மணிரத்னமும், கமலும் ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்திற்கு ‘தக் லைஃப்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரையில் தான் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் அழகிய தமிழ் பெயர்களைச் சூட்டியவர் மணிரத்னம்.
இப்போது திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் போது, தமிழில் எப்படியெல்லாம் பெயர் வைக்கலாம என எல்லோராலும் உதாரணமாக காட்டப்பட்டவர் மணிரத்னம். ஆனால் அவரே இப்படி ஒரு ’தக்’ டைட்டிலை தன் படத்திற்கு வைப்பாரா என்று முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது
அதேபோல் சமீபத்தில்தான் ’மாமன்னன்’ படவிழாவில் ’விருமாண்டி’ படச்சர்ச்சையைக் கிளப்பினார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதாவது சாதி சார்ந்த ஒரு பஞ்சாயத்து அது. இதற்கு கமல் விருமாண்டி பட சமயத்தில் பேசிய பேட்டியையும் கூட தேடிப்பிடித்து இணையத்தில் வெளியிட்டார்கள் நெட்டின்சன்கள்
ஆனால் இவ்வளவு பஞ்சாயத்திற்குப் பிறகு கூட கமலின் 234-வது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்று சாதிப்பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
சாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கமல் கூட இப்போது சாதிப்பெயருடைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த இரண்டு பஞ்சாயத்துகளும் ஓய்வதற்கு உள்ளாகவே, வேறொரு கிண்டலும் கிளம்பியிருக்கிறது.
அதாவது #justiceforatlee என்ற ஹேஷ்டேக்குடன் தக் லைஃப் படத்தின் முதல் பார்வை டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் பக்கத்திலேயே 2019-ல் வெளியான ‘Rise of Sky walker’ படத்தின் போஸ்டரையும் வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டையும் பார்க்கும் போது ஒரே மாதிரியாக இருக்கிறது.