உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்திருக்கிறார் ஆஞ்சலோ மேத்யூஸ். வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனதாக அறிவிக்குமாறு வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கேட்க, அதன்படி அவர் அவுட் ஆனதாக நடுவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த முறையில் ஒரு வீரரை அவுட் ஆக்குவது தார்மீக ரீதியில் சரிதானா என்ற விவாதம் எழுந்துள்ளது.
டைம் அவுட் முறை என்றால் என்ன?
சர்வதேச கிரிக்கெட் விதி 40.1-ன்படி ஒரு வீர்ர் அவுட்டானால், அடுத்ததாக ஆடவரும் வீர்ர் 3 நிமிடங்களுக்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். அப்படி 3 நிமிடங்களுக்குள் அந்த பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளாவிட்டால், டைம் அவுட் முறையில் அவர் ஆட்டம் இழந்ததாக அறிவிக்குமாறு நடுவரிடம் எதிரணி வீர்ர்கள் கோரலாம். அப்படி அவர்கள் கோரினால், நடுவர் அந்த பேட்ஸ்மேன் அவுட் ஆனதாக அறிவிக்க வேண்டும். இந்த முறையில் ஒரு வீர்ருக்கு அவுட் கொடுக்கப்பட்டால், அது பந்துவீச்சாளரின் கணக்கில் சேராது.
மேத்யூஸ் விஷயத்தில் நடந்தது என்ன?
வங்கதேசம் – இலங்கை இடையிலான போட்டியில் ஷகிப் அல் ஹசன் வீசிய 25-வது ஓவரில் சமரவிக்ரமா அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அடுத்த பேட்ஸ்மேனான மேத்யூஸ் 3 நிமிடங்களுக்குள் அடுத்த பந்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். மைதானத்துக்குள் வந்த மேத்யூஸும் ஷகிப்பின் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார். ஆனால் ஷகிப் பந்தை வீச ஆரம்பித்த நிலையில், திடீரென்று ஹெல்மெட்டை கழற்றினார். வேறு ஹெல்மெட்டை கொண்டுவருமாறு சக வீர்ர்களுக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் அவர் அடுத்த பந்தை சந்திப்பதற்கான நேரம் 3 நிமிடத்துக்கும் அதிகமானது.
இதைத்தொடர்ந்து மேத்யூஸ் அவுட் ஆனதாக அறிவிக்குமாறு நடுவரிடம் ஷகிப் அல் ஹசன் முறையிட்டார். உங்கள் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறீர்களா என்று அம்பயர் கேட்டதற்கு, தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவிக்க, வேறு வழியின்றி அம்பயர் மேத்யூஸுக்கு அவுட் கொடுத்தார்.
பிரிந்து நின்ற கிரிக்கெட் உலகம்
கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்வார்கள். கண்ணியமான முறையில் இந்த ஆட்டத்தை ஒவ்வொரு வீரரும் அணுக வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், மேத்யூஸ் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாத நிலையில், டைம் அவுட் முறையில் ஷகிப் அல் ஹசன் அவரை அவுட் ஆக்கியது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேத்யூஸை ஷகிப் எச்ச்சரித்து விட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் தனது அணியின் வெற்றிக்காக ஒரு வீர்ர் எந்த எல்லைக்கும் செல்லலாம். அதைத்தான் ஷகிப் செய்துள்ளார் என்று அவருக்கு ஆதராவக மற்றொரு பிரிவினர் சொல்கிறார்கள். மொத்தத்தில் இந்த விஷயத்தில் கிரிக்கெட் உலகம் இரண்டாக பிரிந்திருக்கிறது.
ஷகிப்பின் விளக்கம்
தான் செய்தது சரியா தவறா என்ற விவாதம் நடந்துகொண்டு இருக்க, இதுபற்றிய விளக்கம் ஒன்றை ஷகிப் அல் ஹசன் அளித்துள்ளார். ” இது விதிமுறைகளில் இருக்கும் விஷயம்தான். இது சரியா தவறா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. என் அணியின் வெற்றிக்கு உதவும் என்பதாலேயே நான் அம்பயரிடம் அவுட் கேட்டு முறையிட்டேன்” என்று தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார் ஷகிப் அல் ஹசன்.
அதே நேரத்தில் வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது, அவரை அவுட் ஆக்கி பழிவாங்கி இருக்கிறார் ஆஞ்சலோ மேத்யூஸ்.
இத்தனை போராட்டம் எதற்காக?
இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயித்தாலும், உலகக் கோப்பையின் அரை இறுதிச் சுற்றுக்கு வங்கதேச அணியால் தகுதி பெற முடியாது. அப்படி இருக்கும்போது எதற்காக இப்போட்டியில் ஜெயிக்க இத்தனை ஆவேசம் என்ற கேள்வி எழலாம். இதெல்லாம் சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் பிடிக்கத்தான். பாகிஸ்தானில் வரும் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒருநாள் போட்டித்தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணியால் மட்டுமே இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஆட முடியும். அதனாலேயே இப்போட்டியில் வென்று முதல் 7 இடங்களுக்குள் வர இரு அணிகளும் ஆர்வம் காட்டியுள்ளன.