இன்றைய நிலவரப்படி ரஜினியும், விஜய்யும் 200 கோடி வரை சம்பளம் கேட்கிறார்கள் என்பதுதான் கோலிவுட் வர்த்தக வட்டத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
இவர்களின் படம் பற்றிய வசூல் இவ்வளவா, அவ்வளவா, உண்மையா, பொய்யா என எழாத சர்ச்சைகள் இல்லை. இருந்தும் இவர்கள் இருவரும் 200 கோடி வரை சம்பளம் கேட்பது ஏன்?
ரஜினி மற்றும் விஜய் நடிக்கும் படங்களுக்கு நடக்கும் வியாபாரத்தில், திரையங்கு அல்லாத உரிமை மிக அதிக விலைக்கு போகிறது என்கிறார்கள்.
இன்றைய இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்து மளமளவென ஷூட்டிங்கை முடித்துவிடுகிறார்கள். இதனால் பெரிய படங்களாக இருந்தாலும், பட்ஜெட்டில் பாதகம் இல்லாமல் பார்த்து கொள்கிறார்கள்.
படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
ரஜினி, விஜய் இவர்கள் இருவரைப் பொறுத்தவரை, இவர்களது படங்களுக்கு பெரிய வியாபாரம் இருக்கிறது. பெரிய மார்கெட் இருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இதர மொழிகளிலும் இவர்களது படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது.
இதன் மூலம் பெரும் மார்க்கெட் உள்ள ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமை மற்றும் திரையரங்கு சாராத இதர உரிமைகளின் மூலம் பெரும் வியாபாரத்தை மேற்கொள்ள உதவுகிறார்கள்.
சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ மற்றும் ‘லியோ’ போன்ற படங்கள், வியாபாரத்தில் 350 கோடிக்கும் அதிகம் பார்த்துவிடுகின்றன. அதிலும் இயக்குநருக்கு என்று ஒரு தனி எதிர்பார்பு இருந்தால், வியாபாரம் 450 கோடிக்கும் அதிகம் போய்விடுகிறது.
இதனால்தான் தயாரிப்பாளர்கள் ரஜினி, விஜய்க்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
கேஜிஎஃப் இயக்குநரால் பெரும் நஷ்டம்!
கேஜிஎஃப் வரிசைப் படங்களின் வெற்றியை ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆச்சர்யத்துடன் கொண்டாடியது. இதனால் கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் மீது எக்கச்சக்கமான எதிர்பார்பு உருவானது.
பிரஷாந்த் நீல் இயக்கவிருக்கும் அடுத்தப்படம் என்ன என்ற கேள்விக்கு பதிலாக அமைந்த படம் ‘சலார்’. கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படங்களை எடுத்த ஹொம்பாளே ஃப்லிம்ஸ் தயாரிப்பில் கேஜிஎஃப் இயக்குநர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இருவரும் இணைகிறார்கள் என்றதுமே பரபரப்பு பற்றிக்கொண்டது.
இந்தப்படம் நிச்சயம் வசூலில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என பட அறிவிப்பு வெளியான போதே ஆளாளுக்கு ஜோதிடம் கூற ஆரம்பித்தார்கள்.
ஆனால் இப்படத்தின் ஷுட் முடிந்து, ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது என்ற நினைத்த போதுதான் குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ‘சலார்’ ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூற, ஹொம்பாளே ஃப்லிம்ஸ் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
பிரபாஸ் ஸ்பாட்டில் வந்து நின்ற போதே ஒட்டுமொத்த சலார் படக்குழுவுக்கு உற்சாகம். அதே சூட்டில் ஷூட்டிங் முடிந்தது. ஆனால் ஷூட்டிங் முடிந்த பின்பே பிரச்சினைகள் ஆரம்பித்ததாம்.
ஷூட் பண்ணிய ஃபுட்டேஜை பார்த்த பிரஷாந்த் நீல், பல காட்சிகளை மீண்டும் ஷூட் செய்யவேண்டுமென கூற, தயாரிப்பாளருக்கு தலைச்சுற்ற ஆரம்பித்துவிட்டதாம். மிகப்பெரும் எதிர்பார்புக்குள்ளான படம் என்பதால், பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் ஷூட் செய்திருக்கிறார்கள். ஆனால் பிரஷாந்த் நீல் சொன்னதால், பல காட்சிகளை திரும்பவும் ஷூட் செய்திருக்கிறார்கள்.
இத்தோடு பஞ்சாயத்து முடியவில்லையாம். கதைக்கு சரியாக அமையவில்லை என்று பிரஷாந்த் நீல் கத்திரிப் போட்ட காட்சிகளின் நீளம் மிக அதிகம் என்கிறார்கள். பிரபாஸ் மற்றும் ப்ரித்விராஜ் இவர்கள் இருவருக்குமான இளம்பருவத்தில் நடப்பதாக எடுக்கப்பட்ட காட்சிகளை வேண்டாமென பிரஷாந்த் நீல் தூக்கி எறிந்துவிட்டாராம். இதனால் படத்தின் பட்ஜெட் பல மடங்கு எகிறியிருக்கிறதாம்.
இந்த இரண்டு பிரச்சினையால் ‘சலார்’ வெளியீடு தள்ளிப் போய் இருக்கிறது. ரிலீஸ் தள்ளிப்போனதால் திரையரங்கு உரிமை மற்றும் திரையரங்கு சாராத உரிமை ஆகியவற்றின் மூலம் கிடைக்கு வியாபாரம் அப்படத்தயாரிப்பாளர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையாம். மேலும் ஷாரூக்கான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ’Dunki’ படத்துடன் போட்டியிட வேண்டிய சூழலும் இப்போது உருவாகி இருக்கிறது. இதனால் வசூல் பாதிக்கப்படலாம் என ஹொம்பாளே ப்லிம்ஸ் தரப்பில் யோசிக்கப்படுகிறதாம். பெரும் தொகையை கொடுக்கும் என எதிர்பார்த்த ஓடிடி- தளங்கள் தாங்கள் குறிப்பிட்ட விலையில் கறாராக இருக்கின்றனவாம்.
இப்படி நாலாப்புறமும் இடிக்க, ஹொம்பாளே ஃப்லிம்ஸூக்கு இப்போதே பலகோடிகள் கைவிட்டு போயிருப்பதாக கூறுகிறார்கள்.
‘சலார்’ மூலம் வசூலில் லாபம் அள்ளலாம் என்றாலும் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாக கிடைக்கும் சூழல் நிலவுவதால் என்ன செய்வது என ஹொம்பாளே குழப்பத்தில் இருக்கிறதாம்.
தமன்னாவும் விக்னேஷ் சிவனும்..
ஒரு நடிகைக்கு ஒரு எதிர்கால இயக்குநர் கதை சொல்ல போக, அங்கே கதை எடுப்பட்டதோ இல்லையோ அவர்கள் இருவருக்குமிடையே காதல் நன்றாகவே எடுப்பட்டது. அந்த காதல் ஒரு வழியாக திருமணமாகவும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது. இதுதான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த காதல் கதையின் ஒன்லைன்.
நயன்தாரா உச்சத்தில் இருப்பதால், தனது செல்வாக்கை பயன்படுத்தி லைகா ப்ரொடக்ஷனில் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பை தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாங்கி கொடுத்தார்.
ஆனால் இரண்டு கதைகள் சொன்ன விக்னேஷ் சிவனால், அந்த கதையை திரைப்படமாக எடுக்க ஷூட்டிங் வரை கூட போக முடியவில்லை. கிடைத்த பெரிய வாய்ப்பை நழுவ விட்டார். இதனால் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மீது வருத்தம்தான்.
ஆனால் வருத்தப்பட்டு கொண்டு இருக்க முடியாது என பாலிவுட்டில் நடிப்பதற்காக அட்லீ விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மும்பைக்கு கிளம்பினார். ‘ஜவான்’ படத்தில் நடித்தார்.
நயன் மும்பைக்குப் பறந்த இந்த இடைவெளியில் விக்னேஷ் சிவன் விளம்பர படங்கள் எடுத்தார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் வெளியானது. அப்போது ‘காவாலா’ என்று பரபரப்பை கிளப்பிய தமன்னாவும் சென்னை பக்கம் வந்தார்.
தமன்னாவை விக்னேஷ் சிவன் சந்தித்தார். ஒரு கதை சொல்வதற்காகதான் என்கிறார்கள்.
தமன்னாவுக்கு விக்னேஷ் சிவனின் கதை பிடித்ததோ இல்லையோ, கதை சொன்னவரை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.