No menu items!

அதிகரிக்கும் அண்ணாமலைபவர் – மிஸ் ரகசியா

அதிகரிக்கும் அண்ணாமலைபவர் – மிஸ் ரகசியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

“ஒரு பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட், இன்னொரு பக்கம் 5 மாநில தேர்தல்னு நம்மள பிஸியா வச்சுக்க பல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு” என்றவாறு ஆபீசுக்குள் என்ட்ரியானாள் ரகசியா.

“தேர்தல் நம்ம மாநிலத்துல நடக்கலியே அதிகமா வட மாநிலங்கள்லதானே நடக்குது. இதுல நமக்கு என்ன பரபரப்பு இருக்கு?”

“உங்களுக்கு பரபரப்பு இல்லாம இருக்கலாம். ஆனா தமிழக பாஜகல பரபரப்பு இருக்கு. இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தமிழக பாஜகல மாற்றங்கள் ஏற்படும்னு கமலாலயத்துல சொல்றாங்க.”

“அப்படி என்ன மாற்றம் வந்துடப் போகுது?”

“5 மாநில தேர்தல்ல பாஜக அமோகமா ஜெயிச்சா, அண்ணாமலை சொல்றபடி தமிழகத்துல ரிஸ்க் எடுக்க, பாஜக மேலிடத் தலைவர்கள் ஒத்துக்குவாங்க. ஆனா இந்தத் தேர்தல்ல அடி வாங்கினா தமிழ்நாட்டுல தனியா நிக்க மாட்டாங்க. அதிமுக கூட்டணியோடதான் நிப்பாங்க. அதோட அண்ணாமலையை தலைவர் பதவியில இருந்து மாத்தி, புது தலைவரை நியமிச்சு, அதிமுக கூட்டணிக்கு ஏற்பாடு செய்வாங்க”

“இப்படி யார் சொல்றது?”

“தமிழ்நாட்டு பாஜகவிலிருக்கும் அண்ணாமலை எதிர்ப்பாளர்கள். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்காக அவங்க ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க”

“அப்படி பாஜக திரும்ப வந்தா, எடப்பாடி அவங்களை ஏத்துக்குவாரா?”

”அப்ப, ஐந்து மாநிலத் தேர்தல்கள்ல பாஜக தோத்துரும்னே முடிவு பண்ணிட்டிங்களா? தோத்தாதானே எடப்பாடி கிட்ட போகணும்”

“ஒருவேளை தோத்தானு கேட்டேன், சரி எடப்பாடி ஏத்துப்பாரா மாட்டாரா?”

“இப்படி ஒரு சந்தேகம் கே.பி.முனுசாமிக்கும் வந்திருக்கு. மோடியும் அமித் ஷாவும் கூட்டணிக்காக பேசினா உங்க நிலைப்பாடு என்னனு எடப்பாடிகிட்ட கே.பி.முனுசாமி நேரடியாவே கேட்டிருக்கார். அதுக்கு எடப்பாடி பழனிசாமி, ‘உங்களுக்கு இன்னும் அந்த சந்தேகம் தீரலைன்னு இந்த கேள்வி மூலமா எனக்கு தெரியுது. பாஜகவோட நாம திரும்பவும் கூட்டணி வச்சா நம்ம கட்சித் தொண்டர்களே நம்மை தோற்கடிச்சுடுவாங்கன்னுகூட எனக்கு தெரியாதா? அப்படி நடந்தா கூட்டணி முறிவு நாடகம்னு திமுக சொன்னது உண்மையாகாதா? அதனால நாடாளுமன்ற தேர்தல்ல பாரதிய ஜனதாவோட நிச்சயமா கூட்டணி கிடையாது. இந்த சந்தேகம் இன்னையோட உங்க மனசை விட்டு போகட்டும்’ன்னு சிரிச்சுட்டே சொல்லி இருக்கார். அவர் சிரிச்சுட்டே சொன்னாலும், அதுல ஒரு உறுதி இருந்திருக்கு.”

“அப்படினா தனிச்சு போட்டியிட எடப்பாடி தயாரா இருக்கார்னு சொல்லு.”

“இந்த தேர்தலை தன்னோட கவுரவப் பிரச்சினையா எடப்பாடி நினைக்கிறார். தேர்தலைச் சந்திக்க ஒரு நிபுணர் குழுவையும் அமைச்சிருக்கார். அவங்ககிட்ட அடிக்கடி ஆலோசனை கேட்கிறார். அதோட மாவட்ட ரீதியா பூத் கமிட்டியில இருக்கறவங்களோட புகைப்படம், தொடர்பு எண், விலாசம், கட்சியில் அவர் எத்தனை ஆண்டுகளா இருக்கிறார்ங்கிற விவரங்களோட தலைமைக் கழகத்துக்கு உடனே அனுப்பி வைக்கச் சொல்லி மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கார். இதில ஏதாவது தவறு செய்தால் மாவட்ட செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிச்சு இருக்கார்.”

“பாஜகவும் தனி அணியில் போட்டியிட தயாராயிடுச்சுனு சொல்றாங்களே?”

“ஆமாம். பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில முக்கிய தலைவர்கள் கூட்டம் கமலாலயத்தில் இன்னைக்கு நடக்குது. அதிமுக இல்லாமல் தேர்தலை எப்படி சமாளிக்கறதுங்கிறதுன்னு விவாதிக்கறதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம். இந்தக் கூட்டம் நடக்கிறதுனால அண்ணாமலைக்கு இன்னும் டெல்லில செல்வாக்கு இருக்குனு பாஜகவினர் புரிஞ்சிக்கிட்டாங்க”

“எப்படி?”

“அண்ணாமலையில் ஆசான் பி.எல்.சந்தோஷ். போன வாரம் தமிழ்நாட்டு பாஜக நிலவரம் குறித்து நிர்மலா சீதாராமன் தான் கட்சிக்காரங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு முன்னலாம் பி.எல்.சந்தோஷ்தான் பேசிக்கிட்டு இருந்தாரு. திடீர்னு நிர்மலா சீதாராமன் வந்ததால அண்ணாமலைக்கு இனி பவர் இருக்காதுனு பேசுனாங்க. இப்ப பி.எல்.சந்தோஷ் தலைமைலதான் கூட்டம். அதனால அண்ணாமலை எதிர்ப்பாளர் கோஷ்டி கப்சிப்னு இருக்கு. இன்னொரு தகவலையிம் சொல்றேன். அண்ணாமலைக்கு போட்டியா பாஜகவுல அதிகாரம் பண்ணிட்டு இருந்த கேசவ விநாயகத்தோட பதவிக்கும் சிக்கல் வந்திருக்குனு கமலாலய வட்டாரங்கள் சொல்லுது. அப்போ அண்ணாமலைக்குதானே பவர் கூடிருக்கு”

“அப்ப அண்ணாமலை கை பாஜகல ஓங்குதுன்னு சொல்லு?”

“கை ஓங்கி என்ன பிரயோஜனம்?.. அதிமுகவுடன் கூட்டணி இல்லைன்னு முடிவானதும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் யோசிக்கறாங்களாம். பொன்.ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை பேசாம ராஜ்ய சபா எம்.பி பதவியையோ, ஆளுநர் பதவியையோ கேட்டு வாங்கிக்கலாம்னு யோசிக்கறாராம். அதே நேரத்துல கரு நாகராஜன், நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட தயாரா இருக்கார். எல்.முருகன் தேர்தல்ல தோற்றுப் போனார். ஆனா அதுக்கு பிறகு மந்திரியானார். அண்ணாமலை தோற்றுப் போனார். அதுக்கு பிறகு பாஜக தலைவர் ஆனார். அதேபோல் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு அவர் நம்பறாராம்.”

”திமுக கூட்டணி எப்படியிருக்கு?”

“ராகுலை தமிழ்நாட்டுல நிக்கச் சொல்லி தமிழ்நாட்டு காங்கிரஸ்காரங்க கேட்டிருக்காங்க. போன தேர்தல்ல கேரள வயநாடு தொகுதில ராகுல் போட்டி போட்டு ஜெயிச்சார். இந்த முறை கன்னியாகுமரில போட்டியடனும்னு கேட்டிருக்காங்க”

“அதுக்கு காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்லிச்சாம்?”

“ராகுல் வட இந்தியாவுல மட்டும் போட்டியிடணும்னு அவங்க சொல்றாங்க. போன தடவை அமேதி, வயநாடுனு ராகுல் ரெண்டு தொகுதில போட்டிப் போட்டு அமேதில தோத்துட்டாரு. இந்த முறையும் இரண்டு தொகுதில போட்டியிட்டா, வட இந்தியா மேல ராகுல் காந்திக்கு நம்பிக்கை இல்லைனு வந்துரும், அவர் வட இந்தியாவுல போட்டி போட்டா மக்களுக்கும் கட்சிக்காரங்களுக்கும் நம்பிக்கை வரும்னு சொல்லியிருக்காங்க”

”அப்ப ராகுல் கன்னியாகுமரில போட்டி போடுவாரா?”

”அவர் அங்க போட்டியிட்டா இங்க இருக்கிற காங்கிரஸ்காரங்கள்ல ஒருத்தருக்கு சீட் குறையும். அந்தத் தொகுதில வசந்த் அண்ட் கோ வாரிசு நின்னு ஜெயிச்சிருக்கார். அவர் அதை கொடுக்கணும். அவருக்கு வேற தொகுதி பார்க்கணும். இதெல்லாம் காங்கிரஸ்காரங்களுக்கு பிரச்சினை. சும்மா கேட்டு வைப்போம், ஆனா ராகுல் வட இந்தியாவிலேயே போட்டியிட்டா நல்லதுனு உள்ளுக்குள்ள நினைக்கிறாங்க”

“காங்கிரஸ்காரங்க அரசியலே தனி.. சரி, கோட்டையில முதல்வர் ஸ்டாலினை அன்புமணி சந்திச்சு இருக்காரே… கூட்டணி பேச்சுவார்த்தையா?”

“இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கூட்டணி பத்தி எதுவும் பேசலைன்னு திமுக தலைமை சொல்லி இருக்கு. அத்தோட இந்த சந்திப்பு பத்தின செய்தியையும் முரசொலியில வெளியிடலை. அதனால விடுதலைச் சிறுத்தைகள் இப்போதைக்கு திருப்தியா இருக்காங்க. பாமக கூட்டணிக்கு வராதுனு அவங்களுக்கு ஒரு நிம்மதி”

”திமுக அணில பாமக இல்லனா எடப்பாடி கூட சேர்ந்துடுமா?”

“இல்லை. அவங்க பாஜக அணில இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.”

“ஏன்?”

“சின்ன கணக்குதான். இப்பவே வடக்கு மண்டலத்திலும் மேற்கு மண்டலத்திலும் அதிமுக பலமா இருக்கு. 2021 எலக்‌ஷன்ல அதிமுக அதிகமான தொகுதிகள்ல ஜெயிச்சது இந்தப் பகுதிலதான். இப்ப திரும்பவும் அதிமுக கூட கூட்டணி வச்சா இன்னும் தன்னை இந்தப் பகுதிகள்ல பலப்படுத்திக்கும் அது வேண்டாம்னு பாமககாரங்க நினைக்கிறாங்க. வடக்கிலும் மேற்கிலும் தங்கள் ஆதரவு இல்லாம ஜெயிக்க முடியாதுன்றதை நிருபிக்கணும்னு பார்க்கிறாங்களாம்”

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”

“அப்படிலாம் யோசிச்சதாலதான் இன்னைக்கும் அவங்க அரசியல்ல இருக்காங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...