இன்போசிஸ் நாராயண மூர்த்தி, “இளைஞர்கள் அனைவரும் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நாராயணமூர்த்தி கூறுவது சரி, தவறு என சமூக வலைதளம் இரண்டாக பிரிந்து விவாதித்து வருகிறது. நாராயணமூர்த்தி மட்டுமல்ல பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓகள் கடந்த சில ஆண்டுகளாக இதை வலியுறுத்தி வருகிறார்கள். என்ன காரணம்?
நாராயணமூர்த்தி பேச்சின் பின்னணி என்ன?
‘தி ரெக்கார்ட்’ என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசியபோதுதான் நாராயண மூர்த்தி இதை சொல்லியிருந்தார். “உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் நமது வேலை உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரை நம்மால் மற்ற உலக நாடுகளுடன் போட்டிப் போட முடியாது. அந்த நாடுகள் கடந்த 20, 30 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
நாராயணமூர்த்திக்கு முன்பும் பலர் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.
முன்னதாக, ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், “பல தலைமுறைகளாக மற்ற நாடுகள் கட்டியெழுப்பியதை ஒரு தலைமுறைக்குள் உருவாக்குவதற்கானது நமது தருணம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் சிஇஓ ஷாந்தனு தேஷ்பாண்டே, “பணியில் முதல்முறையாக இணைபவர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள், உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழையுங்கள்” என கூறியிருந்தார்.
நாராயணமூர்த்தியும் பவிஷ் அகர்வாலும் ஷாந்தனு தேஷ்பாண்டேயும் இந்தியா முன்னேற நாம் அதிகம் உழைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், இந்தியாவுக்கு வெளியேயும் சிஇஓக்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இதையே வலியுறுத்துகிறார்கள்.
சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மா, சீன தொழில்நுட்பத் துறை வேகமாக முன்னேற 996 கோட்பாடுகளை அறிவித்திருந்தார். அதில், அதிக நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் கடின உழைப்பைப் போற்றும் விதத்தில் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, அதாவது 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் பரிந்துரைத்தார். இதற்கு சினாவிலேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றும், ஒருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், வாரத்திற்கு 100 மணி நேரத்திற்கு மேலாக உழைக்குமாறு பணியாளர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தான் அவ்வாறுதான் உழைப்பதாகவும் சில நேரங்களில் அலுவலகத்திலேயே தான் உறங்கிவிடுவதாகவும், பணியாளர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டார்.
ஆக நாடு முன்னேற வேண்டும் என்பதும் தேசப்பற்றும் மேற்பூச்சுதான்… உலகம் முழுவதும் தொழிலாளர்களிடம் அதிக உழைப்பை சிஇஓகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதே நிஜம்.
”உண்மைதான், இவர்கள் கவனம் கொள்வது, கொடுக்கும் சம்பளத்துக்கு இன்னும் அதிகம் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்ற பேராசை மட்டுமே. அதிகம் லாபம் வேண்டும் இன்னும் கடினமாக உழையுங்கள் என்பதை உற்பத்தி திறன் என்று நாசூக்காக சொல்கிறார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்க வேண்டும் என்பதற்கு, தேசம் ஒரு வல்லரசாக வேண்டாமா என்று நைச்சியமாக தேசப்பற்றை துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்
ஆசியாவிலேயே அதிகபட்ச இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது இந்தியாவில்தான். 25%. உற்பத்தித் திறன் அதிகரிப்பது என்பதை விட முதலில் இவர்களுக்கு எல்லாம் எப்படி வேலை கொடுக்க போகிறோம் என்பதுதான் சவாலாக நம் முன் நிற்கிறது” என்கிறார் அரசியல் விமர்சகர் கார்த்திக் வேலு.
எட்டு மணி நேரம் மட்டும் வேலை ஏன்?
நிலக்கரிச் சுரங்கங்களிலும் இரும்பு உருக்காலைகளிலும் பஞ்சாலைகளிலும் ஆண்கள் மட்டுமல்ல குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்களும் 18 முதல் 20 மணி நேரம் கடுமையாக வேலை வாங்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஓய்வின்றி, உற்பத்தியில் நிகழும் சிறு தாமதத்திற்கும் தண்டனை பெற்று, வழங்கப்பட்ட சொற்ப ஊதியமும் பிடிக்கப்பட்டு கொடுமையின் உச்சகட்ட நிலையிலிருந்தார்கள் அன்றையத் தொழிலாளர்கள். இக்கொடுமையை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினார்கள். அப்படி போராடியவர்கள் மீது, 4 மே 1886-ல் ஹேமார்க்கெட் எனும் இடத்தில் ஏவப்பட்ட கொடுந்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்த விசாரணையில் பலர் தூக்கிலிடப்பட்டார்கள், பலருக்கு சிறைத் தண்டனை. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. அதன் விளைவாக உருவானதுதான் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் குடும்பத்துக்கு எனும் வரையறை.
தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் இந்த நடைமுறை உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் தொழிலாளர் வேலை நேரத்தை 14 மணியில் இருந்து 8 மணி நேரமாக மாற்றியவர் அப்போது வைசிராய் கவுன்சிலில் உறுப்பினராக இருந்த அம்பேத்கர். இன்றிருக்கும் பல இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு வித்திட்டவர் அவரே.
வேலை, குடும்பம், ஓய்வு ஒவ்வொன்றுக்கும் 8 மணி என்ற இந்த நேரப் பங்கீடு நம் நவீன குடும்ப மற்றும் சமூக இயக்கத்தில் நெடுங்காலமாக ஒரு சமநிலையை உருவாக்கி வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 75 வருடங்களாக இந்த சமநிலை மாறாமல் நல்லபடியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சமநிலையை குலைத்து, தொழிலாளர்களின் உரிமைகளை 1886ஆம் ஆண்டிற்கும் பின்னால் கொண்டு செல்லும் நிலை இன்று உருவாகியிருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் நாராயண மூர்த்தி உட்பட மேலே குறிப்பிட்ட சிஇஓகள் பேச்சு.
முன்னதாக, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21-04-23 அன்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த மசோதா தொடர்பாக, “இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகளுடன் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் வருகின்ற நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
பின்னர் எதிர்ப்புகள் காரணமாக அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.
அதற்கும் முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் இந்த வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மீண்டும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டபோது நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன. இதனையடுத்து, 2020 மே 6ஆம் தேதி தொழில் நிறுவனங்களுடன் அப்போதைய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்று தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளில், தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது. அதற்கு முன்பாகவே ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை செய்யும் நேரத்தை நீடிப்பது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர், பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் என வாரத்திற்கு அதிகப்பட்சமாக 72 மணி நேரம் (6 நாட்கள்) வேலை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொண்டு, புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கடந்த 2022 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தவுள்ளதாக தகவலை கசியவிட்டது. எனினும், பலத்த எதிர்ப்புகள் காரணமாகவும் பல மாநிலங்கள் அதற்கு தேவையான விதிகளை வகுக்காததாலும் அது தற்போது வரை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
கொரோனாவுக்கு முன்னர் வரை சீனாதான் ஒட்டுமொத்த உலகத்தின் தொழிற்சாலையாக விளங்கியது. குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், இலகுவான சூழியல் சட்டதிட்டங்கள் என்று குறைந்தவிலை உற்பத்திக்கு கவர்ச்சிகரமான ஒரு நாடாக திகழ்ந்தது. கொரோனாவில் சீனா முடங்கியதும் உலகமே முடங்கியது. பல நாடுகளில் கழிவறை தாளுக்குக்கூட பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கம்ப்யூட்டர் சிப், மருத்துவ உபகரணங்கள் உட்பட எல்லா பொருட்களுக்கும் இதே நிலமைதான். காரணம் இவை எல்லாவற்றையுமே சீனா தான் அனுப்பி கொண்டிருந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவை மட்டுமே நம்பி இருக்கும் நிலையை கொரோனா கேள்விக்கு உள்ளாக்கியது. இதற்கு சீனாவின் அரசியல் நிலைபாடுகளும் வலு சேர்த்தது.
எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது உற்பத்தி திறனில் ஒரு பகுதியை இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றிவிட நினைக்கிறார்கள். அதேநேரம், அவர்கள் இந்தியாவுக்குள் வர சீனா போலவே தொழிற்சாலை தொடர்பான சட்டங்களை இந்தியா இலகுவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த இந்த வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான அழுத்தம்.
வேலை நேரத்தை அதிகரித்தால் என்னாகும்?
தொழிற்சாலையில் 10 மணி நேரம் இருக்க வேண்டும் என்றால், அதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வருவது, வேலை முடிந்து வீட்டுக்கு போய் சேர்வது என முன்னும் பின்னுமான ஆயத்த பணிகளுக்கு பல மணி நேரங்கள் தேவைப்படும். உதாரணமாக 9 மணிக்கு பணியை தொடங்க வேண்டிய ஒருவரது வீடு நிறுவனத்தில் இருந்து மிக தூரத்தில் இருந்தால், அதுவும் அவர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வரவேண்டும் என்றால், காலையில் 6 – 7 மணிக்கு எழுந்து தயாரானால்தான் முடியும். இதுபோல் இரவு 7 மணிக்கு பணி முடித்து, புறப்பட்டு வீடு போய், சாப்பிட்டு தூங்க செல்லும்போது 9 – 10 ஆகிவிடலாம். அடுத்தநாள் காலையில் 6-7 மணிக்கு மீண்டும் ஆயத்தமாக வேண்டும்.
இடையே இருக்கும் 9 மணி நேரங்களில்தான் அவர் தூங்க வேண்டும், மனைவி / கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நேரம் செலவழிக்க வேண்டும். பெண்கள் நிலமை இன்னும் மோசம்… சமையல், கணவருக்கான பணிவிடைகள், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் நலன் என பல சுமைகளை முடித்துவிட்டு, தூங்க நேரம் கிடைக்குமா? அது அவர்கள் உடல் ஆரோக்கியத்தை எவ்வளவு பாதிக்கும். இத்தனைக்கும் இடையே பிடித்த பணியைத் தக்கவைக்க நேரம் மட்டுமல்லாது கவனம் கொடுப்பதும் பெண்களுக்குப் பெரும் சவாலாகும். இதன் நீண்ட நாட்கள் விளைவாக… மீண்டும் பெண்கள் வீட்டில் முடங்குவது அதிகமாகும்.
இன்னொரு பக்கம் தற்போது 8 மணி நேரம் மட்டும் வேலை என்ற சட்டம் இருக்கும் போதே பல நிறுவனங்களில் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவது நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் 10 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதித்தால் என்ன ஆகும்?
‘10 மணி நேரமோ அதற்கும் அதிகமாகவோ தொடர்ச்சியாக வேலை செய்தால் தொழிலாளியின் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும். அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவர். இதனால், அவரது நலம் மட்டுமல்லாது குடும்பத்தின் நலமும் பாதிக்கப்படும்’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதனால்தான், மேற்கு உலக நாடுகள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை என்பதை 36, 35 என்று குறைத்து வருகின்றனர். பல நாடுகள் ஒரு நாளைக்கு 6 மணி நேரமாக குறைத்து, குறைந்த வேலைநேரம் அதிக உற்பத்திக்கு வழிவகுப்பதையும் நிரூபித்திருக்கின்றன. இந்தியாவில் கூட திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உட்பட பலர் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், அதிவேக உற்பத்தி கருவிகள் இவ்வளவு வந்துள்ள நிலையில், நியாயமாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறையத்தானே வேண்டும்? ஆனால், இப்போது எல்லாம் நேர்மாறாக நடக்கின்றன.
மனிதன் வாழ்வதற்காகத்தான் உழைக்க வேண்டுமேயன்றி உழைப்பதற்காக வாழக்கூடாது.