அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ வெளியாக இருக்கிறது. இதனால் இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளை மளமளவென மேற்கொண்டு வருகிறது ‘லியோ’ படக்குழு.
அதிலும் குறிப்பாக லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஊடகங்களுடன் பேசியதால், இப்படம் பற்றிய எதிர்பார்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.
‘லியோ’வில் ஒரு சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. மொத்தம் ஆறு நிமிடங்கள். கேமரா இடைவிடாமல் ஓடும் காட்சி. கதைக்கு மிக முக்கியமான தருணம் நடக்கும் உணர்வுப்பூர்வமான காட்சியில் விஜய் நடித்திருப்பது ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளும் என்கிறது படக்குழு.
’லியோ’ படத்தில் விஎஃப்எக்ஸ் எனப்படும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸூக்காக படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இதுவரையில் பார்த்திராத வகையில் நேர்த்தியாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இருக்குமாம்.
விஜய் கழுதைப்புலியுடன் மோதும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இந்த காட்சி 10 நிமிடங்கள் ஓடுகிறதாம். இந்த காட்சி கழுதைப்புலியுடன் விஜய் மோதுவது என்பது உண்மையிலேயே மோதுவது போல எடுக்கப்பட்டிருக்கிறதாம். காரணம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்.
அதேபோல் கார்களை வரிசையாக வேகமெடுத்து துரத்து காட்சியிலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார்கள். இதனால் இந்த ஆக்ஷன் காட்சி, ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்கிறது படக்குழு.
இப்படி ’லியோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மறுபக்கம், லியோ படமானது 2005-ல் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல் என்ற பேச்சு ஆரம்பம் முதலே அடிப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் 2010-ல் வெளியான ’காயம் -2’ என்ற தெலுங்குப் படத்தின் காட்சிகளைப் போலவே லியோ ட்ரெய்லரில் வரும் காட்சிகள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இந்தப் படத்தில் ஜகபதி பாபு நடித்திருக்கிறார். விமலா ராமன்தான் இவருக்கு ஜோடி. பரபர இயக்குநர் ராம் கோபால் வர்மா வழங்கிய இப்படத்தை அவரது உதவியாளர் ப்ரவீன் ஸ்ரீ இயக்கியிருக்கிறார்.
இந்தப்படம் கூட ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல்தான் என்கிறார்கள்.
கூடுதல் கொசுறு தகவல் என்னவென்றால், லியோவுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.
ஏறக்குறைய 5 மாதம் இடைவெளி இருப்பதற்கு காரணம், ரஜினி தற்போது நடித்துவரும் படம், அடுத்து ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைக்கான காலம் அவ்வளவு தேவைப்படுகிறதாம்.