தண்ணீரைப் பார்த்து பயப்படும் மனிதராக விவேக் ஒரு படத்தில் நடித்திருப்பார். அப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறார் டெஸ்ஸா ஹேன்ஸன் – ஸ்மித். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வசிக்கும் இவருக்கு தண்ணீர் என்றாலே ஆகாது. தண்ணீர் என்றால் குடிளிக்கும் தண்ணீர் மட்டுமல்ல… குடிநீர். வியர்வை, கண்ணீர் என்று தண்ணீர் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஆகாது. அலர்ஜியாகிவிடும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டர் அலர்ஜி என்று சொல்லப்படும் அக்வாஜெனிக் யூர்டிகேரியா (Aquagenic urticaria
) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் டெஸ்ஸா. இந்த வினோதமான நோயால் தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட கடும் போராட்டம் நடத்தி வருகிறார்.
அது என்ன அக்வாஜெனிக் யூர்டிகேரியா நோய் என்கிறீர்களா?…
இந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் அலர்ஜி ஏற்படும். குளிப்பது, தண்ணீர் குடிப்பது, உடம்பிலிருந்து சுரக்கும் வியர்வை போன்ற இயல்பான விஷயங்கள்கூட அவர்களை கடுமையாக பாதிக்கும். உலகிலேயே 100-ல் இருந்து 200 பேர் வரைக்கும்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அபூர்வமான நோய் இது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெஸ்ஸா, வாரத்திற்கு இரண்டு முறைதான் குளிக்க முடியும். அதுவும் 5 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது. அதற்கு மேல் தண்ணீரில் இருந்தால் தோலில் எரிச்சல் ஏற்படும். மேலும், தண்ணீர் குடிக்கும்போது கூட தொண்டை, வயிறு போன்ற இடங்களில் எரிச்சல் ஏற்படும். பாலில் கொழுப்பு சத்து போன்று பல்வேறு சத்துக்கள் இருபத்தால் தண்ணீருக்கு பதில் அதைப் பருகலாம்.
டெஸ்ஸா ஹேன்சன் – ஸ்மித் தனது சிறு வயதில் மற்ற குழந்தைகள் போல் நீச்சல் அடித்து விளையாடியபோது, அவருக்கு உடலில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதை அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் குளித்துவிட்டு வரும்போது அவரது தோலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்து அவர் பயந்தார். சோப் அல்லது ஷாம்புவில் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார். சோப், ஷாம்பு ஆகியவற்றை மாற்றிய பிறகும் அலர்ஜி தொடர்ந்த்தால் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருக்கு தண்ணீர் அலர்ஜியாக இருப்பது தெரியவந்துள்ளது. அன்றிலிருந்து முடிந்தவரை தண்ணீரை தவிர்த்து வாழ்ந்து வருகிறார் டெஸ்ஸா.
இந்த நோயை குணப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு என்று டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம், இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை இன்னும் சரியாக கண்டறிய முடியவில்லை. உடம்பில் உருவாகும் ரசாயனங்களால் இது ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.
அவரது அம்மா டாக்டர் கரேன் ஹேன்சன்-ஸ்மித், “எனது மகளுக்கு இப்படி ஒரு நோய் இருந்த போதிலும் அவள் மனம் தளரவில்லை வேலை செய்துக் கொண்டே படித்தாள். மிகவும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவள் என் மகள்” என்று பெருமிதத்ததுடன் கூறுகிறார்.
டெஸ்ஸ்சா ஹேன்சன்-ஸ்மித்தின் மன உறுதி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சாதாரணமாக அனைவரும் செய்யமுடியும் செயல்களைக் கூட நம்மால் செய்ய முடியவில்லை என்று மனம் தளரவில்லை ஹேன்சன்-ஸ்மித்.