No menu items!

அதிகாலை அதிரடி கைது: உலக ஆசிரியர்கள் தினத்தில் சோகம்!

அதிகாலை அதிரடி கைது: உலக ஆசிரியர்கள் தினத்தில் சோகம்!

ஆசிரியர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும் அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாகவும் ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர்  5ஆம் தேதி உலக ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது…. ஆம், இன்று உலக ஆசிரியர்கள் தினம்.

ஆனால், சமூக வலைதளம் உட்பட எங்கேயும் ஒரு ஆசிரியர் தின வாழ்த்தைக்கூட பார்க்க முடியவில்லை. காரணம், இந்த தினத்தைக் கொண்டாடக்கூடிய மனநிலையில் தமிழ்நாட்டில் ஆசிரியர்களும் இன்று இல்லை என்பதுதான். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராடி வந்த ஆசிரியர்கள் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்!

ஏன் இந்த போராட்டம்?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1இல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

அதே டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுடன் கல்வித் துறை சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்னொரு பக்கம், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள்  கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்ட சூழலில், ஆசிரியர்கள் பணிக்கு வராததால் புதிய சிக்கல் உருவானது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி பல்வேறு துறைகளில் 1.6.2009-க்கு பிறகு ஆசிரியர் மற்றும் பிற பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சம்பள முரண்பாடு, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது. இதை ஆய்வுசெய்ய நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 மாதங்களில் அறிக்கை தயாரித்து அதன் முடிவை முதல்வரிடம் சமர்பிக்கும்.

ஆசிரியர் பணிக்கான உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிநியமனம் சார்ந்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, அவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இதுதவிர அரசுப் பள்ளிகளில் தற்போது 10,359 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஊதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்க முடிவாகியுள்ளது. கூடுதலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையான மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இதேபோல், பொது நுாலகத் துறையில் 3-ம் நிலை நூலகர் பணியில் 2,058 இடங்கள் உள்ளன. அதில் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊர்ப்புற நூலகர்கள் 1,530 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 446 பேருக்கு 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போதும் 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. எண்ணும் எழுத்தும் பயிற்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் சங்கங்களோ, “அமைச்சரின் அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, போராட்டம் தொடரும்” என அறிவித்தன.

இந்த நிலையில்தான், தங்களது போராட்டத்தை 8ஆவது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டடுள்ளனர்.

ஆசிரியர்கள் கைதுக்கு அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்று அறிவித்திருந்ததையும் அனைவரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதனை குறிப்பிடும், கல்விச் செயற்பாட்டாளரும் அரசுப் பள்ளி ஆசிரியையுமான சு. உமாமகேஸ்வரி, “2016 தேர்தலின் போதும், 2021 தேர்தலின் போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான்” என்கிறார்.

மேலும், “பகுதி நேர ஆசிரியர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா?

இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாகத்தான் முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது.

இம்முறை, போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார். மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது” என்கிறார்.

தொடர்ந்து, “பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது” என்கிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியையும் கவிஞருமான சுகிர்தராணியும், “கல்வி அமைச்சர்  ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு உயர்த்துகிறோம் என்று சொல்வது நிரந்தரத் தீர்வாகாது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்பான பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம் என்பதை நிறைவேற்றச் சொல்லித்தான் ஆசிரியர்கள் கேட்கிறார்கள். எனவே, அரசு ஆசிரியர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும். போராடும் உரிமை பறிக்கப்படக் கூடாது” என்கிறார்.

இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஆசிரியர் போராட்டத்தை அரசு கையாளும் முறை சரியல்ல; இது தேர்தல் முடிவை பாதிக்கலாம் என திமுகவினரே பலர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக ஆசிரியர்கள் தினத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்குப் பதிலாக, கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் எப்போது விடுதலையாவார்கள் என காத்திருக்கும் நிலை. சோகம்தான்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...