ஜெகநாத் நடராஜன்
அமெரிக்காவில் 1920 வாக்கில் ஓக்லஹாமா ஓஸேஜ் மாகாணத்தில் தானே பீறிட்டுக் கிளம்பிய எண்ணைய் வளத்தால், அப்பகுதியின் பூர்வ குடியினரான ‘ஓசேஜ் நேசன்’ (Osage Nation) என்ற செவ்வியந்தர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினர். அதனையடுத்து, அந்த நிலத்தின் மீதும் வளத்தின் மீதும் அப்பூர்வ குடிகள் கொண்டிருக்கும் உரிமையைப் பறிக்கவும் அவர்களை ஒழிக்கவும், வெள்ளையர்கள் இழைத்த சதி, துரோகம், 1921 முதல் 1926 வரை செய்யப்பட்ட எண்பதுக்கும் மேற்பட்ட கொலைகள், அக்கொலைகளைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட சிபிஐ அமைப்பு எல்லாவற்றையும் பற்றி பத்திரிகையாளர் டேவிட் கிரானால் எழுதப்பட்ட நூல், The Killers of the Flower Moon: The Osage Murders and the birth of FBI. இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான், The Killers of the Flower Moon.
இந்தப் புத்தகம் 2017ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக டைம் மேகஸினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. மார்டீன் ஸ்கார்சஸியும் டிகாப்ரியோவும் இணைந்து இதனைத் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் இணைந்து கொடுக்கும் ஏழாவது படைப்பு இது.
“எனக்கும் லியோனோர்டா டிகாப்ரியோவுக்கும் இருக்கும் பொதுவான மேனேஜர் மூலம் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்தது. படித்து பல ஆண்டுகளாக அசை போட்டுக் கொண்டிருந்தேன். கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது என குழம்பினேன். மீண்டும் மீண்டு எழுதிப் பார்த்தேன். காதலெனும் பெயரால், கருணையெனும் பெயரால், நட்பு எனும் பெயரால் நிகழ்ந்த இக் கொடூரத்தை அதன் தன்மை கெடாமல் எழுத சிரத்தை எடுத்துக்கொண்டேன். இது அமெரிக்கர்களுக்கு கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்காத பாடம். நாம் வாழ்ந்த மோசமான வாழ்விற்கு இது ஒரு உதாரணம்” என்று, இப்புத்தகம் தன்னைப் படமெடுக்கத் தூண்டிய விதத்தைக் குறிப்பிடுகிறார், இந்தப் படத்தின் இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி.
‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ என்ற தலைப்பு மிகவும் பின்னர் உருவாக்கப்பட்டது. ‘மலர் நிலவு’ என்பது பூர்வ குடிகளின் பஞ்சாங்கத்தில் இருந்து வந்த ஒரு சொல். இயற்கைச் சீரழிவுகளை முன்னறிவிக்கும் பஞ்சாங்கம் ஒவ்வொரு மாதாந்திர பௌர்ணமிக்கும், அது நிகழும் நேரத்தில், அந்த நிலப்பரப்பில் என்ன நிகழும் என்பதை முன்னறிவிக்கிறது. முழு நிலவு, ஜனவரி மாதம் ஓநாய் நிலவு என்றும், பிப்ரவரி மாதம் பனி நிலவு என்றும், மார்ச் மாதம் புழு நிலவு என்றும், மே மாதம் பீளவர் மூன் என்றும் அழைக்கப்பட்டது.
மே மாதம் ஓக்லஹாமா மலையில் முதலில் துளிர்ந்து வளரும் வண்ண வண்ணப் பூக்களை, அதன்பின் வளரும் பிற தாவரங்களும் மரங்களும் மறைத்து அழிப்பதையே ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ என்ற தலைப்பு குறிப்பிடுகிறது.
கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூனில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் நிஜம். பயங்கரவாதத்தின் உச்சம். இப்போதும் ஓக்லஹோமாவின் ஓசேஜ் கவுண்டியில் என்ன நடந்தது என்பதற்கான நேரடியான விளக்கம்.
படம், ஓசேஜ் முதியவர்கள், தங்கள் சந்ததியினர் சிலர் வெள்ளை அமெரிக்க சமுதாயத்தில் இணைந்ததற்கான துக்கத்தை அனுசரித்து செய்யும் சடங்கோடுதான் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து எண்ணெய் கண்டுபிடிக்கப்பட, ஆனந்தக் கூத்தாடும் அவர்கள் வாழ்வில் அலங்கோலம் அரங்கேறத் தொடங்குவதை படம் அடுத்தடுத்து ஆவணப்படுத்துகிறது.
பேராசையும் தந்திரங்களும் மிக்க கிரிமினலான வில்லியம் ஹேல் என்ற ராபர்ட் டீ நீரோவின் கதா பாத்திரமே இந்த கொலைச் சம்பவங்களின் மூலம் என்று கண்டறிகிறது சிபிஐ. வயதான இந்த கதாபாத்திரம் ராணுவத்தில் சமையல் வேலையில் பணியாற்றி முடித்து, தன் வாழ்வின் புதிய அத்தியாயம் நோக்கி வரும் தனது மருமகன் எர்னஸ்ட் பக்ஹார்ட் என்ற டிகாப்பிரியோவின் பாத்திரத்தின் மூலம் தன் திட்டங்களை எப்படி நிறைவேற்றிக்கொள்கிறது? காதலும் மகிழ்ச்சியும் இனிமையான வாழ்வும் அமைந்த பக்ஹார்ட் எப்படி மாமா வில்லியம் ஹாலின் சூழ்ச்சிக்குப் பலியானான்? – இதுதான் இத்திரைப்படத்தின் முக்கிய பகுதி.
மாமாவைப் போலவே பெண்ணுடல் மீதும் செல்வத்தின் மீதும் தீவீர ஆசை கொண்ட பக்ஹார்ட்டிற்குள் தன் ஆசைகளையும் துரோக விதைகளையும் விதைத்து தான் சொல்வதையெல்லாம் செய்ய வைக்கிறது வில்லியம் ஹேல் கதாபாத்திரம். அவரது திட்டங்கள் சூழ்ச்சி மிக்கவை. ஆபத்தானவை.
எண்ணெய் வளத்தின் நில உரிமையை வைத்திருக்கும், பெரும் செல்வந்தார்களாக இருக்கும் செவ்விந்திய குடும்பங்களுக்குள் ஊடுருவி, அவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாவது, பின் அந்த செவ்விந்தியர்களைக் கொலை செய்து அதை ஒரு விபத்துபோல அல்லது தற்கொலை போல நம்பச் செய்வது, சாட்சியங்களை அழிப்பது, அதாரமில்லாமல் செய்வது, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டுவது இதுவே வில்லியம் ஹாலின் திட்டம்.
இதன்படி, அந்தப் பிராந்தியத்தில் வாழும் செவ்விந்திய பெண்ணான மோலி கய்ல் என்பவளைக் காதலித்து திருமணம் செய்யுமாறு வில்லியம் ஹால் யோசனை சொல்ல, மோலியின் அழகில் மயங்கித் திரியும் வாகன் ஓட்டும் பக்ஹார்ட் உற்சாகமாகிறான். காதலித்து மோலியை மயக்குகிறான். அவளுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். மோலியை திருமணமும் செய்யச் சொல்கிறார் வில்லியம் ஹால். அதன் மூலம் அந்தப் பகுதியில் எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகை மற்றும் நிலத்தின் காப்புரிமை இரண்டையும் கைப்பற்ற முடியும். மோலியை திருமணம் செய்துகொள்ளச் சொன்னதோடு நிற்காமல் மோலியின் சகோதரிகள் அவர்களது கணவர்கள், மோலியின் முதல் கணவன் என்று எல்லோரும் கொல்லப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சுற்றிய நிகழ்வாகவே காண்பிக்கப்பட்டாலும், இது போன்ற சதித் திட்டங்களால் பல்வேறு குடும்பங்களில் எண்பதுக்கும் மேற்பட்ட பூர்வ குடிகள் கொல்லப்படுகிறார்கள்.
தனது திட்டத்தின் அடுத்த கட்டமாக மோலியைக் கொல்ல முடிவு செய்கிறார், ஹேல். மோலி கர்ப்பமுற்றிருக்கிறாள். இதனால், தயங்கும் பக்ஹார்ட்டை திட்டியும் இகழ்ந்தும் அடித்தும் தன் திட்டங்களுக்கான இசைவைப் பெறுகிறார். அவர் சொல்வதைக் கேட்டு நீரழிவு நோயாளியான மோலிக்கு இன்சுலினுடன் மார்பினையும் கலந்து செலுத்துகிறான்.
தன் குடும்பத்தில் நிகழும் தொடர் மரணங்கள் மோலியை அச்சுறுத்த, கொலைக்கார்களின் அடுத்த இலக்கு தான்தான் என்பதை அறியும் மோலி தன்னைக் கொன்று கொண்டிருப்பது கணவன் என்றறியாமலிருக்கிறாள். இக் கொலைகளை உள்ளூர் ஷெரிப் நீதிபதிகள் எந்த விசாரணையும் செய்யாமல் பார்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இந்தப் போக்கை விமர்சிக்கும் ஒரு ஓசேஜ் தேசத்தின் பிரதிநிதி வாஷிங்டன் டி.சி.யில் கொலை செய்யப்படுகிறார்.
தனியார் துப்பறிவாளர் வில்லியம் ஜே. பர்ன்ஸ் என்பவரை வேலைக்கு அமர்த்துகிறார், மோலி. ஆனால், அவர் எர்னஸ்ட் மற்றும் பைரன் ஆகியோரால் தாக்கப்பட்டு துரத்தப்படுகிறார்.
மோலி கடுமையாக நோய்வாய்ப்படுகிறாள். நோய்வாய்ப்பட்ட போதிலும், ஓசேஜ் பிரதிநிதிகளுடன் வாஷிங்டனுக்குச் சென்று ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜிடம் உதவி கேட்கிறார். டாம் ஒயிட் என்பவரின் தலைமையிலான புலனாய்வுப் படை தங்கள் விசாரணையை தொடங்குகிறது.
ஹேல், தான் பயன்படுத்திய கூலிக் கொலையாளிகள் பலரைக் கொன்று தனது தடயங்களை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், ஒயிட் அவரையும் எர்னஸ்டையும் கைது செய்கிறார். மோலி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கண்டறியும் மருத்துவர்கள் விஷம் கொடுத்து அவளைக் கொல்லும் முயற்சி நடந்ததைக் கூறுகிறார்கள்.
ஒயிட், ஏர்னஸ்ட் பக்காஹார்ட்டை தன் தவறுகளை ஒப்புக்கொள்ள வைத்து, ஆதாரங்களை ஹேலுக்கு எதிராக மாற்றுகிறார். அதேநேரம், ஹேலின் வழக்கறிஞர் டபிள்யூ. எஸ். ஹாமில்டன், தான் சித்திரவதை செய்யப்பட்டதாக பொய் சொல்லும்படி எர்னஸ்ட்டிடம் கூறி, அவரைத் திரும்பப் பெற முயற்சிக்கிறார். இருப்பினும், அவரது மகள்களில் ஒருத்தி கக்குவான் இருமலால் இறந்த பிறகு, எர்னஸ்ட் பக்ஹார்ட் தனது மாமாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முடிவு செய்கிரார். எர்னஸ்ட்டைக் கொலை செய்ய முயலும் ஹேல் தோல்வியுறுகிறார்.
கடைசியாக எர்னஸ்டை மோலி சந்திக்கிறாள். அவன் தனக்கு விஷம் கொடுத்ததை ஒப்புக்கொள்ளாமலிருக்க அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிகிறாள்., விவாகரத்து செய்கிறாள். உண்மையில் அவளைக் கொல்ல அவனுக்கு விருப்பமில்லாதிருந்தையும் சில சமயங்களில் அவளுக்குக் கொடுக்க வேண்டிய மார்பினை அவனே உண்டதையும் அவன் அவளிடம் சொல்லவில்லை.
இது நிகழ்ந்த காலகட்டத்து நியூஸ் ரீல் காட்சிகள் மற்றும் புகைப்படங்களைக் காண்பிக்க டிஜிட்டல் உத்திகள் ஏதும் பயன்படுத்தப் படவில்லை. 1917 மாடல் Bells & Howell கேமிராவையும் டிரை பிளேட் போட்டோகிராபியையும் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ பிரீட்டோ. இந்த கேமிரா, ஸ்கார்சஸியின் சொந்த சேகரிப்பில் இருக்கிறது.
Oklahomaவின் பரந்து விரிந்த நிலப்பரப்பை படம் பிடிக்க, பிரத்தியேகமாக மேம்படுத்தப்பட்ட, அனமார்பிக் பேனாவிஷன் டி சீரீஸ் லென்ஸ்களின் மேம்படுத்தப்பட்ட வடிவம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
எரிக்ரோத்துடன் இரண்டாண்டு காலம் பயணம் செய்தும், தொடர்ந்து பேசியும் இத் திரைக்கதையை உருவாக்கியதாக எண்பது வயது ஸ்கார்சஸி சொல்கிறார், இசையமைப்பாளர். ராபிராபர்ட்சனுக்கு இப்படம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. இது இக் கூட்டணியின் பதினோராவது படம்; மற்றும் கடைசிப் படமும் கூட. ராபி காலமாகிவிட்டார்.
மிக மிக சிறப்பு
செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கேள்விபட்டதுண்டு. புத்தகங்களில் படித்தோ, சினிமா மற்றும்
ஆவணப்படம் வாயிலாகவோ உணர்ந்த தில்லை.எழுத்தாளர் இயக்குனர் திரு. ஜெகநாத் நடராஜனின் , தெளிவான விமர்சனம் இப்படத்தை கூடுதல் புரிதலுடன் பார்க்க உதவும்.அத்தனை பாத்திரங்களையும் விலாவாரியாக அறிமுகப்படுத்தியது கதைக்களம் தொடங்கி தொடர்ந்து முடியும் வரை விவரித்து இருப்பது, ஆங்கிலப் படங்களை மொழிப் புரிதல் ஐயமின்றி பார்த்து ரசிக்க முடியும். நன்றி.