ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது, அதை அந்தப் பெண்களும் ஏற்றுக் கொள்வது என்பது இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிரானது.
விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீஸர், கலாசாரக் காவலர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளைவிட கலாசாரத்துக்குப் பெயர் போன நாடாக இந்தியா கருதப்படுகிறது. அதுவும், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது இந்தியர்களின் கலாசாரமாக உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீஸர், கலாசாரக் காவலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நயன்தாரா, சமந்தா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இந்தப் படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார், ரெளடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீஸர், கடந்த 11-ம் தேதி வெளியானது. இதில், ஒரே படுக்கையில் விஜய் சேதுபதி நடுவில் படுத்திருக்க, அவருக்கு இருபுறமும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் படுத்திருக்கும் காட்சியும் டீஸரில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒரு பாடல் காட்சியில் மூவரும் கட்டியணைத்துக் கொள்ளும் காட்சியும் உள்ளது.
இந்த டீஸர் வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த டீஸருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது, அதை அந்தப் பெண்களும் ஏற்றுக் கொள்வது என்பது இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிரானது என்று கருதும் கலாச்சாரக் காவலர்கள், அதை இன்றைய இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- சி.காவேரி மாணிக்கம்