இஸ்கான் அமைப்பு தங்கள் கோசாலைகளில் உள்ள பசு மாடுகளை கறிக்கடைக்காரர்களுக்கு அதிக அளவில் விற்பதாக பாஜக எம்பியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், பசு பாதுகாவலர்கள் அமைதியாக இருக்கிறார்கள். என்ன காரணம்?
முதலில் இஸ்கான் என்பது என்ன எனப் பார்ப்போம்…
இந்துக்கள் வழிபடும் தெய்வமான ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால், இந்து மத குரு ‘ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்’ என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், ‘சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு’ (The International Society for Krishna Consciousness), சுருக்கமாக இஸ்கான். கல்வி, சமயக் கல்வி, ஆன்மீகமத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடையது.
‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ எனவும் வழங்கப்படும் இஸ்கான் இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது. தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இஸ்கான் அமைப்பினர், உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்துகொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.
பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதற்காக இஸ்கான் அமைப்புக்கு, நிலங்களும் பல்வேறு பலன்களும் மத்திய அரசாலும் பாஜக ஆளும் பல மாநில அரசுகளாலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2018இல் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் மேற்பார்வையில் பள்ளிக் குழந்தைகளுக்கு தொடங்கப்பட்ட காலை உணவுத்திட்டம், அடுத்த ஒரே ஆண்டில் அட்சய பாத்திரம் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சத்துணவுத் திட்டம் உலகிலேயே பிரபலமானது. அந்த உணவுத் திட்டத்தை தமிழக அரசால் நடத்த முடியாதா? ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்? இதற்காக ஏன் டெண்டர் விடவில்லை? போன்ற கேள்விகள் எழுந்தன.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, மாணவர்களுக்கு கொடுக்கிற உணவில் பூண்டும் வெங்காயமும் சேர்க்க மாட்டோம் என்று அட்சயப் பாத்திரம் தெரிவித்தது பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த அட்சயப் பாத்திரம் அமைப்பு இஸ்கான் நிறுவனத்தின் ஒரு பகுதிதான்.
சரி, மேனகா காந்தி குற்றச்சாட்டுக்கு வருவோம்…
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள இஸ்கானின் கோசாலைக்கு சமீபத்தில் சென்றிருந்த மேனகா காந்தி அது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் மிகப் பெரிய ஏமாற்று நிறுவனமாக இஸ்கான் உள்ளது. பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதன் மூலம் இந்த அமைப்பு, பரந்த நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள இஸ்கானின் கோசாலையில் பால் தராத பசு மாடு ஒன்றுகூட இல்லை. அதேபோல், ஒரு கன்றுக்குட்டிகூட இல்லை. அனைத்தையும் அவர்கள் விற்றுவிட்டார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம். இஸ்கான் தனது மாடுகளையெல்லாம் கறிக் கடைக்காரர்களுக்கு விற்கிறது. அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் இவ்வாறு செய்வதில்லை.
இஸ்கான் அமைப்பினர், சாலைகளில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். அதோடு, தங்கள் வாழ்நாள் முழுவதும் பாலை நம்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்த அளவுக்கு கால்நடைகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு யாரும் விற்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும், ராஜீவ்காந்தியின் சகோதரருமான மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சரும்கூட. தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படும் மேனகா காந்தி தற்போது பாஜகவில் இருக்கிறார். பாஜக மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த மேனகா காந்தியே இஸ்கான் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளதான் இது பரவலாக விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இஸ்கான் அமைப்பு மேனகா காந்தி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பசு பாதுகாப்பில் இஸ்கான் ஒரு முன்னோடி அமைப்பு. உலகின் பல பகுதிகளிலும் மாட்டிறைச்சி வழக்கமான உணவாக உள்ள நிலையில், மாடுகளை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பாக இஸ்கான் திகழ்கிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை இஸ்கான் நிர்வகித்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான புனித பசுக்களும் எருதுகளும் தனிப்பட்ட அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மாடுகளின் வாழ்நாள் முழுவதும் இத்தகைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட மாடுகள், காயமடைந்த மாடுகள், அடிமாடுகள் ஆகியவை இஸ்கானின் கோசாலைகளில் பாதுகாக்கப்படுகின்றன. சமீப காலமாக பசு பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இஸ்கான் வழங்கி வருகிறது. பசுக்களின் புனித தன்மையை உணர்ந்து, அவற்றை வழிபடும் நமது கலாச்சாரத்திற்கு புத்துயிரூட்டும் பணிகளை இஸ்கான் மேற்கொள்கிறது. மாடுகள் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்படுவதற்காக அரசின் பாராட்டுக்களை இஸ்கான் பெற்றுள்ளது.
விலங்குகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட பிரபலமான நபர் மேனகா காந்தி. இஸ்கான் அமைப்பின் நலம் விரும்பியும்கூட. அவரது அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்கானின் கோசாலைகளில் மாடுகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது தொடர்பான ஆவணங்களை நாங்கள் வெளியிடுகிறோம். உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள அவை உதவும்” என தெரிவித்துள்ளார்.
இவை ஒரு பக்கம் இருக்க, மாட்டு கறி வைத்திருந்ததாக கூறி உத்திர பிரதேச ஏழை சாதாரண முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அவர்களை அடித்தே கொன்ற பசு பாதுகாவலர்கள், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்கதள் உட்பட யாரும் இதுவரை மேனகா காந்தி குற்றச்சாட்டு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர், “ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் செய்தது போல் PETA இஸ்கான் மீது வழக்கு போடுமா? ‘பசுக் காவலர்கள்’ இஸ்கானை முற்றுகையிடுவார்களா? பசுவதைத் தடுப்பினைக் கொள்கையாகச் சொல்லிக் கொள்ளும் அரசு இஸ்கானைத் தடை செய்யுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.