2023-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்த உலகக் கோப்பையில் நாம் தவறவிடக் கூடாத 5 போட்டிகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 போட்டிகளைப் பார்ப்போம்.
இந்தியா – பாகிஸ்தான் (அக்டோபர் 14)
இந்த உலகக் கோப்பையில் மட்டுமல்ல, கடந்த 1983-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த அனைத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிதான் பார்க்கவேண்டிய போட்டிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி, ஒரு போரைப் போல பரபரப்பாக இருப்பதே இதற்கு காரணம். இந்த முறை இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 7 போட்டிகளில் ஒன்றில்கூட இந்தியா தோற்றதில்லை. அனைத்து போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அந்த வரிசையில் 8-வது முறையாக வெற்றிபெறும் நோக்கில் இப்போது இந்திய வீர்ர்கள் களம் இறங்குகிறார்கள். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்யும் எண்ணதில் பாகிஸ்தான் இந்தியாவை சந்திக்கிறது.
விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பது இந்தியாவின் பலம் என்றால், ஷாஹின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஹஃசன் அலி, முகமது வாசிம் என அசுர வேகத்தில் பந்துவீசும் ஆற்றல்வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். இதில் இறுதி வெற்றி இந்திய பேட்ஸ்மேன்களுக்கா அல்லது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கா என்ற கேள்விக்கான பதிலை அக்டோபர் 14-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.
இங்கிலாந்து – நியூஸிலாந்து (அக்டோபர் 5)
அக்டோபர் 5-ம் தேதி நடக்கும் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நியூஸிலாந்து மோதுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே கடந்த முறை நடந்த இறுதி ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது நியூஸிலாந்து. அதற்கு பழிவாங்கும் எண்ணத்துடன் நியூஸிலாந்து அணி இப்போது இந்தியா வந்திருப்பதால், முதல் போட்டியே பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த உலகக் கோப்பையில் தங்கள் அணியை கரைசேர்த்த பென் ஸ்டோக்ஸ், இப்போது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று மீண்டும் ஒருநாள் போட்டியில் ஆட வந்திருப்பதால் உற்சாகத்துடன் இருக்கிறது இங்கிலாந்து அணி. அத்துடன் தாக்குதல் ஆட்டம் என்ற அந்த அணியின் புதிய பாணி ஆட்டமும் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த பாணி, இந்த உலகக் கோப்பையில் கைகொடுக்குமா என்பது முதல் போட்டியில் தெரிந்துவிடும்.
இந்தியாவில் இதுவரை நடந்த 2 பயிற்சி ஆட்டங்களிலும் 300 ரன்களுக்கு மேல் கடந்து தங்கள் வலிமையை பறைசாற்றி இருக்கிறது நியூஸிலாந்து அணி. அந்த அணிக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை கேன் வில்லியம்சனின் முட்டிதான். தனது முட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு முதல் போட்டியில் வில்லியம்சன் ஆடுவாரா என்பது இன்னும் சந்தேகமாக இருக்கிறது. அவர் மீண்டு வந்தால், அவருக்கு துணையாக மட்டைய சுழற்ற டெவன் கான்வாய், கிலென் பிலிப்ஸ் போன்ற வீர்ர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் விறுவிறுப்பான போட்டி ரசிகர்களை காத்திருக்கிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா (அக்டோபர் 8)
பாகிஸ்தானுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரியாக கருதப்படும் நாடு ஆஸ்திரேலியா. ஒவ்வொரு முறையும் இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டங்களில் அனல் பறப்பதே இதற்கு காரணம். அந்த அனலை இப்போதும் எதிர்பார்க்கலாம்.
கடந்த 1987-ம் ஆண்டு சென்னையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை 1 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்ற ஆட்டத்தை வயதான கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அதே போன்றதொரு பரபரப்பான ஆட்டத்தை இந்த இரு அணிகளும் மோதும் ஒவ்வொரு முறையும் பார்க்க முடிகிறது. அது இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று இந்த ஆண்டில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு இந்தியா பழிதீர்க்குமா என்று பார்ப்போம்.
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா (அக்டோபர் 13)
நவீன கிரிக்கெட்டின் டான்கள் என்று ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் சொல்லலாம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என 3 பிரிவுகளிலும் இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 3 முறைதான் வென்றுள்ளது என்றாலும், ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான சவாலைக் கொடுத்ததை கடந்த காலங்களில் பார்த்திருப்போம்.
அது இந்த உலகக் கோப்பையிலும் தொடரும் என்று சொல்லும் அளவுக்கு வலிமையான அணியை களம் இறக்கியுள்ளது தென் ஆப்பிரிக்கா. டி காக், கலாசன், டெம்பா பவுமா, வேண்டர் டுசான், டேவிட் மில்லர் என பலரும் பார்த்து பொறாமைப்படும் பேட்டிங் வரிசையைக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி, முக்கியமான போட்டிகளில் தோற்கும் ‘சோக்கர்ஸ்’ என்று தங்கள் மீது விழுந்துள்ள இமேஜைத் துடைக்கும் எண்ணத்துடன் இந்த உலக்க் கோப்பையில் கால் பதிக்கிறது. அவர்களால் அது சாத்தியமா என்று உரசிப் பார்க்கும் போட்டியாக இந்த போட்டி அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 7)
வங்கதேசமும் சரி, ஆப்கானிஸ்தானும் சரி கோப்பையை வெல்லும் அளவுக்கு வலிமையான அணியெல்லாம் இல்லை. இருந்தாலும் இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் இந்த உலக்க் கோப்பையில் முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே சமீப காலமாக கிரிக்கெட் மைதானங்களில் ஏற்பட்டுள்ள வன்மமே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம்.
இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, எந்த அணியையும் வீழ்த்தவல்ல ஒரு கருப்பு குதிரையாக வங்கதேசம் பார்க்கப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் வங்கதேச ஆடுகளங்களைப் போலவே இருக்கும் என்பது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் மற்றொரு விஷயம். இந்த சூழலில் தங்கள் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது வங்கதேசம்.
அதேநேரத்தில் ஜெயண்ட் கில்லர்ஸ் எனப் பெயரெடுத்த அணியான ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு அத்தனை எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்காது. அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ரஷித் கான், முகமது ரஃபி, நவீன் உல ஹக் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியதன் மூலம் இந்தியாவின் அனைத்து ஆடுகளங்களையும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அதனால் முதல் போட்டியிலேயே வங்கதேசத்துக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.