ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்காக ஆபீஸ் அலங்கரிக்கப்பட்டிருக்க, பட்டுப் புடவையில் உள்ளே நுழைந்தாள் ரகசியா. டேபிளில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி முடிந்ததும் பிரசாதத்தை எடுத்து நீட்டினோன்.
“பிரசாதத்தைப் பார்த்ததும் எனக்கு அமர் பிரசாத் ரெட்டியின் நினைவு வருது” என்றாள்
“பாவம் ஆயுத பூஜைகூட கொண்டாட விடாமல் அவரை ஜெயில்ல போட்டுட்டாங்களே?”
“பனையூரில் அண்ணாமலை வீட்டு வாசல்ல பெரிய அளவில் கொடிக்கம்பம் நட்டு, அதில் பாரதிய ஜனதா கொடியை அண்ணாமலையை விட்டு ஏற்றச் செய்வது அப்பகுதி பாஜகவினரின் திட்டம். ஆனா அந்த ராட்சத கொடிக்கம்பம், உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு பக்கத்துல இருந்ததால மின்கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துடுமோன்னு அந்த பகுதி மக்கள் பயந்திருக்காங்க. இதுபத்தி மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுபோயிருக்காங்க. அவங்க அங்க அனுமதி இல்லாம வச்ச கொடிக்கம்பத்தை அகற்றச் சொல்லி இருக்காங்க. அதுக்கு பாஜக தொண்டர்கள் மறுக்க, களேபரம் ஆகியிருக்கு. பிறகு போலீஸ் பாதுகாப்போட ஜேசிபி வச்சு அந்த கொடிக் கம்பத்தை அகற்றி இருக்காங்க. அப்ப ஜேசிபி இயந்திரத்தை சேதப்படுத்தின 5 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுதலை செய்தது காவல்துறை. அந்த 5 பேரில் ஒருத்தர்தான் அமர் பிரசாத் ரெட்டி. போலீஸார் தன்னை கைது செய்ய வந்ததைப் பார்த்ததும் அமர் பிரசாத் ரெட்டி அதிர்ச்சி ஆகிட்டாராம்.”
“அவர் அண்ணாமலைக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் ஆச்சே.”
“ஆமாம். அண்ணாமலையோட வரவு செலவு கணக்குகளை அமர் பிரசாத் ரெட்டிதான் பார்க்கிறார். பாதயாத்திரைக்குகூட அவர்தான் சகல ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கார். அதேநேரத்துல அவருக்கு எதிரா பல புகார்கள் போலீஸுக்கு வரத் தொடங்கி இருக்கு. தொழில் அதிபர்கள்கிட்ட பண வசூல் செய்யறதுல இருந்து ஆரூத்ரா கோல்ட் நிறுவன வழக்கு வரை பல விஷயங்கள்ல அவர் மேல புகார்கள் வருதுனு போலீஸ்ல சொல்றாங்க. அதனால இப்ப நீதிமன்ற காவல்ல இருக்கற அமர் பிரசாத் ரெட்டி மேல மேலும் சில வழக்குகளை சேர்த்து, அவர் ஜாமீனில் வர முடியாத நிலை உருவாக்கப்படலாம்”.
‘அவரோட கைதுக்கு பாஜகல இருந்து ஏதும் எதிர்ப்பு வந்தா மாதிரி தெரியலையே?”
“அவருக்கு ஆதரவாக வந்த ஒரே குரல் அண்ணாமலையோடதுதான். வேற யாரும் வாய் திறக்கல. கட்சியில பலருக்கு அமர் பிரசாத் ரெட்டியோட நடவடிக்கைகள் பிடிக்காததுதான் இதுக்கு காரணம். இதுக்கு நடுவுல பாஜக நிர்வாகிகளை தமிழக அரசு அடுத்தடுத்து கைது செய்யறது பத்தி மூத்த பாஜக தலைவர்கள் தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்றை தமிழ்நாட்டுக்கு டெல்லி பாஜக அனுப்பி வைக்கப் போகுதாம். அப்ப அண்ணாமலையோட எதிர்கோஷ்டி தலைவர்கள் நிறைய உண்மைகளை அவங்ககிட்ட சொல்ல திட்டமிட்டு இருக்காங்க.”
“மகளிர் உரிமைத் தொகையை வாங்கற குடும்பத் தலைவிகள் போனுக்கு முதல்வரோட பேச்சு தொலைபேசி வழியா போய்ச் சேருதாமே?”
“ஆமாம். ‘நான் உங்கள் சகோதரன் ஸ்டாலின் பேசுகிறேன். இந்த மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை உங்களுக்கு வந்திருக்கும். தேவையான அளவுக்கு செலவு செய்யுங்கள். தேவையற்ற செலவு செய்யாமல் சேமித்து வையுங்கள்’ன்னு அந்த பேச்சுல எல்லாருக்கும் அட்வைஸ் கொடுக்கறாராம் ஸ்டாலின். இனி மாதாமாதம் உரிமைத்தொகை பெறும் குடும்பத் தலைவிகளிடம் இதே மாதிரி பேச அவர் திட்டமிட்டு இருக்கார். இப்படி பேசறதால அவங்களோட ஆதரவை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பெறலாம்னு முதல்வர் கணக்கு போடறார்.”
“ஆனா நிதித்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தால தலையை பிய்ச்சுட்டு இருக்கறதா நியூஸ் வருதே?”
“இந்த திட்டத்துக்காக கூடுதல் நிதி செலவாகிட்டு வருதே… அதை எப்படி சமாளிக்கறதுங்கிற ஆதங்கம் அவங்களுக்கு. ஒவ்வொரு மாசமும் ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்துக்காக செலவு செய்யப்பட்டு வருதாம். அதை எப்படியாவது 700 கோடி ரூபாய்க்குள்ள சுருக்க நினைக்கறாங்க. அதனால இந்த திட்டத்தை கட்டுக்குள் வைக்க அவங்க விரும்பறாங்க. மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களின் பொருளாதார நிலமை பற்றி மாதந்தோறும் ஆய்வு செய்ய அவங்க திட்டமிட்டு இருக்காங்க. இதுக்காக தற்சமயம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், உரிமைத் தொகை பெறும் யாராவது வீட்டு வரி கட்டறாங்களாங்கிற விவரங்களை சேகரிச்சுட்டு வர்றாங்க. இதன் மூலம் இப்ப உரிமைத் தொகை வாங்குறவங்களுக்கு வாடகை மூலம் கூடுதல் வருமானம் வந்தால் அவர்கள் உரிமைத் தொகையை நிறுத்தவும் முடிவு செய்திருக்காங்க”
“எடப்பாடி ரொம்ப பிசியாகிட்டாரே… மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செஞ்சுட்டு வர்றாரே?”
“அவரோட சுற்றுப்பயணம் பாசிட்டிவா இருக்கறதாவும், இதனால அதிமுக தொண்டர்கள் மத்தியில உற்சாகம் ஏற்பட்டு இருக்குன்னும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கு. அதோட மாவட்ட செயலாளருக்கு ஒரு முக்கிய உத்தரவை போட்டிருக்காராம் எடப்பாடி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. ‘உள்ளூரில் இருக்கும் கிறிஸ்துவ, முஸ்லிம் மத அமைப்பினரிடம் பேசுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்லுங்கள். இனி எதிர்காலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி இல்லை என்பதையும் சொல்லுங்கள். தேவைப்பட்டால் அவர்களுடன் நானும் பேசுகிறேன்’ன்னு சொல்லி இருக்காராம். போன வாரம் சேலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கார். டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விழாவை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாட கட்சியினருக்கு சொல்லியிருக்கிறார். அப்போது அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்யச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி. இப்படி சிறுபான்மை சமூக வாக்குகளை குறிவச்சு அவர் மூவ் பண்றது முதல்வரோட பிபியை எகிற வச்சிருக்கு.”
“பாஜகல இருந்து கவுதமி வெளிய வந்திருக்காரே?”
“அவர் அதுக்காக சொன்ன காரணங்கள்தான் ஹைலைட். ‘எனக்கு சொந்தமான இடங்களை பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவரே என்னை ஏமாற்றி விற்றுவிட்டார். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டார். இது பற்றி பாரதிய ஜனதா தலைமையிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்று தனது விலகலுக்கு காரணம் சொல்லி இருக்கிறார். இப்போது திமுக அவரை தொடர்பு கொண்டு நாங்கள் இருக்கிறோம் என்று விவரங்களை சேகரித்து வருகிறது. இதன் நடுவே கௌதமி புகார் சொன்ன பாஜக பிரமுகர் அழகப்பன் தலைமறைவாக இருக்கிறார். அவரை விரைவில் கைது செய்ய திமுக திட்டமிட்டிருக்கு.”
“நாங்க எல்லா உதவியும் செஞ்சோம் ஆனா கவுதமி இப்படி சொல்றாங்கனு பாஜக தலைவர்கள் புலம்புறாங்களே?”
“ஆனா, பாஜக தலைமைகிட்ட பல முறை சொல்லியும் அந்த அழகப்பனை வழிக்கு கொண்டு வர முடியலங்கறது கவுதமியோட வருத்தம். அதான் வெளியேறிட்டாங்க”