அவர் போட்ட திட்டங்களால் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கிறது. இங்கே தொடங்கிய சுப்ரதாவின் வளர்ச்சி 12 லட்சம் ஊழியர்கள், 9 கோடி முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட், மீடியா, நிதி, மின்சாரம், கட்டுமானம் என பல துறைகளிலும் வளர்ந்து இந்தியாவின் மிக முக்கியமான தொழில் குழுமமாக உருவெடுத்தது.
சுப்ரதாவின் வளர்ச்சியைப் போல சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அவர் தொழில் செய்யும் விதம் வழக்கமான பாணியில் இருக்காது. அவரது தடாலடியான முடிவுகள் வினோதமாக இருந்தது. ஆனால் வெற்றியைத் தந்தது.
சஹாரா நிறுவனத்துக்கு 2014ல் மிகப் பெரிய சறுக்கல். சுப்ரதா மீது இருபதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் வந்தன. வழக்கு, விசாரணை, சிறை என்று அவரது வாழ்க்கை மாறியது. இந்த தடுமாற்றங்களிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இருப்பதைக் காப்பற்றிக் கொள்ள போராடவே அவருக்கு சரியாக இருந்தது.
இன்று இறக்கும்போது அவரது வயது 75. சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்.
மறைந்த இன்னொரு கோடீஸ்வரர் பிரித்வி ராஜ் சிங் ஒபராய் சுருக்கமாக பிக்கி ஓபராய் பிறக்கும்போதே பணக்காரர். அவரது தந்தை ஒபராய் ஓட்டல் நிறுவனர். தந்தை மற்றும் அண்ணனின் மறைவுக்குப் பிறகு குடும்ப ஓட்டல் தொழில் பிக்கி ஒபராயிடம் வருகிறது. அதை எப்படி சீர் செய்து இந்தியாவின் மிக முக்கியமான ஓட்டல்களாக ஒபராய் ஓட்டல்களாக மாற்றினார் என்பதுதான் அவரது சாதனை வரலாறு.
பிறந்தது கோடீஸ்வர குடும்பத்தில் என்பதால் வெளிநாட்டில் உயர் கல்வி பெற்று இந்தியா வருகிறார் பிக்கி. அப்பாவும் அண்ணனும் நடத்திக் கொண்டிருந்த ஓட்டல் தொழிலில் அவர்களுக்கு உதவுகிறார். பின்னர் தன்னிடம் அந்தப் பொறூப்பு வந்த போது ஒபராய் ஓட்டல்களின் முகத்தையே மாற்றுகிறார்.
இது போன்ற பெரும் முதலாளிகளை எதிர்த்தும் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளிகளுக்காகவும் வாழ்ந்து இறுதிவரை இடதுசாரி கொள்கைகளுடன் போராளியாக சங்கரய்யாவும் காலமாகிவிட்டார். (பார்க்க தனிக் கட்டுரை)