இன்று சீனியர் ஹீரோவாக இருந்தாலும், ஜூனியர் ஹீரோக்களுக்கு கெத்து காட்டும் மகாநடிகன்.
எங்கு சென்றாலும், காற்றைப் போல அங்கே முழுவதுமாய் கலந்துவிடுவார். இதனால் இவர் இருக்கும் ஏரியா எப்பவும் கலகலப்பாக இருக்கும்.
இதனால் இவர் வந்தால் ஊடக வட்டாரத்திலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
இப்படிப்பட்ட கென்னியைப் பற்றி கொஞ்சம் பர்ஸனல் இதோ.
விக்ரமிற்கு நடிப்பு நன்றாக வரும் என்பது எரிகின்ற கேஸ் ஸ்டவ்வில் கையை வைத்தால் சுடும் என்று சொல்வது போல. அது சொல்லித்தெரிய வேண்டிய விஷயமில்லை. ஆனால் அவருக்கு கவிதை, கட்டுரைகள் என எல்லாமும் எழுதவும் வரும் என்பது பலருக்குத் தெரியாது. கொடைக்கானல் மாண்ட்ஃபோர்ட் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அழகான ஆங்கிலம் அவரிடம் தவழ்ந்து விளையாடும். ஸ்டைலீஷான ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவது சீயானின் நீண்ட கால பழக்கம். ஆக இந்த நடிகர் ஒரு எழுத்தாளரும் கூட.
ஷூட்டிங்கிற்காக மாதக் கணக்கில் அவுட்டோரில் தங்க வேண்டிய சூழல் பொதுவாக அனைத்து நட்சத்திரங்களுக்கும் பழக்கமான ஒன்றுதான். இந்த மாதிரி சூழலில் விக்ரம் வேறு வழியில்லாமல்தான் வெளியூரில் தங்குவார். இல்லையென்றால் தனது வீட்டுக்குள்ளேயே செட்டிலாகி விடுவார். அந்தளவிற்கு இவர் ஒரு ஹோம் சிக் பார்ட்டி. ஷூட்டிங் இல்லாத ரிலாக்ஸான நேரங்களில் ஜாலியாக ரவுண்ட்ஸ் அடிப்பதை விட தனது வீட்டுக்குள்ளே இருந்தபடி, சோம்பல் முறித்து கொண்டு இருப்பதுதான் அவருக்குப் பிடிக்கும். உடற்பயிற்சிக்கு மட்டும் நத்தையைப் போல வெளியே எட்டிப்பார்ப்பார். ஷூட்டிங் முடிந்தால் நேராக வீட்டுக்கு வண்டியைக் கிளப்புவதுதான் அவரது வழக்கம்.
சீயானுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு தனது மகள், மகனுடன் விளையாடுவதுதான். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ஹோம் வொர்க் செய்வதற்கு உதவுவது பிடித்த விஷயம். பெரும்பாலான நேரத்தை தனது குழந்தைகளுடன்தான் செலவிட்டார். மகளுக்கு திருமணமான பின், துருவ் அப்பா வழியில் ஹீரோவான பிறகு, இவருக்கு அந்த வேலை இல்லாமல் போனது. மகள் நல்ல இடத்தில் திருமணமாகி சென்று விட்டதால், தனது மகன் துருவ்வை எப்படியாவது ஒரு முன்னணி ஹீரோவாக்கிவிட வேண்டுமென்பதில் ரொம்பவே அக்கறை காட்டிவருகிறார்.
விக்ரம் வீட்டிற்குப் போனால், உங்களுக்கு பலவிதமான வரவேற்பு கிடைக்கும். திடீரென புறா தோகை விரித்து வரவேற்கும். கிளி செல்லமாய் ஹாய் சொல்லும். அந்தளவிற்கு விக்ரமிற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அதுவும் புறா, கிளி வளர்ப்பது என்றால் உற்சாகமாகிவிடுவார். விக்ரமின் வீட்டிற்கு சென்றால் நம்மை முதலில் வரவேற்பது அவரது ஆஃப்ரிக்கன் க்ரே வகையைச் சேர்ந்த கிளிதான். இந்த க்ரே நிற கிளி ’அண்ணாச்சி வாங்க’ என்று நெல்லைத் தமிழில் வரவேற்றாலும், ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டும். வீட்டில் இருக்கும் நேரங்களில் கிளியுடன் உரையாடுவது விக்ரமின் அன்றாட பழக்கம்.
அஜித்தும், விக்ரமிற்கும் இடையே 2 ஒற்றுமைகள் உண்டு. இவர்கள் இருவரும் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், நட்சத்திர நாயகர்கள் ஆனது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அஜித்தைப் போலவே விக்ரமிற்கும் போட்டோ கிராஃபி ஒரு ஹாபி என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.. ஏகே-வைப் போலவே சீயானும் எங்கே சென்றாலும் கேமராவுடன் செல்வது வழக்கம். லைட்டிங்க், ஃப்ரேமிங் விஷயங்களில் சிரத்தை எடுத்து போட்டோ எடுப்பது சீயானுக்குப் பிடிக்கும். இப்படி எடுத்த பெரிய போட்டோ கலெக்ஷனே விக்ரமிடம் இருக்கிறது. ஆனால் தான் க்ளிக் செய்தவற்றை புகைப்பட கண்காட்சியில் வைப்பதில் ஏனோ இன்னும் இருக்கிறது தயக்கம்.
சாப்பாட்டு விஷயத்தில் விக்ரம் கொஞ்சம் கறார் பேர்வழி. டைனிங்க் டேபிளுக்கு வந்துவிட்டால், பலருக்கு கிடைக்காத உணவு நமக்கு கிடைத்திருக்கிறது என்பதால் அவற்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சாப்பாட்டை மதிக்கும் வகையில் நம்முடைய பழக்கம் இருக்கவேண்டும் என்பார். இதனால் புத்தகம் படித்தபடியோ அல்லது டிவி பார்த்தபடியோ சாப்பிடுவது இவருக்கு பிடிக்காத பழக்கம். சாப்பிடும்போது டேபிள் மேனர்ஸை பின்பற்றவேண்டும் என்பது இவர் போட்டிருக்கும் கட்டளை. அதேபோல் மிச்சம் வைக்காமல், வீணாக்காமல் சாப்பிடுவது நெடுநாள் பழக்கம். போர்டிங் ஸ்கூலில் படித்ததால் சிறு வயதிலிருந்தே உணவை வீணாக்கக்கூடாது என்ற நல்லப் பழக்கம் இவரிடம் தொற்றிக் கொண்டது.
’உல்லாசம்’ படம் பார்த்தவர்களுக்கு, விக்ரமிற்கு கிடார் வாசிக்கத் தெரியுமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கும். அந்தளவிற்கு நேர்த்தியாக கிடாரில் அவரது விரல்கள் விளையாடி இருக்கும். உண்மையில் கிடார் வாசிப்பதில் விக்ரம் கில்லாடி. ஓய்வு நேரங்களில் கிடார் தான் இவரது கம்பானியன். இவர் கிடார் வாசிப்பதைப் பார்த்துவிட்டு, இவருக்காகவே சில காட்சிகளைச் சேர்த்தார்கள். இதேபோல் பென்சில் ஸ்கெட்சிங் பண்ணுவது விக்ரமிற்கு பிடித்த மற்றொரு பழக்கம். தனது ஸ்கெட்சிங் கலெக்ஷன் தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே காட்டி அவர்களுடைய கமெண்ட்களைக் கேட்பது இவருக்குப் பிடிக்கும்.
சீயான் வயது 50 ப்ளஸ். ஆனால் அவரது உடல் 40 மைனஸ் போல் இருக்கும். காரணம் கதாபாத்திரங்களுக்காக மட்டுமின்றி பொதுவாகவே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர். இதனால் தினமும் இரண்டு மணிநேரம் தீவிர உடற்பயிற்சி செய்வது பல வருட வழக்கம். ஜிம்மிற்கு போய் உடற்பயிற்சியை முடித்துவிட்டு, யோகா மற்றும் பிரணாயாமம் செய்வது அவரது சமீபகால பழக்கம். அவ்வப்போது நேரம் கிடைத்தால், நீச்சல் பயிற்சியையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
பெரும்பாலும் வீட்டில் இருப்பதையே விரும்புவதால் போரடிக்கக் கூடாது என்பதற்காக எல்லா வீட்டு வேலைகளையும் இழுத்துபோட்டுக் கொண்டு செய்வது விக்ரமின் வழக்கம். வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும் கூட பாத்ரூமை கூட கழுவுவதில் கூட அவரே சில சமயங்களில் முகம் கோணாமல் இறங்கி விடுவார்.
அவுட்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவும் சாதாரண மக்களுக்கோ, குழந்தைகளுக்கோ எதிர்பாராத பரிசுகளை அளிப்பது விக்ரமின் பழக்கம். வாட்ச், ஷர்ட், பொம்மைகள் என விதவிதமான பரிசுகளைக் கொடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பார். சீயான் சொல்லும் பரிசுகளை இங்கேயிருந்து வாங்கி அனுப்புவது அவரது மனைவி ஷைலஜாதான். இவரது மனைவி ஷைலஜா, போதைப் பொருட்களினால் அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க உதவும் கவுன்சிலிங் அளிப்பதில் சூப்பர் லேடி. இவர் பார்க்கில் நடைப்பயிற்சி போனால் அங்கிருக்கும் அனைவரும் இவரிடம் வந்து பேசிவிட்டு போவார்கள். அந்தளவிற்கு பந்தா எதுவும் இல்லாதவர்.