அஜித்தின் ‘விடாமுயற்சி’ பல தடைகளுக்குப் பிறகு ஷூட்டிங் வரை வந்திருக்கிறது. இப்போது அசர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்தான் இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். ஷூட்டிங் போகும் வழியில், நெஞ்சு வலி வரவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனை அடைவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
மிலன் அஜித்தின் ப்ரியத்திற்குரிய கலை இயக்குநர். அஜித்தின் பல படங்களுக்கு இவர்தான் கலை இயக்குநர். மிலனின் மறைவு விடாமுயற்சி படக்குழுவிற்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், இப்போதைய சூழலில் அவர்கள் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தே ஆகவேண்டிய கட்டாயம். அதனால் ஷூட்டிங்கை தொடர்கிறார்கள்.
இங்கு இப்போது அதிரடி ஆக்ஷன் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில்தான் ரெஜினா கஸெண்ட்ரா, விடாமுயற்சியில் நடிக்கிறார் என்ற ஒரு கிசுகிசு கிளம்பியது. இந்நிலையில் அஜித்துடன் ப்ரியா பவானி சங்கரும் நடிக்கவிருக்கிறார். இவருடைய காட்சிகள் அசர்பைஜானில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் ப்ரியா பவானி சங்கர் உடனடியாக அசர்பைஜானுக்கு பறந்திருக்கிறார் என்கிறார்கள்.
படத்தில் ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் என இரண்டு இளம் கதாநாயகிகள் இருந்தாலும், அஜித்தின் முக்கிய ஜோடி சீனியர் த்ரிஷாதான்.
15 கோடி இருந்தால்தான் பான்-இந்திய படம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்களுடைய பட வியாபாரத்தை இந்தியா முழுவதுக்கும் விரிவுப்படுத்த ஆசைப்படுகிறார்கள். இதனால் வியாபாரம் விரிவடையும். சம்பளமும் அதிகமாகும் என்பதுதான் இதற்கு காரணம்.
பாந் இந்தியப் படம் என்று சொல்லும் போது ஒரு சுவாரஸ்யம் இருந்தாலும், அதற்கென ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.
ஹிந்திப் பேசும் வட இந்திய சினிமா சந்தையைக் கவர, பாலிவுட் நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை தாண்டிய ப்ரமோஷன் தேவைப்படுகிறது.
படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஹிந்தி சினிமா சந்தையின் முக்கிய நகரங்களுக்குச் சென்று அங்கே தங்களது படத்தைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.
இதனால் அவர்கள் ஒரு குழுவாக செல்ல விமான டிக்கெட், தங்கும் ஹோட்டல் செலவு, பிரஸ்மீட் செலவு என செலவுப் பட்டியல் நீள்கிறது. இப்படி ப்ரமோஷன் செய்ய ஒரு வாரம் வரை தங்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு பெரும் செலவாக இருக்கிறது.
இந்த செலவு மட்டும் தோராயமாக 15 கோடி வரை ஆகிறதாம். அதாவது தயாரிப்பாளர் பான் – இந்தியப் படமாக விளம்பரப்படுத்த இவ்வளவு கோடிகள் ஆகிறதாம்.
15 கோடி செலவு செய்தாலும், அதற்கான வருவாய் இருக்குமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். படம் நன்றாக இல்லையென்றால் கூடுதலாக செலவழித்த 15 கோடியும் மொத்தமாக வீண்.
இதனால் இப்போது தயாரிப்பாளர்கள் பான் – இந்தியப் படம் என்று சொல்லாமல், ஹிந்தியில் டப் செய்து ஒரே தேதியில் வெளியிடலாம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.